Sunday, 31 May 2026

எனது ஆசிரியர்கள் 2

எனது எழுத்தார்வம் காரணமாக தொடர்ந்து ஏதாவது ஒரு தலைப்பில் எழுத ஆசை வந்தது. அதன் காரணமாக எனது ஆசிரியர்கள் குறித்து எழுதுகிறேன். 

ஏற்கனவே பள்ளி ஆசிரியர் குறித்து எழுதிவிட்ட நிலையில் 2வதாக கல்லூரி ஆசிரியர். கல்லூரி ஆசிரியர்களில் இவரை ஏன் முதலில் எழுத வேண்டும்? தனிப்பட்ட காரணங்கள் எதுவும் இல்லை. சாதாரணமான தேர்வு தான். 

விரிவுரையாளராக இருந்து தற்போது கடல்சார் பொறியியல் துறை தலைவராக இருக்கும் ஜான் லியோன் சார் தான் அவர். எனது முதல் செமஸ்டரின் போது எனது அறைத்தோழன் சரவணன் மற்றும் பக்கத்து அறைத்தோழன் சுந்தர் ஜெகன் இருவரும் பி பிரிவு. பி பிரிவுக்கு இஞ்சினியரிங் மெக்கானிக்ஸ் வகுப்பெடுத்தவர் ஜான் லியோன். முதல் செமஸ்டரில் ஜான் லியோன் குறித்து விடுதி அறையில் பேச்சுகள் நடக்கும். 

சுந்தர் ஜெகன் பொதுவாக மற்றவர்களின் உடை நேர்த்தி மற்றும் சட்டைகளின் நிறத்தை ரசித்து அதே நிறத்தில் வாங்க வேண்டும் என்று நினைப்பவன். ஜான் லியோன் சார் உடை நேர்த்தியாக அணிபவர். 

ஏதோ ஒரு தேர்வின் போது தேர்வு அறையில் அவரது அடையாள அட்டை மூலமாக அவர் தான் ஜான் லியோன் எனத் தெரிந்து கொண்டேன். எங்களுக்கு அவர் வகுப்பு எடுத்தது 4வது செமஸ்டரில் மட்டுமே. 

வகுப்பு அறையில் நுழையும் போதே பாடத்தை ஆரம்பித்துவிடுவார். பாடத்தைத் தாண்டி எதுவும் பேசமாட்டார். ஆனால் யாருக்கும் கவனம் சிதறாமல் கவனிக்க வைத்துவிடுவார். 50 நிமிடங்கள் போவதே தெரியாது என்பது அவரது வகுப்பின் சிறப்பு. 

ஹோம் வொர்க் கொடுப்பார், சில நேரங்களில் ஹோம் வொர்க் பண்ணியிருக்க மாட்டீங்க என்று அடுத்த நாளில் அந்த ஹோம் ஒர்க்கை விளக்குவார். ஆங்கிலத்தில் தான் வகுப்பெடுப்பார். தமிழில் எப்போதாவது பேசுவார், அது மார்த்தாண்டம் தமிழ். 

எங்களுக்கு ஸ்டாப் அட்வைசராக இருந்தார். விடுப்பு எடுத்தால் அவரிடம் தான் விண்ணப்பம் கொடுக்க வேண்டும். ஒரு முறை என்னை கூப்பிட்டுவிட்டார். ஸ்டாப் ரூம்க்கு சென்று பார்த்தேன். குறிப்பிட்ட தேதியை சொல்லி அன்று ஹால்ப் டே கட் அடிச்சியா என்றார். இல்ல சார் ஹால்ப் டே லீவு போட்டேன் என்றேன். எல்லாம் ஒண்ணு தான் லீவு பார்ம் கொண்டு வா என்றார். அதற்குப் பிறகு நானும் சாகுலும் சீரான இடைவெளியில் லீவ் பார்ம் கொடுத்து விடுவோம். 

ஒருமுறை என்எஸ்எஸ்க்கு சென்றதால் என்எஸ்எஸ் ஆசிரியர் அழகேசனிடம் லீவு பார்ம்ல் கையெழுத்து வாங்கி கொடுத்தோம். அழகேசன் சார் பக்கத்து கேபினில் இருப்பவர். யோவ், "நீரா வே சைன் போட்டு கொடுத்தீரு" என்று விளக்கம் கேட்டு கொண்டார். 

4வது செமஸ்டருக்குப் பிறகு அவர் எங்களுக்கு வகுப்பு எடுத்தது இல்லை. எங்களோடு டூர் வந்ததும் இல்லை. ஆனாலும் அவர் மேல் எப்போதும் மரியாதை உண்டு. 

மெக்கானிக் இஞ்சினியரிங்கில் புரியும் படியாக, அதே சமயம் சலிப்பு தட்டாமல் வகுப்பு எடுப்பவர்களில் ஜான் லியோனும் ஒருவர். ஆடை நேர்த்தி அவரை ஒரு ஹீரோ போல காட்டும். 



Saturday, 28 March 2026

நானும் மலையாளிகளும்

மலையாளிகளோடு முதல் பழக்கம் எப்போது ஏற்பட்டது. கல்லூரி தொடங்குவதற்கு முந்தைய நாள் விடுதியில் எனக்கு வழங்கப்பட்ட அறையில் மற்ற இரண்டு பேரும் மலையாளிகள். சரவணன் மற்றும் விகாஷ் இருவரும் செல்வந்தர்கள். 
எங்கள் குடும்ப தொழில் பற்றி சரவணன் அப்பா கேட்டபோது விவசாயம் என்றேன். அது சரவணனுக்குப் புரியவில்லை. அவன் அப்பா க்ருஷி என்று மொழிபெயர்த்துச் சொன்னார். விகாஷ்க்குச் சுத்தமாகத் தமிழ் தெரியாது. 

இவர்களோடு தான் பண்ணையடிக்க வேண்டுமா என்று நினைத்தேன். ஆனால் சரவணனுக்கு நல்லா தமிழ் தெரிந்து இருந்தது. மிக குறுகிய நாட்களில் தமிழ் கெட்ட வார்த்தைகள் கூடகற்றுக்கொண்டான்.

கல்லூரியில் முதல் நாளில் துறைத்தலைவர் பேசிய பிறகு, எல்லாத் துறைகளும் கலந்த கலவையாக வகுப்புகள் பிரித்தனர். அதில் எனது வகுப்பிற்கு வந்தது, சரவணனின் நண்பன் ராகேஷ். அவனை ராக்கேஷ் என்று கூப்பிட்டால் "இல்லா" ராகேஷ் என்று திருத்தம் செய்வான். இடைவேளையில் என்ன பேச என்று தெரியாது. மலையை முட்டி நிற்கும் மேகங்களைப் பார்த்து பியூட்டிஃபுல் ஸ்கை என்றான் ராகேஷ், பதட்டமான அந்த நாட்களில் அழகியலை ரசிக்க மனமின்றி உம் என்றேன். 

அறைக்கு வந்தால் சரவணன் ஏதாவது பேசுவான், அரட்டை அடிக்கலாம். விகாஷ் இரவு அறையில் நீண்ட நேரம் படித்துக் கொண்டிருப்பான். அவன் ரொம்பவே இளகிய மனதுடையவன். செடியில் இருந்து கை தவறி இலைகளைப் பறித்தால் கூட கண்களில் ஒத்திவிட்டு தான் கீழே போடுவான். கல்லூரியில் சேர்ந்த 2வது வாரம் வெள்ளிக்கிழமை சுதந்திர தினம் வர மூன்று நாட்கள் விடுமுறையில் வீட்டுக்குப் போன விகாஷ் திரும்ப விடுதிக்கு வரவே இல்லை. தினமும் வீட்டில் இருந்தே (திருவனந்தபுரத்திலிருந்து) வர ஆரம்பித்தான். 

சரவணன் எங்களோடு சேர்ந்து பச்சை தமிழனாகவே மாற ஆரம்பித்தான். அப்போது தான் எங்கள் அறைக்குப் புது வரவாக வந்தான் ஆஷிக். ஆஷிக்கும் தமிழ் நன்றாக பேசும் மலையாளி. எங்கள் அறை தரை தளத்தில் இருந்ததால் பக்கெட் வைப்பது, டீ கப் வைப்பது என பலரும் வருவார்கள். சரவணன் மலையாளி என்பதால் ராகேஷ், கெவின், ஸ்ரீராஜ் மூவரும் பெரும்பாலும் ஒன்றாக வருவார்கள். இவர்கள் வருவது சரவணனுக்குத் தொல்லை ஏனென்றால் விக்ஸ் டப்பாவை வாங்கி வழித்து தேய்த்து விடுவார்கள். 

சரவணனுக்கு விக்ஸ் வாசனை இல்லாமல் தூக்கம் வராது. ஆஷிக் எங்கள் அறை தான் என்றாலும் நடுராத்திரியில் வருவான் அல்லது வேறு எந்த அறையிலாவது தூங்கி விடுவான். 

வகுப்பில் தமிழ் வழி மற்றும் மலையாள வழி படித்தவர்களை முதல் பெஞ்சில் உட்கார வைத்தார்கள். எனது பக்கத்தில் வந்தது ஜான் ராய், அவனும் மெக்கானிக்கல் என்பது ஒருவகையில் சந்தோஷம் என்றாலும் அவனுக்கும் ஒன்றும் தெரியாது என்பது வகுப்பை சமாளிப்பதில் கடினமாக இருந்தது. பின்னாட்களில் "கூதர" என்று பெயர் பெற்ற ஜான் ராய் நன்றாக பாடுவான். "சிலம்பொலி காற்றே என்ன சிட்டி அடிச்சாட்டே" இந்த பாடலை அவன் தான் பாடி காட்டினான். 

(சிலம்பொலி காற்றே தான் இதை எழுதுவதற்கு காரணம்) இதை ரூமில் சொல்ல, பக்கத்து ரூம் தீபன், ஜான் ராயை ஏல, சிலம்பொலி காற்றே என்று தான் கூப்பிடுவான். ஜான் ராய் கல்லூரி மேடையில் பாடிய "இன்னலே எந்தன் நெஞ்சிலே" எனக்குத் தெரிந்த மலையாளப் பாடல்களில் ஒன்று. 

அடுத்த மலையாளிகள் பிரசாந்த் மற்றும் ஸ்ரீஜித், இவர்கள் இருவரும் ஒன்றாகவே சுற்றுவார்கள். எங்களைப் போல சனி, ஞாயிறு லீவுக்கு ஊருக்கு போகாமல் விடுதியிலே இருப்பவர்கள் அதனால் சிறிது பழக்கம். 

எங்கள் வகுப்பு மலையாளிகளில் அர்ஜூன் மற்றும் விஷ்ணுவிடம் பெரிய அளவில் பேசியது கூட கிடையாது. ராகுல், ரூபேஸ் இருவரும் சரவணின் வகுப்பு என்பதால் ஏதாவது சரவணன் சொல்வான். ரூபேஸ் பேசும் மலையாளம் சுத்தமாக புரியாது. 'மைனா மண்டயன்' என்று கூப்பிட்டால் சிரித்துக் கொள்வான் ரூபேஸ். பேப்பரில் எதுவும் எழுதமாலே கட்டிக் கொடுத்து விட்டு வந்து, நாகராஜன் சார் அதை வாசித்து காட்டச் சொல்ல திரு திருவென முழித்து சம்பவம் செய்தவன் ரூபேஸ். 



"கல் மாங்கா" என்று அழைக்கப்படும் ஷ்யாமும் எங்களோட நன்றாக பேசுவான். என்ன, அவன் பேசுவது புரியாது. அவனுக்கு கல் மாங்கா என்று பெயர் வைத்த தர்மேந்திரனுக்கு பின்னாட்களில் கல் என தொடங்கும் பெயரே வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

பிரகாஷ்க்கு தமிழ் முகம், லேப் வகுப்புகளில் பேசிக் கொள்வோம். தேர்வுக்கு முந்தைய நாட்களில் விடுதியில் நடக்கும் விரைவு படிப்புகளில் பிரகாஷ் இருப்பான். நவீன் எனக்கு முந்தைய நம்பர் என்பதால் லேப் வகுப்பில் ஒன்றாகச் சேர்ந்து ஏதாவது உருட்டுவது வழக்கம். 

ஆஷிக்கிற்கு வருவோம், ஆஷிக் படிப்பைத் தவிர எல்லாவற்றையும் சிறப்பாக செய்வான். கல்லூரி கிரிக்கெட் லீக் அவனது ஏற்பாடு தான். இரவு இரண்டு மணி வரை உட்கார்ந்து ரொம்ப மெனக்கெட்டு காதல் கடிதம் எழுதியவன். ஆள் குண்டாக இருந்தாலும் செயலில் பயந்தவன். பல்ப் ஹோல்டரில் நாணயம் வைத்து பல்ப்பை மாட்டி ஸ்விட்ச் போட்டால் பியூஸ் அடிக்கும் என சோதிக்க முடிவு செய்தோம். 

ஸ்விட்ச் போட பயந்து ஆஷிக் பின்வாங்க, ஸ்விட்ச் போட்டது சரவணன். நான் வழக்கம் போல வேடிக்கை மட்டுமே பார்த்தேன். பிறிதொரு நாளில் இளம் விஞ்ஞானிகள் கூட்டத்திற்கு வந்த பள்ளி மாணவர்களை எங்கள் அறைக்கு அழைத்துப் பேசினோம். ஒரு பையன் நன்றாக வரைவேன் என்றான். ஆஷிக் அந்தப் பையனிடம் வயலில் அறுவடை செய்யும் பெண்ணைப் போன்ற ஓவியம் வரையச் சொன்னான். 

அந்தப் பையனும் வரையத் தொடங்கினான். வரையும் போதே மீசை வார்டன் பற்றி அந்தப் பையன் கேட்க,  ஆஷிக், மீசை அங்க தான் உருட்டிட்டு இருப்பான். எங்க ரூம் பக்கம் வந்தா ஐயா, ஐயானு கைய கட்டி நிப்பான் சின்னப்பய என்று சொல்லி வைத்தான். படம் முடியும் நேரத்தில் வந்த மீசை, பொங்கல் வைத்தார், ஆஷிக் போட்ட படத்தையும் முடித்து வைத்தார். 

கல்லூரி முடித்து சென்னை சென்ற பிறகு எனது மேலாளர் உமா சங்கர் தெலுங்கர். ஆனால் எலக்ட்ரிக்கல் இன்சார்ஜ் சூரஜ் மலையாளி. அடா, அடா என்று அவர் பேசும் மலையாளம் நன்றாக இருக்கும். யேசுதாஸ் பாடிய பாடல் என்று 'பச்சைக்கிளிகள் தோளோடு' பாட்டை விரும்பிக் கேட்பார், பாடவும் செய்வார். 

தூசானில் எங்கள் துறைத்தலைவர் அனில் குமார் மலையாளி தான். யாரையும் கடிந்து பேசாதவர். அவர் ஒரு முறை மட்டுமே அந்த எட்டு ஆண்டுகளில் கோபப்பட்டார். அவர் எப்போதாவது தமிழ் பேசுவார். பேச வைக்க சிலர் உண்டு, அவர் தமிழில் ஏதாவது வார்த்தை பேசினால் நானும், பார்ட்னர் ராஜாவும் சிரித்துக் கொள்வோம். ஏனென்றால் அவரை தமிழில் பேச வைக்க வேண்டும் என்பதே எங்கள் இலக்காக இருந்தது. 

கடைசியாக அஜித், அஜித் எனது சுமைகளை வாங்கி கொண்டு, நிறைய வாங்கியவர். ஆயில் சிஸ்டம் அஜித் எனும் அளவுக்கு புகழ் பெற்றாலும் அஜித்தை மலையாளி என்று ஏற்றுக்கொள்ளவே முடியாது. 

Thursday, 19 March 2026

திருநெல்வேலியில் பொதுப் போக்குவரத்து

திருநெல்வேலியில் மக்கள் பொதுப் போக்குவரத்து சாதனங்களைக் குறைத்து விட்டார்களா? 

திருநெல்வேலியில் பரவலாக மக்கள் இருசக்கர வாகனம் மற்றும் நான்கு சக்கர வாகனங்களை பயன்படுத்துவதால் பொதுப் போக்குவரத்தான பேருந்துகளை பயன்படுத்துவது வெகுவாக குறைந்து விட்டது. 

தனியார் பேருந்துகளின் எண்ணிக்கை வெகுவாக குறைந்து விட்டது. முதல் காரணம் மக்களின் சொந்த வாகன பயன்பாடு, இரண்டாவது மகளிருக்கான நகர்புற இலவச பேருந்துகள், மூன்றாவது அரசு கட்டணத்தை உயர்த்த வில்லை. (இது குறித்து தனியார் பேருந்து உரிமையாளர்கள் வழக்கு தொடர்ந்துள்ளனர்). 



நிறைய கிராமங்களுக்கு சென்ற தனியார் பேருந்துகள் நிறுத்தப்பட்டுவிட்டன. எந்த பேருந்துகள் நிறுத்தப்பட்டுவிட்டன என பார்ப்போம். 

1. கீழநந்தம் மேலூர் வழியாக மணப்படைவீடு சென்ற பேருந்துகள். 

2. என்ஜிஓ காலனி வழியாக கோவைகுளம் சென்ற பேருந்து புதிய பேருந்து நிலையம் வரை செல்கிறது. 

3. ஆழ்வார்கற்குளம் பேருந்து வல்லநாடு வரை மட்டுமே செல்கிறது. கொங்கராயங்குறிச்சி பேருந்து பற்றித் தெரியவில்லை. 

4. சங்கரன்கோவில் சாலை மற்றும் மதுரை சாலையை இணைத்த ஒரே பேருந்தான மதவக்குறிச்சி / மானூர் பேருந்து, ஹைகிரவுண்ட் மட்டுமே செல்கிறது. 

5. நரசிங்கநல்லூர் / கருங்காடு பேருந்து சுத்தமல்லி விலக்கு வரை மட்டுமே செல்கிறது. 

6. பாப்பாக்குடி பேருந்து முக்கூடல் வரை செல்கிறது. சேரன்மகாதேவி பேருந்துகள் பெரும்பாலும் சுத்தமல்லி விலக்கு வரை செல்கின்றன. 

7. டவுண் - மேலப்பாளையம், குறுக்குத்துறை வழிப் பேருந்து, நாரணம்மாள்புரம் பேருந்து, கோபாலசமுத்திரம் பேருந்து நிறுத்தப்பட்டுவிட்டன. 

8. வெள்ளாளன்குளம் பேருந்து ராணி அண்ணா கல்லூரி வரை செல்லலாம். சங்கர் நகர் வரை சென்ற பேருந்துகள் நிறைய நிறுத்தப்பட்டுவிட்டன. 

தனியார் பேருந்துகளுக்கு இந்த நிலை என்றால் அரசுப் பேருந்துகள் நிலை. அரசுப் பேருந்துகள் கிராமங்களுக்கு இயக்கப்படுகின்றன. சில கிராமங்களில் ஞாயிறு விடுப்பு, சில நடைகள் நிறுத்தமும் உள்ளது. நகர்புறத்தில் என்ஜிஓ காலனிக்கு 5பி, 5ஈ, 5எச், 5ஜி, 5எல், 5எஸ்/வி என இயக்கப்பட்ட பேருந்துகள் இப்போது வெகுவாகக் குறைந்துள்ளது. 

அதற்காக அரசுப் பேருந்துகளின் தடம் எண் மாற்றப்பட்டுள்ளது. தாழையூத்தில் இருந்து ராஜவில்லிபுரம் மார்க்கமாக செல்லும் பேருந்துகள் தடம் எண் 9. அந்தப் பேருந்து நிறுத்தம் கூட 9 ஸ்டாப் என்பது தான். ஆனால் இப்போது தாழையூத்து மார்க்கமாக செல்லும் அனைத்து பேருந்துகளின் தடம் எண் 9 (33 தென்கலம் மார்க்கம், 35 கங்கை கொண்டான் மார்க்கம் என்பது கிடையாது). அதே போல் மானூர் மார்க்கமாக செல்லும் பேருந்துகள் அனைத்தின் தடம் எண் 4.

ஜங்ஷன் பேருந்து நிலையம் கட்ட தாமதம் ஆனதால் மக்கள் ஜங்ஷன் பயன்பாட்டை மறந்தே விட்டனர். ரயில் நிலையம் மட்டுமே ஜங்ஷனாக இருந்தது. கட்டிய பேருந்து நிலையமும், பேருந்து நிலையம் போல இல்லாமல் பேருந்து நிறுத்தம் போலவே உள்ளது. 

ஜங்ஷன் இப்படி என்றால் பாளை பேருந்து நிலையத்தின் நிலைமை பரிதாபம். பாளை பேருந்து நிலையம் கட்டும் பணி நடைபெற்றதால் அனைத்து ஹைகிரவுண்ட் பேருந்துகளும் மார்க்கட் வழியில் மாற்றி விடப்பட்டன. தனியார் பேருந்துகளுக்கு சமாதானபுரத்தில் ஓரளவு ஏறக்கூடிய ஆட்கள் இருந்ததால் வசதியாகப் போனது. பாளை பேருந்து நிலையம் திறந்த பிறகும் பேருந்துகள் மார்க்கட் வழியிலே செல்கின்றன. போக்குவரத்துத் துறை அனுமதி அளித்துள்ளதா அல்லது தகுந்த முறையில் "கவனித்து" இயக்குகிறார்களா என்று தெரியவில்லை. 

சாராள் டக்கர், கான்வென்ட் பள்ளிகளுக்குச் செல்ல பேருந்துகள் போதுமான அளவு இல்லை. சவேரியார் பள்ளி மற்றும் கல்லூரிக்குச் செல்ல பேருந்துகளே இல்லை என்பது தான் இன்றைய நிலை. புதிய பேருந்து நிலையம் செல்லும் பேருந்துகள் சில பாளை பேருந்து நிலையம் வழியாகச் செல்கிறது. ஆனால் இவை ஜங்ஷன் பேருந்து நிலையத்திற்குள் வருவது இல்லை. 

ஜங்ஷன் பேருந்து நிலையம் திறந்த பிறகும் ஏன் ரயில் நிலையத்திற்குப் பேருந்து இயக்கப்படுகிறது என்பது புரியாத புதிர். 

சொந்த வாகனப் பயன்பாடு மற்றும் பேருந்து இயக்கத்தில் உள்ள குழப்பங்கள் திருநெல்வேலி மக்களைப் பேருந்து பயன்பாட்டில் இருந்து ஒதுக்கி வைத்துள்ளது. அதே சமயம் வெளியூரில் இருந்து வருபவர்களுக்கு இது மாபெரும் தலைவலி. 




Friday, 20 February 2026

காஃபி வித் கபிலர்

நர்சிம் அண்ணாவின் இந்தப் புத்தகம் குறித்து நிறைய பேர் நிறைய சொல்லி விட்டனர். ஏற்கனவே இணையத்தில் சில கட்டுரைகள் வாசித்து இருந்தேன். புத்தகமாக வாசிக்கும் அனுபவம் தனிதானே.



சங்க இலக்கியங்கள் குறித்து எதிலாவது வாசித்தால், நாமும் சங்க இலக்கியங்களை வாசிக்கலாமே என்று தோன்றும். ஆனால் எப்படி தொடங்குவது. அதற்கான திறவுகோலைத் தந்திருக்கிறது இந்தக் காஃபி வித் கபிலர் புத்தகம். 

பொதுவாக சர்ச்களில் பைபிளின் சில வசனங்களை வாசித்து விட்டு, அதற்கான விளக்கத்தை (பிரசங்கம்) தருவார்கள். அதற்கு நேர் எதிரே உள்ளது இந்தப் புத்தகம் ஒரு விளக்கம் அல்லது சம்பவத்தை சொல்லிவிட்டு அதை ஒரு சங்கப் பாடலோடு இணைத்திருக்கிறார் ஆசிரியர். 

தமிழ் இலக்கிய வளர்ச்சி இது நிச்சயத் தேவை. இதை பார்த்து, வாசித்து இன்னும் நிறைய பேர் இது போன்ற எழுத்துகளை முன்னெடுத்தால் இலக்கிய வளர்ச்சி செழுமையாக இருக்கும். 

சங்கப் பாடல்களின் ஏதோ ஒரு சொல் அல்லது ஒரு வரி அவரை கவர அதை வைத்து அய்யனாரை வேண்டும் அக்கா, வியாழக்கிழமை விகடன், டீ குடிக்கும் போதே கலைத்து விட்ட காதல் ஜோடிகள் என எளிதாக எவரையும் ஈர்க்கும் விளக்கங்களால் ஈர்க்கிறார். 

இதின் தொடர்ச்சியான கட்டுரைகளை எழுதத் தொடங்கிவிட்டார் என்பது நெல்லிக்காய் தின்ற பின் குடிக்கும் தண்ணீரை போன்றது. (இந்த உவமை அவரிடம் சுட்டது தான்). 

Wednesday, 18 February 2026

தமிழ்ப் புத்தாண்டு

தமிழ்ப் புத்தாண்டு நிறைய அரசியல், சர்ச்சைகள் நிலவி வருகிறது. அது குறித்த எனது பார்வை. 

தமிழ்ப் புத்தாண்டு தற்போது ஏப்ரல் மாதத்தில் அதாவது சித்திரை 1ல் இருக்கிறது. ஒரு சாரார் சித்திரை 1 தமிழ்ப் புத்தாண்டு இல்லை. தை 1 தான் தமிழ்ப் புத்தாண்டு என்று சொல்கிறார்கள். 

தை 1 அறுவடை திருநாள், சித்திரை 1 புத்தாண்டு என்பது மற்றொரு சாராரின் வாதம். 

சரி தமிழ்ப் புத்தாண்டு எப்போது தான்? சங்க கால நூல்களை முறையாக படித்தவர்கள் சொல்வது. சங்க நூல்களில் புத்தாண்டு குறித்து எந்த தகவல்களும் இல்லை என்பது. 

அதே சமயம் ஆதித்தமிழன் அறிவு வளர்ச்சி பெற்றிருந்தவன் என்பது எல்லாருக்கும் தெரிந்ததே. கீழடியும் அதை நிரூபித்தது. தமிழர்கள் நிச்சயம் அறிவுபூர்வமாக புத்தாண்டை நிர்ணயித்திருப்பார்கள் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. 

உலகில் பிற நாடுகளில் பாரம்பரிய புத்தாண்டுகள் எப்போது என்று பார்க்கலாம். பிப்ரவரியில் புத்தாண்டு வடகிழக்கு ஆசிய நாடுகளில் (சைனீஸ்), இந்தியா, பர்மாவில் ஏப்ரலில், எத்தியோப்பியாவில் செப்டம்பரில், யூதர்களின் புத்தாண்டு செப்டம்பர், அக்டோபரில், ஸ்காட்லாந்து புத்தாண்டு டிசம்பர் 31 - ஜனவரி 1. இதில் சில நாடுகளின் புத்தாண்டுகளை நான் எடுத்துக் கொள்ளவில்லை. 

உற்று நோக்கினால் மேற்கூறிய புத்தாண்டுகள் எல்லாமே சூரிய சுழற்சி அடிப்படையில் இருக்கும். 

தை 1 தமிழ்ப் புத்தாண்டாக என்ன காரணம்? பாரதிதாசன் சொல்லி இருக்கிறார். அண்ணா சொல்லி இருக்கிறார் என்பது. 60 ஆண்டுகள் என்பது ஆரியத்திணிப்பு. 60 ஆண்டுகள் என்பது ஆரியத்திணிப்பு அதில் சந்தேகமே இல்லை. அதை தமிழர்கள் ஏற்றுக்கொள்வதும் இல்லை. ஓரளவு தமிழார்வம் உள்ள ஒருவரிடம் கேளுங்கள் இப்போது என்ன ஆண்டு என்று. விஸ்வாசமா? நேர் கொண்ட பார்வையா? சரியாகத் தெரியவில்லை என பதில் வரும். 

மெட்ராஸ் மாகாணம் தமிழ்நாடு என மாறியது, இந்த மாற்றம் அலகாபாத் - பிரயாக்ராஜ் போல சாதாரணமாக மாறிவிடவில்லை. போராடி தான் மாற்றம் வந்தது. தமிழ்நாடு என்று மாறிய போதே தமிழ்ப் புத்தாண்டை ஏன் தைக்கு மாற்றவில்லை என்பது பெரிய கேள்வி. 

தை தமிழ்ப் புத்தாண்டுக்கு காரணமாக சொல்லப்படுவது திருவள்ளுவர் ஆண்டு தமிழறிஞர்களால் தொடங்கப்பட்டது. தமிழுக்கு தனி ஆண்டு வேண்டும் என்பதால் திருவள்ளுவர் ஆண்டு தொடங்கப்பட்டது. திருவள்ளுவர் தினம் தை 1 அல்ல தை 2.

ஆனால் அதுவும் ஜூன் 2ல் இருந்து தை 2க்கு மாற்றப்பட்டது. இப்போது தமிழ்ப் புத்தாண்டு சித்திரை 1 இல்லை என்பது ஒரு குறிப்பிட்ட கட்சினர் ஆர்ய எதிர்ப்பு என்ற பெயரில் செய்வது. அதே சமயம் அவர்களின் சன் டிவி தொடங்கப்பட்டது எப்போது தெரியுமா? சித்திரை 1ல்.

இங்கே திராவிடம் என்ற சொல்லாடலே ஆரிய எதிர்ப்பிற்காக. அதே சமயம் கீழடிக்குப் பிறகு திராவிடம் என்ற சொல்லை முன்னிருத்த வேண்டிய அவசியமில்லை. திராவிட குடும்பத்தில் மற்ற மொழியினர் தங்களது மொழியினை தூக்கி பிடிக்கும் போது தமிழன் மட்டும் ஏன் திராவிடம் என தூக்கிப்பிடிக்க வேண்டும்?. 


Monday, 9 February 2026

மகளிர் விடியல் பேருந்து

ஊருணியில் இருந்து

தீர்த்தம் எடுத்து வந்தாச்சு. 

வில்லிசை நிறுத்தப்பட்டு

மேளமும் மணியும்

ஒலிக்கிறது. 

சாமி அருள் யாருக்கும்

வரவில்லை. 

மேளத்தின் வேகத்தைக் 

கூட்டச் சொல்கிறார்

ஊர் பெருசு. 

ஊருணி கரையில் 

வேலை செய்யும்

ஜேசிபியை வேடிக்கை

பார்ததபடி இருக்கிறார்

காவல் தெய்வம்!!! 

****

வேலைக்கு செல்லும்

ஜெயந்தி வேக வேகமாக

கிளம்பினாள். 

பேருந்து நிறுத்தத்தை 

நெருங்கும் முன்

பேருந்து நகரத்

தொடங்கிவிட்டது. 

கை காட்டினாள், 

அடுத்த பேருந்தில்

வரச்சொல்லி 

அடுத்த கியரை

மாற்றினார் ஓட்டுனர். 

பேருந்தின் முகப்பில்

மகளிர் விடியல்

பேருந்து!!! 

****

 ஊருக்கு வெளியே

பரந்த இடத்தில் உள்ளது

கால்நடை மருத்துவமனை

மற்றும் ஆராய்ச்சி மையம். 

நிறைய ஆய்வுகள்

நடக்கின்றது. 

ஆனாலும் ஊருக்குள்

இருக்கும் அரசு

மருத்துவமனையில்

மார்கழியை கொண்டாடுகின்றன

தெருநாய்கள்!!! 

****

மாநாட்டிற்கு தலைவர்

வருவதால் சாலையில்

வேகத் தடைகள் இல்லை. 

தலைவரைப் பார்க்க

வேகமாகச் சென்றான்

தொண்டன். 

வழியில் கட்டியிருந்த

வாழை மரத்தைப் பார்த்து

வந்தது மாடு. 

தாமதமாக வந்த

தலைவருக்கு இரங்கல்

சொல்ல நேரமில்லை!!! 

Thursday, 29 January 2026

கடவுள்களின் சந்திப்பு

ரேசனில் மூன்று நேரம்

நின்று பெற்ற மூவாயிரத்தோடு

முருகனைப் பார்கக வந்த

பக்தன் ஆறு மணி நேரம்

வரிசையில் நின்று

வேண்டுதலை வைத்தான். 

முன் இரவில் அந்த பக்தனை

பார்க்க ஆசைப்பட்டு

முருகர் கிளம்பினார். 

தெருவில் நுழையும்போதே

நாய்கள் சுற்றி விட

வேலன் வேலை எடுத்தார். 

பழுதடைந்த சாலையில்

பயணித்து களைப்பான

மயிலோடு சாலையோரம்

ஓய்வெடுத்தார். 

கால்வாய் ஓரத்தில்

கஞ்சா போதையில்

இருந்த ஒருவன்

கல்லெறிய மயில் பறக்க

காயமின்றி தப்பினார்

கந்தன். 

பக்தன் வீட்டினுள் சென்ற

போது ஆழந்த நித்திரையில்

இருந்தான் பக்தன். 

ஆறு மணி நேர காத்திருப்பு

தந்த அசதி என

நினைத்தார் சுப்பிரமணியன். 

பக்தனிடம் இருந்து வந்த

மது வாசனை கந்தனை

காயப்படுத்தியது. 

வந்தது வந்தோம் வள்ளிக்கு

நகை வாங்கி செல்வோம்

எனநகைக்கடைக்கு சென்றார்

மயில் வாகனன். 

தங்கம் விலையை பார்த்து

மயங்கி சரிந்தார் வடிவேலன். 

கடை வளாகத்தில் இருந்த

கணேசரை அழைத்து வந்தது

மயில். 

டேய் தம்பி என்னாச்சு

என ஓடி வந்தார் கணேசன். 

மயிலிடம் 10 ரூபாயை

கொடுத்து தண்ணீர் பாட்டில்

வாங்கி வரச் சொன்னார்

விநாயகன். 

பாட்டிலுக்கு பத்து ரூபாயா? 

என்றார் அரை மயக்கத்தில்

முருகன். 

டேய் தம்பி இது தண்ணி பாட்டில் டா

என்று பதிலுரைத்தார்

யானை முகத்தான். 

ஜிஎஸ்டி குறைஞ்சதுல 

தண்ணீர் பாட்டில் விலை

குறையவில்லையா? 

மீண்டும் முருகன். 

அதற்காக 2 சொட்டு தண்ணீர்

அதிகமாகிட்டாங்க தம்பி. 

தம்பி கண் விழித்ததும்

சகோதரர்கள் இருவரும்

நண்பர் இயேசுவை பார்க்க

கிளம்பினர். 

மாப்ளே, இயேசு என்று

கதவை தட்ட,  உள்ளேயிருந்த

இயேசு, டேய் போதை ஆசாமிகளா

இது சர்ச், பிளாக்ல சரக்கு 

கிடைக்கிற கடை

கடைசில இருக்கு என்றார். 

மீண்டும் கதவு தட்ட

எழுந்து வந்து கதவை திறந்தார்

இயேசு. 

என்னய்யா இவ்வளவு

சீக்கிரமே தூக்கம் என்றார் முருகன். 

தைப்பூசம் வருவதில்லை

என்றார் இயேசு. 

தைப்பூசத்துக்கும் உனக்கும்

என்ன சம்பந்தம்? 

அதான் மாப்ள எனக்கும்

தெரியலை ஆனால்

முழு இரவு ஜெபம்

ஏற்பாடு பண்ணி இருக்கானுக. 

இருவரும் சிரிக்க

நீங்க ஜாலியா இருக்கீங்க

அப்படி தானே. 

யோவ் நீ வேற நண்பா

முதற்கடவுள்னு தான் பேரு

கடைசியா தான் வந்தார்

விநாயக்னு கலாய்கிறானுக

என்றார் பிள்ளையார்

பரிதாபமாக. 

மூவரும் சேர்ந்து

அடுத்த நண்பர் அல்லாவை

பார்க்க சென்றனர். 

அல்லா மாம்ஸ், அல்லா மாம்ஸ்

என்று கதவை தட்ட

அல்லா எழவில்லை. 

மாம்ஸ வெடி வச்சு

தான் எழுப்பனும் போல

என்று இயேசு சொல்ல

பதறி எழுந்தார் அல்லா. 

என்ன மாம்ஸ் இவ்வளவு

பதட்டம் என பிள்ளையார் கேட்க

எளவு வீட்டுல வெடி வச்சா கூட

என் பேர்ல தான் எழுதுறாங்க

என்றார் அல்லா. 

மற்ற மூவரும் சிரிக்க

முருகன் சொன்னார்

இன்னைய தேதில அல்லா மாம்ஸ்

தான் மாஸ் என்று. 

ஆமா, தேர்தல் வருது

வாங்கு வங்கி இருக்கு

புகழ் மாலை தான் அல்லாவுக்கு

என்றார் பிள்ளையார். 

அது தான் எனக்கும் பயம்

தேர்தல் முடிஞ்சா 

என்னய தெருவுல

விட்டுருவாங்க மாப்ள

என்றார் அல்லா. 

நால்வரும் சிரித்து

நகர்ந்தனர்.