Friday, 30 October 2026

தீப்பெட்டி சேகரிப்பு

பணத்தாள் சேகரிக்கும் நான் தீப்பெட்டி சேகரிப்பிலும் இறங்கிவிட்டேன். பணத்தாள் சேகரிக்கும் போது தீப்பெட்டி சேகரிப்பாளரை பார்த்து என்னடா இது என்று நானே நினைத்துள்ளேன். 

இன்றைய தேதியில் ஒரு ரூபாய்க்கு கிடைக்கும் பொருட்களில் தீப்பெட்டியும் ஒன்று. 20 முதல் 25 குச்சிகள் ஒரு தீப்பெட்டியில் இருக்கும். ஒரு தீக்குச்சி விலை 4 பைசா முதல் 5 பைசா. ஒரு தீக்குச்சியை வைத்து ஒரு சிகரெட் / பீடி பத்த வைக்கலாம். தீபம் ஏற்றலாம், அடுப்பு பற்ற வைக்கலாம், வைக்கோல் படப்பையோ அல்லது குப்பையையோ கொளுத்தலாம். 

இன்று தீப்பெட்டி தயாரிப்பு பெரும்பாலும் இயந்திரம் மூலம் நடைபெறுகிறது. இதில் மூன்று தனித்தனி வேலைகள் உள்ளது. வெளி பெட்டி (அட்டை), உள் பெட்டி (அட்டை), தீக்குச்சிகள். இன்று தீப்பெட்டியின் வெளியில் இருக்கும் படம் அட்டையில் அச்சிடப்பட்டே வருகிறது. தொழில்நுட்பம் வளர்ச்சி அடையாத காலத்தில் அந்த படங்களை பசை கொண்டு ஒட்டினார்கள். அதே போல் தீக்குச்சி உரசும் கத்தரிப்பூ கலர் இடமும் பசையால் ஒட்டப்பட்டது தான். 

இவ்வளவு வேலை பார்த்து நுகர்வோர் கைக்கு வரும் போது 1 ரூபாய் விலையில் கிடைக்கும் தீப்பெட்டிக்கு, தொழிலாளருக்கு எவ்வளவு கூலி கிடைத்திருக்கும். 

80, 90களின் குழவிகள் தீப்பெட்டி அட்டையை கதவில் ஒட்டி விளையாடி இருப்பார்கள். தீப்பெட்டியில் பட்டுப்பூச்சியை போட்டு வைத்திருப்பார்கள். இன்னும் தீப்பெட்டியை வைத்து ஏதேதோ விளையாடி இருப்பார்கள். 

தீப்பெட்டி எப்படி முக்கியத்துவம் பெறுகிறது? மனிதன் கண்டுபிடிப்பில் மகத்தான கண்டுபடிப்பு நெருப்பு. அந்த நெருப்பை உருவாக்குவது தான் தீப்பெட்டி. முன் காலத்தில் வீட்டில் நெருப்பை அணையாமல் பார்த்துக் கொண்டனர். அக்கம்பக்கத்தினர் வீட்டிற்கு நெருப்பு கேட்டு சென்றனர். 

தீப்பெட்டி அதை எளிமையாக்கியது. எல்லாரும் ஏதோ ஒரு சூழலில் யாரிடமாவது தீப்பெட்டி கடன் கேட்டிருக்க வாய்ப்பு உள்ளது.  சிகரெட் பிடிக்கவோ, தீபம் ஏற்றவோ, குப்பையைக் கொளுத்தவோ கூட இருக்கலாம். 

தீப்பெட்டி உற்பத்தியில் பெரும்பங்கு கோவில்பட்டி, சாத்தூர், சிவகாசி பகுதியில் இருந்து தான். இந்தியா முழுக்க மற்றும் வெளிநாடுகளுக்கு இங்கிருந்து தான் தீப்பெட்டி செல்கிறது. குடியாத்தம், காவேரிப்பாக்கம் பகுதியிலும் பெரிய அளவில் தீப்பெட்டி தொழில் நடைபெறுகிறது. 

திருநெல்வேலியில் பாரம்பரிய தீப்பெட்டி என்றால் அது கிஸான் தான். ஏர் பிடித்த உழவன் இருப்பது போல் இருக்கும் படம் தான் அந்த தீப்பெட்டியில் இருக்கும். கிஸான் தமிழ்சொல்லே கிடையாது ஆனாலும் அந்தப் பெயரில் உள்ள தீப்பெட்டி தான் திருநெல்வேலி முழுக்க பரவலாக உள்ளது. தற்போது கார்ப்பரேட் ஐடிசி தீப்பெட்டி விற்பனையிலும் இறங்கி உள்ளது. ஷிப், ஹோம் லைட்ஸ், சீட்டா, எய்ம் அவர்களது தீப்பெட்டி தான். இவ்வளவு போட்டியிலும் கிஸான் இன்னும் களத்தில் இருப்பது ஆச்சர்யம் தான். 

தீப்பெட்டியை பொறுத்தவரை கால மாற்றத்திற்கு ஏற்ப பெயர்கள், படங்களை மாற்றி கொண்டே இருப்பார்கள். கிரிக்கெட்டை மையப்படுத்தி, நடிகர், நடிகைகளை மையப்படுத்தி, மிருகங்களை மையப்படுத்தி என தீப்பெட்டிகளில் பல வண்ணங்கள், பல எண்ணங்கள் என நிறைந்திருக்கிறது. 



ஊதுபத்தி நிறுவனங்கள், பீடி கம்பெனி, ஹோட்டல்கள் தங்களது நிறுவன பெயரில் தீப்பெட்டி தயார் செய்வது உண்டு. எனவே தீப்பெட்டிகளில் வகைகள் அதிகம். வெவ்வேறு ஊர்களில் வெவ்வேறு பெயர்களில், வண்ணங்களில் தீப்பெட்டிகள் உள்ளது. இவற்றை சேகரித்து பார்ப்பது ஒரு வண்ணமயமான விசயம். அதற்கு பின்னணியில் இருக்கும் பலரின் உழைப்பு கண் முன்னே வரும்.

No comments:

Post a Comment