Wednesday, 30 September 2026

குவஹாத்தியும் விக்ரமும்

ஜான் கேம்ப்பெல் ஆடியது

ருத்ர தாண்டவம். 

கேப்டன் & கீப்பர் என்ற இருமுகன்

ஹோப்பும் சதம். 

தந்து விட்டேன் என்னை

என்று அர்ப்பணிப்புடன் ஆடி

வீர தீர சூரன் ஆனார்

அமீர் ஜாங்கோ! 

இந்த ராஜபாட்டையிலும்

10 என்றதுக்குள்ளே சிறகுகள்

விரித்து பறந்தார்

ரூதர்போர்டு. 

புதிய மன்னர்கள்

பிரார், நபி எதுவும் செய்யவில்லை. 

இந்த மைதானத்தில் விக்கெட்

எடுப்பது தங்கம் எடுப்பதை

போன்றது. 

ஜடேஜாவும், குல்தீப்பும் 

தங்கலான்கள். 

மைதானம் ஹவுஸ்புல்

மைதான வெக்கையில்

தெய்வத் திருமகள் கிருஷ்ணா

கூட ஸ்வட்டரை கழட்டி விடுவார். 

அந்தியன்கள் போட்ட ஸ்கெட்சை

தகர்க்க களமிறங்கியவர்கள்

கடாரம் கொண்டான் ரோகித் &

பொன்னியின் செல்வன் கில். 

சாமி அருள் வந்து ஆடியதை

போல் ஆடினார் ரோகித். 

கில்லின் ஹேண்ட் ஐ கோர்டினேஷன்

ராவணன் போல்

புஜ வலிமை பீமா போல்

தில்லாக ஆடி தூள் கிளப்பினார். 

கிங் கோலி சிறிது நேரம் 

ஆடினாலும் சிறப்பான ஆட்டம். 

ருதுவின் ஆட்டம் காசிக்கே

கடுப்பை கிளப்பி இருக்கும். 

போட்டி முழுக்க 

பந்துக்கும் பவுண்டரிக்கும்

இடையே காதல் சடுகுடு

நடந்தது. 

இரண்டு போட்டியிலும் சில

ஓவர்கள் மட்டுமே பந்து வீசி

பேட்டிங் கிடைக்காத 

நாமன் திர் ஒரு மகான். 

கிருஷ்ணனுக்கு காத்திருந்த

பக்த மீரா போல் ஆனது

ராகுல் நிலைமை. 

இந்த மாபெரும் வெற்றியால்

மகிழ்வடைந்தார்

பிதாமகன் கம்பீர். 

Tuesday, 22 September 2026

எனது ஆசிரியர்கள் - 7

எனது ஆசிரியர்கள் வரிசையில் எங்கள் பள்ளியின் இயற்பியல் ஆசிரியர் சாத்ராக் ஞானதாசன். 

சமீபத்தில் ஜான்ஸ் பள்ளியில் தலைமை ஆசிரியராக இருந்த ஓய்வு பெற்ற சாத்ராக் சார். எங்கள் பள்ளிக்கு வந்தது 2000ல் நாங்கள் பத்தாம் வகுப்பு படிக்கும் போது. பத்தாம் வகுப்பில் எனது பக்கத்தில் இருந்த நண்பன் பரமசிவன் வந்து சொன்னான். பிசிக்ஸ் வாத்தியார மாத்திடாங்களாம். 12த் பசங்க மாத்தக்கூடாதுனு ஹெட் மாஸ்டர்ட பேசிட்டு இருக்காங்க என்றான். 

மாணவர்கள் விரும்பும் அந்த பிசிக்ஸ் ஆசிரியருக்கு மாற்றாக வந்தவர் சாத்ராக். மாணவர் விரும்பும் ஆசிரியராகவே இருந்தார் சாத்ராக் சார் பாடம் நடத்துவது மிகத் தெளிவாக இருக்கும். அவர் ஒரு போதும் ஒப்பேற்றுவது போல பாடம் நடத்தியது இல்லை. ஒரு வட்டம் வரைவது என்றால் கூட காம்பஸ் எடுத்துவரச் சொல்லி தெளிவாக வட்டம் போட்டு நடத்துவார். 

அதே போல் ஜோதிராஜ் ஒரு ரயிலில் இருக்கான், ஜோதிகா ஒரு ரயிலில் இருக்காங்க. ஜோதிகா இருக்கற ரயில் நகருது. ஜோதிராஜ்க்கு தன்னோட ரயில நகர்ற மாதிரி தோணும். இதுதான் அப்படினு பாடத்திற்கு நுழைவார். 

சாத்ராக் சார் எல்லாரையும் மரியாதையுடன் நடத்துவார். லேப் இன் சார்ஜ் உதயகுமார் சாரை உதயகுமார் சார் என்றே அழைப்பார். அவருக்கு உதவியாளராக வந்த ராபினை ராபின் சார் என்றே அழைப்பார். அதை சமயத்தில் அடி வெளுத்து விடுவார். 

மாலையில் பிரேயர் மைதானத்தில் நடக்கும் பால் பேட்மிண்டன் போட்டிகளில் சாத்ராக் சார் ஆடும் ஆட்டம் ஜாலியாக ரசிக்கும் வண்ணம் இருக்கும். சர்வீஸ் போட்டால் கூட பந்தை உயரமாக தூக்கி அடிப்பார். 

உடை விசயத்திலும் சாத்ராக் சார் முன்னோடி, டக் இன் பண்ணி, ஷூ போட்டு தான் பள்ளிக்கு வருவார். அதை போல் ஒருமுறை போட்ட சட்டையை மறுமுறை போட்டு பார்க்க முடியாது. 

பாடம் நடத்தும் போது சந்தேகம் கேட்டாலும் தெளிவாக விளக்குவார். இன்றும் என்னை சுத்தி தொடரும் E =mC2 அவர் சொல்லித் தந்தது தான். அவர் இயற்பியல் பாட ஆசிரியராக இருந்ததால் இயற்பியலுக்கு தனியாக டியூசன் செல்ல தேவை ஏற்படவில்லை. 

பள்ளிப் படிப்பை முடித்த பிறகு சாத்ராக் சார் பார்க்கவே இல்லை. நீண்ட நாட்களுக்குப் பிறகு சாத்ராக் சார் எங்கள் பள்ளி தலைமை ஆசிரியர் என்று செய்தி தாளில் பார்த்த போது மகிழ்வாக இருந்தது. பள்ளிக்குப் போய் பார்க்கலாம் என்று நினைத்தேன். அவர் ஓய்வு பெற்று விட்டதாக தகவல் கிடைத்தது. 

என்றாவது சந்திப்பேன் எங்கள் சாத்ராக் சாரை.... 


Saturday, 12 September 2026

அஜித் ரசிகன் எனும் நான்

 நான் தீனா படம் வந்த பிறகு அஜித் ரசிகர்கள் ஆனேன். தீனா படத்தைப் பற்றி நண்பன் சதீஷ்குமார் அணுஅணுவாக ரசித்து சொல்ல அதன் தாக்கம் என்னை அஜித் பக்கம் இழுத்தது. அதற்குப் பிறகு ரொம்ப நாட்கள் கழித்து தான் தீனா பார்த்தேன். நான் ரசிகனான போது சிட்டிசன் தயாராகி கொண்டிருந்தது. 

அப்போது அஜித் ரசிகன், அஜித் முரசு, ஸ்டார் அஜித் என நிறைய மாத இதழ்கள் வரும். நான் அஜித் ரசிகன் இதழை வாங்கினேன். அன்று அது விகடன், குமுதத்தை விட விலை அதிகம். 

சதீஷ்குமார் சென்று விட விடுதியில் அஜித் ரசிகர்கள் மிகக் குறைவு. இரண்டு அல்லது மூன்று பேர் இருப்போம். ஆனால் விஜய், விஜயகாந்த், சரத்குமார், பிரசாந்த்க்கு ரசிகர்கள் அதிகம். பிரசாந்த் ரசிகர்கள் பிறகு விக்ரமுக்கு மாறி இப்போது மாரி செல்வராஜ் ரசிகராகிவிட்டனர். 

பூவெல்லாம் உன் வாசம் தான் அஜித் ரசிகனான பிறகு முதலில் தியேட்டரில் பார்த்த படம். விடுதியில் அஜித் ரசிகராக இருப்பது மிகவும் கடினம். அஜித் நிறைய ஆப்ரேஷன் செய்து இருப்பதால் அவருக்கு குழந்தை பிறக்க வாய்ப்பே இல்லை என்பார்கள். இன்னும் என்னென்னவோ சொல்வார்கள். 

திரைப்படத்துறையில் அஜித் காது பட எத்தனை பேசி இருப்பார்கள். இந்த சூழலிலும் அவர் அசோகா படத்தில் சுசீமா பாத்திரத்தில் நடித்தார். ரொம்ப நாட்களுக்கு பிறகு இது எனக்கு புரிந்தது. அஜித் மீதான ஈர்ப்பை அதிகரித்தது. 

12ம் வகுப்பு விடுமுறையில் கண்ணா அஜித் ரசிகனாகி வந்தான். ரெட் படத்தை திரும்ப தியேட்டரில் பார்த்தோம். இவன மாதிரி ஒருத்தன் கூட இல்லையே என்ற ஏக்கம் கல்லூரி காலத்தில் இருந்தது. கல்லூரியில் எங்கள் பேட்ச்ல் இரண்டே இரண்டு அஜித் ரசிகர்கள் தான். 

அப்போதெல்லாம் தோணும் அதே தேவா, அதே வித்யாசாகர் இசையமைத்து ஏன் அஜித் பாடல்கள் ஹிட் ஆவது இல்லை என. பிறகு சன்டிவி, விஜய் படங்களை முன்னிலை படுத்துவது தெரிந்தது. ஆனாலும் அவ்வப்போது கடவுள் இருக்கிறான் குமாரு மொமன்ட் வரும். 

ஆஞ்சநேயா படத்திற்கு திரையரங்கு வாசல் வரை சென்று படம் பார்க்க வேண்டாம் என்று திரும்பி கூட்டி வந்த நண்பர்கள் உண்டு. அது தான் அஜித் படம் எப்படி இருந்தாலும் பார்த்தே தீர வேண்டும் என்ற வெறியை கூட்டியது. மீரா ஜாஸ்மின் நாயகியாக இருந்து பார்க்காமல் விட்டது கூடுதல் வருத்தம். 

ஒரு வருடத்துக்குப் பிறகு வந்து ப்ளாப்பா என்று கேலிகள் பறந்தது. நடுவில் என்னை தாலாட்ட வருவாளா வந்துச்சே என்று சிரிப்பார்கள். சிம்ரன், ஏஆர் ரஹ்மான் வச்சு உதயா என்ற காவியம் அவர்களுக்கு வந்தது. தாணு தயாரிப்பில் வந்ததால் சச்சின் பட பாடல்களை சன்டிவி & சூரியன் எப் எம்களில் போடாமல் விட்டனர். 

அட்டகாசம் வரும்போதும், வரலாறு வரும் போதும் புதிய அஜித் ரசிகர்கள் வந்தார்கள் அடுத்த படம் வரும் போது போய் விட்டனர். அஜித் அந்த காலகட்டத்தில் தான் ரேஸ்க்கு சென்றார். 

அஜித் ஏன் வருடத்திற்கு மூன்று படங்கள் நடிக்க மாட்டக்கிறார், அஜித் படங்களில் விளம்பரங்களை தினமும் தினத்தந்தியில் போடும் தயாரிப்பாளர் அமையவில்லை என்ற ஏக்கம் இருந்தது. அஜித், பாலாவிடம் மீண்டும் சென்று நான் கடவுள் படத்தில் நடிப்பதாக செய்தி வந்தது. அஜித் உடலைக் குறைத்த போட்டோக்கள் மீடியாவில் பரவியது. மீண்டும் அஜித்திற்கு திடீர் ரசிகர்கள். திருப்பதி படம் ஏவிஎம் தயாரிப்பில் வந்தது. 100+நாட்கள் தினத்தந்தியில் விளம்பரம் போட்டனர். வரலாறு வந்தது, அஜித் வரலாறு படைத்தார். 

சென்னை வந்த பிறகு வேலை செய்யுமிடம், தங்குமிடம் என எங்கு திரும்பினாலும் அஜித் ரசிகர்கள். ரிலையன்ஸ் தயாரிப்பில் கிரீடம், பிக் எப்ஃஎம் எக்ஸ்குளுசிவ் என அடிக்கடி கிரீடம் பாடலை ஒலிபரப்பினார்கள். பில்லா வரப் போகிறது. அங்கே அழகிய தமிழ் மகன், வில்லு என மெகா ஹிட் படங்கள். 

உலகத் தொலைக்காட்சி வரலாற்றில் முதல் முறையாக என்று அஜித் பேட்டி கலைஞர் டிவியில். பில்லா வெளியாவதற்கு ஒருநாள் முன்பு வேண்டும் என்றே கே டிவியில் பழைய பில்லா ஒளிபரப்பினார்கள். அஜித் என்றாலே தடைகளை தாண்டி வருபவர் தானே. 

பில்லாவிற்கு பிறகு அஜித் கிராப் ஏறத் துவங்கியது. ரசிகர் மன்றத்தை கலைத்தார், விழாவில் அரசியல்வாதிகளை தோலுரிந்தார். துப்பாக்கி சுடும் போட்டி, ஓட்டுப்போட முதலில் செல்வது, ஸ்பைடர் கேம் என அஜித் என்ன செய்தாலும் பேசப்பட்டது. விவேகம் முதல் காட்சி முடிவதற்கு முன்பாக ப்ளாப் எனப் பேசப்பட்டது. அஜித்க்கு ப்ளாப் படம் புதிதல்ல. மீண்டும் அதே தயாரிப்பாளர், இயக்குநரோடு விஸ்வாசம் பட்டி தொட்டி எங்கும் ஹிட். 

அஜித்தை கொண்டாட புதிய ரசிகர்கள் வந்தார்கள், ஓஜி ரசிகர்கள் ஓரமாக நின்று வேடிக்கை பார்த்தோம். நாங்கள் தனித்து நின்ற காலம் அதிகம். கூட்டத்தோடு கோவிந்தா போட்டதில்லை. இன்று அஜித் ஒரு கட்சி ஆதரவாளர் என்று பேசிக் கொண்டு இருக்கின்றனர். அஜித் ரசிகர்கள் முதுகில் குத்தி ரேஸ் களத்திற்கு சென்றதாக சொல்கிறார்கள். இனி அஜித் ரசிகராக தொடரப் போவதில்லை என்று கூறுகிறார்கள். அஜித் சொந்த படத்தின் ப்ரோமோவிற்கு வந்தால் அசிங்கபடுவார் என்கிறார்கள். 

ஓஜி ரசிகன் ஓரமாக நின்று வேடிக்கை பார்க்கிறேன். அஜித் கேம்பா விளம்பரத்தில் நடித்ததில் வருத்தமே. எனக்கு ரேஸ் குறித்து எதுவும் தெரியாது. அஜித் எனும் மனிதரை பிடிக்கும், அவர் பின்னால் நிற்பேன். அஜித் செய்வதில் தவறு இருந்தால் நிச்சயம் விமர்சனம் செய்வேன். அஜித் படம் வந்தால் பார்ப்பேன், முடிந்தால் திரையரங்கில் இல்லை என்றால் ஓடிடி. 

நான் என்றும் அஜித் ரசிகன்.