எனது ஆசிரியர்கள் வரிசையில் எங்கள் பள்ளியின் இயற்பியல் ஆசிரியர் சாத்ராக் ஞானதாசன்.
சமீபத்தில் ஜான்ஸ் பள்ளியில் தலைமை ஆசிரியராக இருந்த ஓய்வு பெற்ற சாத்ராக் சார். எங்கள் பள்ளிக்கு வந்தது 2000ல் நாங்கள் பத்தாம் வகுப்பு படிக்கும் போது. பத்தாம் வகுப்பில் எனது பக்கத்தில் இருந்த நண்பன் பரமசிவன் வந்து சொன்னான். பிசிக்ஸ் வாத்தியார மாத்திடாங்களாம். 12த் பசங்க மாத்தக்கூடாதுனு ஹெட் மாஸ்டர்ட பேசிட்டு இருக்காங்க என்றான்.
மாணவர்கள் விரும்பும் அந்த பிசிக்ஸ் ஆசிரியருக்கு மாற்றாக வந்தவர் சாத்ராக். மாணவர் விரும்பும் ஆசிரியராகவே இருந்தார் சாத்ராக் சார் பாடம் நடத்துவது மிகத் தெளிவாக இருக்கும். அவர் ஒரு போதும் ஒப்பேற்றுவது போல பாடம் நடத்தியது இல்லை. ஒரு வட்டம் வரைவது என்றால் கூட காம்பஸ் எடுத்துவரச் சொல்லி தெளிவாக வட்டம் போட்டு நடத்துவார்.
அதே போல் ஜோதிராஜ் ஒரு ரயிலில் இருக்கான், ஜோதிகா ஒரு ரயிலில் இருக்காங்க. ஜோதிகா இருக்கற ரயில் நகருது. ஜோதிராஜ்க்கு தன்னோட ரயில நகர்ற மாதிரி தோணும். இதுதான் அப்படினு பாடத்திற்கு நுழைவார்.
சாத்ராக் சார் எல்லாரையும் மரியாதையுடன் நடத்துவார். லேப் இன் சார்ஜ் உதயகுமார் சாரை உதயகுமார் சார் என்றே அழைப்பார். அவருக்கு உதவியாளராக வந்த ராபினை ராபின் சார் என்றே அழைப்பார். அதை சமயத்தில் அடி வெளுத்து விடுவார்.
மாலையில் பிரேயர் மைதானத்தில் நடக்கும் பால் பேட்மிண்டன் போட்டிகளில் சாத்ராக் சார் ஆடும் ஆட்டம் ஜாலியாக ரசிக்கும் வண்ணம் இருக்கும். சர்வீஸ் போட்டால் கூட பந்தை உயரமாக தூக்கி அடிப்பார்.
உடை விசயத்திலும் சாத்ராக் சார் முன்னோடி, டக் இன் பண்ணி, ஷூ போட்டு தான் பள்ளிக்கு வருவார். அதை போல் ஒருமுறை போட்ட சட்டையை மறுமுறை போட்டு பார்க்க முடியாது.
பாடம் நடத்தும் போது சந்தேகம் கேட்டாலும் தெளிவாக விளக்குவார். இன்றும் என்னை சுத்தி தொடரும் E =mC2 அவர் சொல்லித் தந்தது தான். அவர் இயற்பியல் பாட ஆசிரியராக இருந்ததால் இயற்பியலுக்கு தனியாக டியூசன் செல்ல தேவை ஏற்படவில்லை.
பள்ளிப் படிப்பை முடித்த பிறகு சாத்ராக் சார் பார்க்கவே இல்லை. நீண்ட நாட்களுக்குப் பிறகு சாத்ராக் சார் எங்கள் பள்ளி தலைமை ஆசிரியர் என்று செய்தி தாளில் பார்த்த போது மகிழ்வாக இருந்தது. பள்ளிக்குப் போய் பார்க்கலாம் என்று நினைத்தேன். அவர் ஓய்வு பெற்று விட்டதாக தகவல் கிடைத்தது.
என்றாவது சந்திப்பேன் எங்கள் சாத்ராக் சாரை....
No comments:
Post a Comment