கிட்டத்தட்ட மூன்றாண்டுகளுக்குப் பிறகு தோரணமலையான் மீண்டும் என்னை அழைத்தார். இந்த முறை என்னோடு வந்தது ராம் மற்றும் பர்த்திஸ். காருக்கு டிரைவராக வந்தது அருள் மணி அண்ணன்.
காலையில் 6.30க்கே கிளம்பினோம். அம்பீஸ் கபேவில் டீ குடித்து விட்டு, ராம் மற்றும் பர்த்திஸை கூட்டிக்கொண்டு கிளம்பினோம். மேலப்பாளையம், முன்னீர்பள்ளம் வழியாக சென்று அவுட்டர் ரிங் ரோட்டில் ஏறி சுத்தமல்லி விலக்கு, கல்லூர், முக்கூடல், பொட்டல் புதூர் வழியாக கடையம் சென்றோம். கடையத்தில் காலை உணவு என்பது திட்டம்.
சிறிய ஓட்டல்கள் எதுவுமில்லை. மிகச் சிறிய ஓட்டல் இருந்தது. இரண்டு பிளாஸ்டிக் பெஞ்ச், ஒரு மர பெஞ்ச், சில பிளாஸ்டிக் ஸ்டூல்கள் இருந்த ஹோட்டல். இட்லி & தோசை இருந்தது. இட்லி சாப்பிட்டோம் நன்றாகவே இருந்தது. ராம் விரதம் என சாப்பிடவில்லை. மூன்று பேருக்கான பில் 100 தான். பக்கத்து கடையில் வாட்டர் பாட்டில், தீப்பெட்டி (புதுவரவு) வாங்கிக் கொண்டு தோரணமலையை நோக்கி விரைந்தோம்.
அடிவாரத்தில் வல்லப விநாயகர வணங்கிவிட்டு மலை ஏறத் துவங்கினால் சில குரங்குகள் நின்றன. அவற்றை பார்தது விட்டு மலை ஏறினோம். சுடோகு போட்டியை போல இந்த மலை ஏற்றமும் இலகு, மிதம் & கடினம் என மூன்று வகை. சென்ற முறை எனக்கு மிதமாக அமைந்தது. இந்த முறை கடின வகையில் இருந்தது.
மூச்சு வாங்க, வாங்க முருகனை காண ஏறினோம். ராமுக்கு இலகு ரகம். பர்த்திஸ் & நான் ஒரே ரகம். மூவரும் ஒன்றாக துவங்கினாலும் ஏறும் போது ஒவ்வொருவரும் வெவ்வேறு படிநிலைகளில்.
எங்களோடு பூமாலை வாங்கி வந்த இரண்டு பேர் மூச்சு வாங்க சிநேக பார்வையும், சில வார்த்தைகளும் பகிர்ந்து கொண்டனர். அப்பா - மகள் ஏறினர். அவர்கள் வாங்கி வந்த வாழைப்பழத்தை குரங்குகள் வாங்கிக் கொண்டன. தண்ணீர் பாட்டிலை கூட வழிப்பறி செய்தன.
நானும், பர்த்திஸ்ம் செய்த தவறு, சாப்பிட்ட கொஞ்ச நேரத்தில் மலை ஏறத் துவங்கியது. இன்னும் பத்து படிகள் / ஏழு படிகள் / நான்கு படிகள் சென்றால் சமதளம் அதில் ஓய்வெடுக்கலாம் என நினைத்து. மூச்சு வாங்கினால் அந்த இடத்தில் நின்றோ, உட்கார்ந்தோ ஓய்வெடுப்பது சிறந்தது.
மூச்சு வாங்கி, வேர்வை வழிந்து, முகம் துடைத்து ஒருவழியாக முருகன் முன் நின்றோம். சாந்த சொருபியாக முருகன் எங்களை ஆசிர்விதிக்க களைப்பு குறையத் தொடங்கியது. மலையில் மேல் மண்டபம் கட்டி செயற்கையாக்கும் முயற்சி எனக்கு சற்றே அதிர்ச்சி.
காளியம்மனையும் கும்பிட்டு, சிறிது உட்கார்ந்து விட்டு கீழறங்க தொடங்கினோம். மேலிருந்த சுனைக்கு செல்லும் வழியே அடைத்து விட்டனர். நடுவில் இருந்த சுனையை பார்க்க சென்றோம். அதில் தண்ணீர் இல்லை. கோவில் வேலைக்காக தலையில் மூட்டைகளோடு சென்றவர்கள் எங்களை ஆச்சர்யப்படுத்தினர்.
கீழே வந்து லெமன் சோடா குடித்த பிறகு சற்றே புத்துணர்வு. ராமநதி அணையை பார்க்கலாம் என்று சென்றால் சனி, ஞாயிறு அனுமதி இல்லையாம். மீண்டும் கடையம் வந்து வேறு வழியாக ஆழ்வார்குறிச்சி, ஆம்பூர், அம்பை பைபாஸ், சேரன்மகாதேவி வழியாக வந்தோம்.
சேரன்மகாதேவியில் ஒரு தேனீர் இடைவேளை. நெல்லையை நெருங்கும் போதுகருமேகங்கள் பயங்காட்டின. புதிய பேருந்து நிலையத்தில் நுழையும் போது மழை பெய்ய துவங்கி இருந்தது. ராம் மற்றும் பர்த்திஸை இறக்கிவிட்டு வீடு சேர்ந்தேன். தோரணமலையான் விபூதி சட்டைப்பையில் உடன் வந்தது.