Tuesday, 20 October 2026

மூன்றாம் வகுப்பு புராஜெக்ட்

தொழில்நுட்பம் வளர்ந்து விட

பால்ய பசுமையை 

நினைவு கூறுகிறது மனது. 

பட்டுப்பூச்சியைப் பிடித்து

தீப்பெட்டியில் அடைத்ததும்

தட்டாம்பூச்சியைப் பிடித்து

சிறு கல்லைத் தூக்க வைத்ததும்

நினைவடுக்குகளில் நீங்காமல், 

கூழாங்கற்களை பார்த்து

பல ஆண்டுகள் ஆகிவிட்டதை

மனது கூறிக்கொள்கிறது!!! 

***

கல்லூரி ஒரே பெஞ்சில்

ஒன்றாக இருந்து, ஒன்றாக

பேசிச் சிரித்து, சேட்டைகள் செய்து

ஆசிரியரிடம் அடுத்தவர் தவறுக்கு

திட்டு வாங்கி, 

கேலி, கிண்டல்கள் செய்து 

மூன்றரை ஆண்டுகளைக்

கழித்த நால்வர். 

கனடா, கத்தார், 

பெங்களூரு, திருநெல்வேலி

என ஆளுக்கொரு திசையில். 

காலம் தான் எத்தனை வேகமாக

சுழல்கிறது!!! 

***

கல்லூரி புராஜெக்ட்க்கு

சென்னை சென்று ஊர்சுற்றி

எதேதோ செய்து

யாராரிடமோ பேசி

என்னன்னவோ ஒப்பித்து

கரையேறிய எனக்கு

மகளின் மூன்றாம் வகுப்பு

புராஜெக்ட் தலைசுற்ற

வைக்கிறது!!! 


***

கல்லூரி நண்பர்கள்

எங்கள் ஊருக்கு வரும்போது

அலைபேசி தொடர்பு எல்லையே

இல்லாமல் இருந்தது. 

சிரமப்பட்டு வந்து எங்கள்

கிராமத்தை ரசித்துச் சென்றார்கள். 

இன்றோ மீஸோ, அமேசான் என

பொருட்கள் வந்திறங்குகின்றன. 

நாலைந்து தொழிற்சாலை

பேருந்துகள் வருகிறது. 

ஏழெட்டு பள்ளிப் பேருந்துகள்

வருகிறது. 

எங்கள் ஊர் இப்போது

வளர்ந்து விட்ட கிராமம்!!! 

***

ஊழலை ஒழிக்க வந்த கட்சி

₹36க்கு தனியாரிடம்

மின்சாரம் வாங்குகிறது. 

நான்காண்டுகளுக்கு முன்பு

விடப்பட்ட இலவச நகரப்

பேருந்துகளால் இன்று

ஆட்டோகாரர்கள் வாழ்வாதாரம் 

பாதிக்கப்படுவதாக குருட்டு 

வறட்டு அரசியல் செய்யும்

எதிர்கட்சி. 

இவர்களுக்கு மத்தியில்

தெருநாய்களோடு போராடுகிறான்

தமிழன்!!! 










No comments:

Post a Comment