Monday, 26 October 2026

வித்தியாசமான ஊர்கள்

ஒருங்கிணைந்த திருநெல்வேலி மாவட்டத்தில் (திருநெல்வேலி, தூத்துக்குடி & தென்காசி) நிறைய வித்தியாசமான ஊர் பெயர்கள் உண்டு. அவை நிறைய தமிழ் பெயர்ளைக் கொண்டவை. தமிழ் பெயர் அல்லாத சில ஊர் பெயர்கள் உண்டு. அவற்றின் பெயர் காரணம், பின்னணி.

பர்கிட் மாநகரம்

பர்கிட் மாநகரம், திருநெல்வேலியில் இருந்து சீவலப்பேரி சாலையில் தாமிரபரணி ஆற்றுக்கு முன்பாகவே உள்ளது. தமிழில் இந்த ஊர் புதுமனை என்று அழைக்கப்படுகிறது. 1926ல் இந்த ஊர், கலெக்டர் ஹாரோல்ட் ஹாமில்டன் பர்கிட் நினைவாக உருவாக்கப்பட்டது. இது கிராமம் தான் ஆனால் ஏன் மாநகரம் என வைக்கப்பட்டது என்று தெரியவில்லை. 

டோனாவூர்


டோனாவூர், திருநெல்வேலி மாவட்டம் களக்காடு - வள்ளியூர் / நாகர்கோவில் செல்லும் சாலையில் உள்ள ஊர். அயர்லாந்தை சேர்ந்த எமி கார்மிக்கேல் என்பவர் டோனாவூருக்கு வந்து, டோனாவூர் பெல்லோஷிப் என்ற அமைப்பை உருவாக்கினார். அது ஏழை குழந்தைகள் கல்வி மற்றும் முன்னேற்றத்திற்கு உதவியது. அந்தப் பகுதியினர் எமி கார்மிக்கேலை "அம்மா" என்றே அழைக்கின்றனர். டோனாவூரில் 1800களில் உருவாக்கப்பட்ட தேவாலயமும் உள்ளது. இந்தத் தொண்டு செய்ய பெருமளவில் உதவியவர் கவுன்ட் டோனா என்ற நபர். எனவே அவர் பெயரால் டோனாவூர் என்று அழைக்கப்படுகிறது. பல வரலாற்று சிறப்புகளை தாங்கி நிற்கும் ஊர் டோனாவூர். 

ரஸ்தா 

ரஸ்தா என்ற ஊர் திருநெல்வேலி - சங்கரன்கோவில் நெடுஞ்சாலையில் உள்ளது. ரஸ்தா ஒரு நான்கு முனை சந்திப்பு. ரஸ்தாவில் இருந்த தென்காசி செல்ல வழியுண்டு. தாழையூத்து செல்ல வழியுண்டு, தாழையூத்து சென்றால் அது மதுரை நெடுஞ்சாலையில் இணைக்கும். இன்னொரு பக்கம் திருநெல்வேலி, மற்றொரு பக்கம் சங்கரன்கோவில். ரஸ்தா என்பது சிறு கிராமமே ஏன் இந்த பெயர் வந்தது என்று தெளிவாக தெரியவில்லை. ரஸ்தா என்றால் உருது மொழியில் முக்கிய சாலை அல்லது முக்கிய பாதை என்று பொருள். 

கேம்பலாபாத் 

திருநெல்வேலி - திருச்செந்தூர் சாலையில் இருக்கிறது கேம்பலாபாத் ஊர். தாமிரபரணி கரையில் இருந்த ஒரு கிராமத்தை வெள்ளம் புரட்டிப் போட,  ஆங்கில அதிகாரி கேம்பல் என்பவர் புதிய இடம் தந்து அந்த கிராம மக்களுக்கு உதவினார். அவரது பெயரில் உருவான புதிய ஊர் கேம்பலாபாத். இஸ்லாமிய மக்கள் அதிகம் இருப்பதால் பாத் சேர்ந்து கொண்டது. 

நாசரேத்

திருநெல்வேலிக்கு வந்த மிஷனெரிகள் உருவாக்கிய ஊர் நாசரேத். இயேசு கிறிஸ்து சிறு வயதில் வாழ்ந்த ஊர் பெயரை இந்த ஊருக்கு வைத்துள்ளனர். நாசரேத் தூத்துக்குடி மாவட்டத்தில் ஆழ்வார் திருநகரி - உடன்குடி சாலையில் உள்ள ஊர். தேரிக்காடுகளுக்கு அருகில் உள்ள ஊர். 

பேட் மாநகர்

இந்த ஊரும் வெள்ளத்தில் சிக்கிய ஊரின் பதிலாக வேறு ஒரு இடத்தில் உருவான ஊர். தூத்துக்குடி சப் கலெக்டர் ஆண்டனி பேட் இந்த ஊர் உருவாக உதவியதால் பேட் மாநகர் என்று அழைக்கப்படுகிறது. பேட் மாநகர் திருவைகுண்டம் - தூத்துக்குடி சாலையில் உள்ள ஊர். 




No comments:

Post a Comment