Friday, 21 August 2026

எனது ஆசிரியர்கள் 5

சமீபத்தில் இங்கிலாந்து டெஸ்டில் இரண்டு பந்து வீச்சாளர்கள் தலா 5 விக்கெட்டுகளை வீழ்த்தியதால் பந்தை இரண்டாக வெட்டி இருவருக்கும் கொடுத்த நிகழ்வு நடந்துள்ளது. பந்தை வெட்டுவது எனக்கு ஞானராஜ் சாமுவேல் சாரை நினைவு படுத்தியது. 

ஞானராஜ் சாமுவேல் எனது 6ம் வகுப்பு மற்றும் 7ம் வகுப்பு ஆசிரியர். நான் ஆறாம் வகுப்பு சேர்ந்த போது அவர் மீண்டும் ஜான்ஸ் பள்ளிக்கு வந்தார். ஞானராஜ் சார் நன்றாக அடிப்பார் என்பது மாணவர் மத்தியில் பரவலாக அறியப்பட்டிருந்தது. 

வகுப்பில் நாங்கள் சொல்வது நான்ராஜ் சார் என்றே, நீண்ட நாட்களுக்குப் பிறகே அவரது பெயர் ஞானராஜ் என்று தெரியும். ஞானராஜ் சாரின் சிறப்பு என்றால் எல்லாம் நீட்டாக இருக்க வேண்டும் என்று நினைப்பார் செய்வார். 

மாணவர்களை வரிசையில் நிறுத்தி உயரத்திற்கேற்ப உட்கார வைப்பார். கட்டுரை நோட்டுக்கு பிரவுன் லேமினேசன் சீட் போட வேண்டும் என்று சொல்வார். அட்டை சரியாக போடாத கட்டுரை நோட்டுகளை அவரே சரி செய்து அட்டை போடுவார். அதே போல் ரேங்க் கார்டுக்கு ஒரு கடின அட்டை தயார் செய்து கொள்வார். மற்ற வகுப்பு ரேங்க் கார்டு வெறும் ரப்பர் பேண்ட் சுற்றி இருக்கும். எங்கள் வகுப்பு ரேங்க் கார்டு கடின அட்டைக்கு மேல் தான் ரப்பர் பேண்ட் இருக்கும். 

படிப்பைத் தாண்டி வேற எதுவும் ஞானராஜ் சார்க்கு பிடிப்பது இல்லை. ஸ்கவுட்,என்சிசியில் சேர அனுமதிப்பது இல்லை. சேர்ந்தால் திட்டுவார். அவரது கையெழுத்து அழகாக இருக்கும். அதிலே பாடம் எளிதாக விளங்கும். 

"Cleanliness is next to godliness" அவர் எடுத்த முதல் ஆங்கிலப் பாடத்தின் பெயர் 30 ஆண்டுகளைக் கடந்து இன்றும் நினைவில் உள்ளது. 

ஞானராஜ் சார் ஒரு ஹேன்ட்பேக் வைத்திருப்பார். அதில் பேனாக்களை தவிர சிறிய கத்தி, ப்ளேட் ஆகியவையும் வைத்திருப்பார். கிரிக்கெட் விளையாடுவது அவருக்குப் பிடிக்காது. பந்தை பார்த்து விட்டால் அதை இரண்டாக வெட்டி கொடுத்து விடுவார். 

ஹீரோ ஹோண்டா சிடி 100 அவரது வண்டி, அதில் ஒரு பெட்டி வைத்திருப்பார். மைதானத்தில் சின்ன பையன்கள் கிரிக்கெட் விளையாடினால் பந்தை வாங்கி பெட்டியில் போட்டுக் கொள்வார். பெரிய பையன்களிடம் எதுவும் செய்யமாட்டார். நாங்கள் ஆறாவது படிக்கும் போது எட்டாவது படித்த அவர் மகன் கிரிக்கெட் விளையாடுவார். 

ஞானராஜ் சார், புகைப்பிடிப்பார். புகைப்படிப்பிதில் அவருக்கு கம்பெனி செல்லின் சார். செல்லின் சார் தான் எங்களுக்கு தமிழாசிரியர். ஞானராஜ் சார் நடுவில் இருக்கும் வழுக்கையை மறைத்து முடியை சீவி விட்டிருப்பார். ஒருநாள் பெஞ்ச் பெஞ்சாக வந்து நோட்டை பார்த்த போது தான் தெரிந்தது. 

அவர் திட்டுவதிலும் ஒரு ஸ்டைல் இருக்கும். "மிதிக்கிற மிதில..... ", "தூங்குறையே கழுதகறியால திண்ண" 

ஆறிலிருந்து ஏழாம் வகுப்பு செல்லும் போது அவரும் ஆறாம் வகுப்பில் இருந்து ஏழாம் வகுப்பிற்கு மாறினார். மீண்டும் எனது வகுப்பாசிரியர் ஆனார். கட்டுப்பாடுகள் மிக்க ஆசிரியர், அடி வெளுத்து விடுவார். ஆனாலும் நல்ல ஆசிரியர் ஞானராஜ் சாமுவேல் சார். 


Saturday, 15 August 2026

பட்டத்து இளவரசர்கள்

"நண்பர்களோடு ஒரு சந்திப்பு

"தவளக்கொடி" அன்பரோடு இரவு உணவு"

என்பதே பொருத்தமான தலைப்பாக இருக்கும். 

ஜெர்மனியில் இருந்து வந்திருந்த கணபதி சந்திக்கலாம் என்று சொல்ல, தானாய் சேர்ந்தது கூட்டம். 

டேனி வீட்டில் சந்திப்பு, கணபதி, டேனி வீட்டிற்கு வந்து விட, நானும் பழனி சங்கரும் கூகுள் மேப்பால் குழம்பி நிற்க டேனியே அழைத்துச் சென்றான். கொஞ்ச நேரத்தில் செல்வகுமார் வந்தான். கணபதி மகன் சுதீஷ் அமைதியாக உட்கார்ந்து இருந்தான். வெளியே போய் இருந்த டேனி மகன்கள் எடி, ஈத்தன் வீடு திரும்ப ஆட்டம் களை கட்டியது. 

கடைசியாக தான் வந்தார் கார்த்திகேயன் (விநாயக்) கூடவே பட்டத்து இளவரசர் மோனிஷ்ம். [கல்லிடைக்குறிச்சி பேரரசர் பேருந்தில் வந்ததால் இளவரசுளைக் கூட்டி வரவில்லை. ஜங்ஷன் மன்னர் செல்வகுமாரும் தனது குமாரரைக் கூட்டி வரவில்லை. எங்களது இளவரசிக்கு நகர்வலம் பிடிக்காது.]

டேனி மகன் எடியை காட்டிலும் மற்ற குழந்தைகள் சிறுவர்கள் என்றாலும் நாளை கிடைக்கும் பலாக்காயை விட இன்று கிடைக்கும் களாக்காய் சிறந்தது என்று விளையாட்டில் இணைந்து கொண்டான். 

டேனி வெடி போடுவோம் என்று சொல்ல, இதுவரை வெடி போட்டு ஏற்பட்ட விழுப்புண்களை மறந்து வீரபராக்கிரமத்தோடு நான் வெடிக்காத வெடியை குட்டீஸோடு வைக்க ஆரம்பித்தேன். லட்சுமி வெடியை கார்த்தியும், தாவும் தவளை வெடியை கணபதியும் வைத்தார்கள். டேனி போட்டோ எடுக்க, செல்வகுமாரும், பழனி சங்கரும் வேடிக்கை பார்த்தனர். 

கனடாவில் வசிக்கும் டேனி மகன்கள், ஜெர்மனியில் வசிக்கும் கணபதி மகன், தூத்துக்குடியில் வசிக்கும் கார்த்தி மகன் இவர்களை இணைத்தது எங்கள் நட்பு. அவர்கள் ஏதோ மொழியில் பேசிக்கொள்ள எங்களுக்கு தான் எந்த மொழியில் பதில் சொல்வது என்ற குழப்பம். ஈத்தன் - மோனிஷ் ஆட்டம் சச்சின் - சவுரவ் ஆட்டம் போல இருந்தது. 

எடி, எங்கள் பெயர்களை டேனியிடம் கேட்க இது செல்வகுமார், இது பழனி செல்வகுமார், இது பழனி சங்கர் என்று சொல்ல ஒரே மாதிரி பேரா இருக்கு, போதும்டா சாமி என்று விலகிக் கொண்டான். 

சாப்பிட கிளம்ப முடிவுவானதும், இளவரசர்களை அழைத்துக் கொண்டு வைர மாளிகையில் நுழைந்தோம். அசைவ உணவுகளுக்கு மத்தியில் சைவத்திற்கும் வழி கிடைத்தது. 

உண்டு, களித்து, பேசி வெளியேறினோம். கூடடைதல் நினைவுக்கு வர கூட்டத்தை கலைத்தோம். மீண்டும் சந்திப்போம். ஆனால் எத்தனை ஆண்டுகளுக்குப் பிறகு? 

சரி, அந்த தவளக்கொடி - டேனியின் 2வது மகன் முதல்வரின் தீவிர ரசிகர். முதல்வர் பாட்டான "தமிழர்கொடியை" தவளக்கொடி என்று பாடித் திரிந்தான். உதித் நாராயணன் பாடி இருந்தாலும் அப்படி தானே இருக்கும்.