Friday, 23 October 2026

தூசான் நினைவுகள்

தூசான் நினைவுகள் என்றதும் மேனுவல் வால்வ் டிஈஆர் (TER) தான் சக தூசான் பொறியாளர்களுக்குத் தெரியும். குறிப்பாக சந்திரன் சாருக்கும், அஜித்க்கும். அதோடு வேறு சில நினைவுகள் இங்கே. 

ஆன்லைன் சுடோகு
தூசானில் சேர்ந்த புதிதில் சேத்துப்பட்டு அலுவலகத்தில் தூணுக்குப் பின்னால் இருக்கும் கேபின் தான் எங்களுக்கு ஒதுக்கப்பட்டது. நான், கோபி, ஸ்ரீனி சார், அபிலாஷ் தான் அங்கே இருந்தோம். குட்கியும், லாராவும் நுழைந்திரா காலம் என்பதால் பெரிய வேலை இல்லை. ரொம்ப ஃபோர் அடிக்கும். அபிலாஷ் ஒருநாள் ஆன்லைன் சுடோகு விளையாடிக் கொண்டிருந்தான். அதைப் பார்த்து நானும் விளையாட நினைத்தேன். ஆர்வமாக ஒருநாள் விளையாடிக் கொண்டிருக்கும் போது பின்னால் ஐடி டீம் எச்ஓடி சங்கர் சார் நின்று கொண்டிருந்தார். எவ்வளவு நேரம் பார்த்தார் என்று தெரியவில்லை. "அவ்வளவு தான் நம்மள முடிச்சுவிட்டீங்க போங்க" என்று நினைத்தேன். அவர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. 



பால் குண்டன்
தூசானில் நான் சிலருக்கு பட்டப்பெயர் வைத்தாலும் பெரிய அளவில் ரீச் ஆனது பால் குண்டன் தான். அவருக்கும் எனக்கும் என்ன சம்பந்தமும் இல்லை, பிறகெப்படி பேர் வச்சேன். கிரிக்கெட் கமெண்டரியில் ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் ரியான் ஹாரிஸை மில்க் கண்டெய்னர் (Milk Container) என்றனர். அதை நான் பால் குண்டன் என்று மொழியாக்கம் செய்து கொண்டேன். அதே போல் உருவமுடைய இவர் பால் குண்டன் ஆனார். 

சுபயா
அலுவலக மெயில் ஐடியில் அப்பா பெயர் முதலில் பிறகு பணியாளர் பெயர் வருவது போல் செய்திருந்தனர். கண்ட்ரோல் வால்வ் மீட்டிங்க்கு வந்த கொரியன்கள் செந்தில் குமாரை, "குமா" "குமா" என்று அழைத்தனர். எனது பெயரையும் அப்படி தான் கூப்பிடுவார்கள் என அகமகிழ்ந்து கொண்டேன். ஒருநாள் காலையில் 8.30க்கு ஒரு போன் வந்தது, எதிர்முனையாளர் சுபா என்கிற தொனியில் ஏதோ சொன்னார். சுபாவும் இல்லை கிபாவும் இல்லை என்று வைத்து விட்டேன். பிறகு 9.30க்கு மீண்டும் போன் மிஸ்டர் சுபயா என்றது கொரியனின் குரல். நான் ஒருவாறு யூகித்து மெயிலில் உள்ள சுப்பையாவை சுபயா என்று புரிந்து பேச தொடங்கினேன். பாவம் அந்த நபர் ஒரு மணி நேரம் சுப்பையா என்ற பெயரைச் சொல்லி பார்த்து இருக்கிறார். 

மேனுவல் வால்வ் டிஈஆர்
புரகியூர்மெண்ட்க்கும் இஞ்சினியரிங்கும் யுத்தம் நடந்த காலம் அது. வெள்ளிக்கிழமை மேனுவல் வால்வ் டிஈஆர் கொடுக்க வேண்டும். எனக்கு தெரிந்து எல்லாம் முடிந்து விட்டது. வெள்ளிக்கிழமை சில மணி நேரம் வேலை பார்த்தால் முடிந்து விடுவேன் என்பதால் அதை தொடங்கவே இல்லை. இந்நிலையில் முதல் பாதி விடுப்பு எடுத்தேன். அப்போது கூட வழக்கமாக ஏழு மணிக்கு அனுப்புவது போல அனுப்பி விடலாம் என்று நினைத்தேன். வீட்டில் சிறு சண்டை நிகழ கடுப்பில் விடுப்பை முழு நாளாக்கி விட்டேன். 
அஜித் அன்று காலண்டர் பார்க்கவில்லை, பார்த்திருந்தால் நாள் முழுக்க சந்திராஷ்டமம் தெரிந்து இருக்கும். அஜித் தலையில் டிஈஆர் விழ, தல பெயர் கொண்டவர் தலையை பிய்த்துக் கொண்டது தரமான சம்பவம். 

கௌஷிக்காக குறுக்கே வந்த காதர்
நான் மூன்று முறை சைட்க்கு சென்றுள்ளேன். மூன்று முறையும் எந்த காரணமும் கிடையாது அல்லது சொல்லப்படவில்லை. குட்கி சைட் இரண்டாவது முறை சென்ற போது காதரும் உடன் வந்தார். காதர் எதையும் முன்வந்து செய்யும் ஆர்வக்கோளாறு என்பதால் ஏர்போர்ட் கார் பில், சாப்பாட்டு பில் என எல்லாத்தையும் அவரே பார்த்துக் கொள்வார். நான் போர்டிங் பாஸ் இரண்டையும் ஒட்டி கொடுத்தால் போதும். அந்த முறை சைட்க்கு சென்ற போது குவாலிட்டி ஹெட் கொரியன் ஒருவர் அழைத்தார். போய் பேசினோம். எனக்கு கேஎஸ்பியில் இருந்து கால் வர நான் போனோடு வெளியே வந்துவிட்டேன். ஸ்பூல் நிறைய டிராயிங்கோடு மேட்ச் ஆகவில்லை என்று சொல்லி இருக்கிறார்கள். 

காதர் அவர் வசம் இருந்த டிராயிங்கை எடுத்து செக் பண்ண காதர் வைத்திருந்த டிராயிங் ரிவிசன் 1ஏ, சைட் குவாலிட்டி வைத்திருந்தது ரிவிசன் 1. இதனால் தான் பிரச்சினை என அந்தக் கொரியன் 10 நிமிடங்கள் காட்டுக்கத்து கத்திவிட்டு தம் அடிக்க சென்றுவிட்டார். நான் உள்ளே சென்ற போது காதர் பாவம் போல இருந்தார். அப்புறம் நான் விவரத்தை சொன்னேன் ஐபிஆருக்காக டீடெய்ல் சேர்க்கப்பட்ட டிராயிங் 1ஏ, அதில் ஸ்பூல் எந்த மாற்றமும் இருக்காது என்று. இது தெரியாமல் அந்தக் கிழவன் திட்டிட்டான் என்றார் காதர். 


ராஜினாமா
ஒருநாள் நான் கண்ட கனவை சந்திரன் சாரிடம் சொன்னதுக்கு சந்திரன் சார் கடுப்பாகிவிட்டார். என்ன கனவுன்னா சந்திரன் சார் பேப்பர் போடுவது போன்ற கனவு. ஏன்யா உன் கனவுல கூட நான் பேப்பர் போடுவது தான் வருமா என்றார் சந்திரன் சார். 

பிளஸ்ஸருக்கு விலை பேசிய பெருசு
கொரோனா டிக்கிய பொழந்து கொண்டிருந்த காலம். பேப்பர் போட்டு விட்டதால் சம்பளம் வரவில்லை. சமாளித்து ஓட்டிக் கொண்டிருந்தேன். ஸ்ரீனி சாரிடம் இருந்து போன், சார் நீங்க பெங்களூரு போறதுனால தமிழ்நாடு ரிஜிஸ்டரேசன் வண்டியை கொண்டு போனா நிறைய பிரச்சினை வரும். அதனால வண்டிய எங்கிட்ட கொடுத்திருங்க விலை பேசிக்கலாம் என்றார். ஒகே சார் நான் பெங்களூரு போனா சொல்றேன் என்று சொல்லி வைத்துவிட்டேன். 


இப்போதைக்கு இது போதும், இன்னும் நினைவுகளின் தொடர்ச்சியை பதிவு செய்கிறேன். 

No comments:

Post a Comment