Sunday, 30 July 2023
இரட்டை பனைமரங்கள்
Saturday, 29 July 2023
மூன்று ஆலமரங்கள்
முதல் ஆலமரம்
கீழக்குளத்தின்
கிழக்குக் கரையில்,
எங்கள் பகுதியின் அடையாளம்,
ஆலமரத்தை வைத்து
புதியவர்களுக்கு முகவரி
சொன்னோம் !
முதல் முறையாக பேருந்து
வந்து திரும்பியதும்
ஆலமரத்தின் அருகில் தான் !
வெட்டி வீழ்த்தப்பட்ட
பெரிய சாம்ராஜ்யம் அது !
இரண்டாம் ஆலமரம்
மேலக்குளத்தின் கரையில்
மாலையில் அடையும்
பறவைகளின் சத்தம்
அடங்க நேரம் எடுக்கும்.
பறவைகளின் எச்சமும்
நசுங்கிய ஆலம்பழங்களாய்
இருக்கும் குளத்துப் பாதை !
வயதாகிய மரம்
பெருமழையின் காற்றில்
மரணித்து விட்டது !!
மூன்றாம் ஆலமரம்
கீழக்குளமும் ஓடையும்
சந்திக்கும் இடத்தில்
விழுது பரப்பி இருக்கிறது !
எங்கள் தோட்டத்திற்கு
செல்லும் வழியில் இன்றும்
இருக்கிறது உயிர்ப்புடன் !
யாரும் இளைப்பாறலாம்
கால்நடைகளே அதிகம்
இளைப்பாறுகிறது
இந்த ஆலமரத்தடியில் !!!
Wednesday, 19 July 2023
மணிப்பூர்
மனதை உலுக்குகிறது
மணிப்பூர் நிகழ்வுகள்!
இயற்கை எழில் கொஞ்சும்
இந்திய பகுதி தானே இது
கிரிக்கெட்டுக்கு ஒருமைப்பாடு
காட்டும் நாம்
மணிப்பூருக்கு மௌனம்
காப்பது ஏன்?
வட கிழக்கு மாநிலம்
வருமான குறைவான மாநிலம்
என்று நிலவரம் இருக்கலாம்
தன்மானத்தை இழக்கும்
கலவரங்கள் எதற்கு !
மணிப்பூரும் இந்திய
தாயின் குழந்தை
மனிதனை வேட்டையாடும்
மனித மிருகங்களுக்கு
தண்டனை தாருங்கள்
அரசே
தண்டமாக இருந்தது போதும்!!!
Friday, 14 July 2023
ஐயர் வீடு
Wednesday, 5 July 2023
கானமயில்
"கானமயிலாட கண்டிருந்த வான்கோழி" என்று ஒளவை மூதுரையில் பாடிய கானமயில் இன்று தமிழ்நாட்டில் கிடையாது.
மிக மோசமாக அருகி வரும் உயிரினம், தமிழ்நாடு உட்பட 11 மாநிலங்களில் இருந்த கானமயில்கள் இப்போது ராஜஸ்தான், குஜராத், மகாராஷ்டிரா, கர்நாடகா, ஆந்திராவில் மட்டுமே உள்ளது. எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா 150. (2018 கணக்கெடுப்பின்படி).
1930ல் ஒகேனக்கல் மற்றும் கோவையில் அவை இருந்ததாக சொல்கிறார் சூழலியல் ஆய்வாளர் தியோடர் பாஸ்கரன்.
கானமயில், பறக்கும் பறவைகளில் அதிக எடை கொண்ட பறவை. (நெருப்பு கோழிக்கு பறக்க தெரியாது). இதன் எடை 8 கிலோ முதல் 15 கிலோ. அதிகம் பறப்பது இல்லை பெரும்பாலும் நடந்தே இரை தேடி கொள்பவை.
புல், பூண்டுகள் மற்றும் பூச்சிகளை உண்ணும் அனைத்துண்ணி கானமயில்.
கானமயில் வாழிடங்கள் வறண்ட நில புல்வெளிகள், தற்போது இருக்கும் 90% கானமயில்கள் ராஜஸ்தானில் மட்டுமே உள்ளது. ராஜஸ்தான் மாநில பறவையும் கூட.
1960களில் சலீம் அலி என்ற சூழலியல் அறிஞர் கானமயிலை தேசிய பறவையாக அறிவிக்க குரல் கொடுத்தார். அதன் ஆங்கிலப் பெயர் Great Indian Bustard உச்சரிப்பு பிரச்சினை ஆகும் என்ற காரணத்தால் கைவிடப்பட்டது.
கானமயிலின் அழிவுக்கு முக்கிய காரணம் வேட்டை, ஆங்கிலேயர் காலத்தில் அதிகமாக வேட்டையாட பட்டுவிட்டது. அடுத்த காரணம், கானமயில்களுக்கு நேர் பார்வை கிடையாது, பக்க வாட்டு பார்வை அதனால் மின் கம்பிகளின் அடிப்பட்டு நிறைய இறந்துவிட்டன.
கானமயில் தரையில் முட்டை இடும் இனம், இதனால் நாய், நரி, உடும்பு போன்றவை முட்டையை எளிதில் சூரையாடிவிடுவது மூன்றாம் காரணம்.
அச்சம் நிறைந்த பறவை என்பதால் இனப்பெருக்கத்திலும், குஞ்சுகளை காப்பாற்றுவதிலும் பின்தங்கியுள்ள பறவையினம்.
தற்போது ராஜஸ்தான் மாநில பாலைவன பூங்காவில் கானமயிலை காப்பாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
ஆனாலும் காற்றாலை, சூரிய மின் சக்தி என தனியார் நிறுவனங்கள் ராஜஸ்தான், குஜராத்தை படை எடுக்கின்றன.
Monday, 3 July 2023
பாலை நிலப் பயணம் - புத்தகம் பற்றி
வாசிப்பது எப்படிக்கு பின் எழுத்தாளர் செல்வேந்திரன் ஆக்கத்தில் நான் வாசித்த இரண்டாவது புத்தகம் பாலை நிலப் பயணம்.
எனக்கு பயணங்கள் மிகவும் பிடித்தவை. ஆனால் ஏனோ பயணங்கள் அமைவதில்லை. பயணங்கள் பற்றிய புத்தக ஆர்வமும் அதிகமாகிவிட்டது.
பாலை நிலப் பயணம் என்றதும் வளைகுடா நாடுகளை வளைய வளைய சுற்றிய அனுபவம் என்றோ, ஆப்பிரிக்க நாடுகளை அணுகிய பயணம் என்றோ நினைக்க வேண்டாம்.
இது நம் நாட்டின் பாலைநில மாநிலங்கள் ராஜஸ்தான் மற்றும் குஜராத்தை சுற்றிய அனுபவங்கள். பயணத்தில் வேறுபட்ட ரசனைகள் கொண்ட மனிதர்கள் அவர்களின் தேடல் என அழகாக விவரிக்கிறார்.
வாசிக்க வாசிக்க நாமே பாலை நிலத்தில் பயணிக்கும் பரவசம் தொற்றிக் கொள்கிறது.
ஜெய்ப்பூர் விமான நிலையத்தில் தொடங்கி அகமதாபாத் விமான நிலையத்தில் முடிகிறது இந்த புத்தகம்.
ஓசியான், கிச்சான், ஜெய்சல்மார், பர்மார், பூஜ் என்ற பகுதிகளில் சிலவற்றை, டிராவல் எக்ஸ்பி சேனலில் மட்டுமே பார்த்த எனக்கு எழுத்து மூலம் காட்சிப்படுத்தியது சுவாரஸ்ய அனுபவமாக இருந்தது.
என்பு என்ற சொல்லின் இன்னொரு பொருள், தங்க உப்பளம் என வழி நெடுக காட்டுமல்லி.
கானமயில் தேசிய பறவையாக இருந்திருக்க வேண்டும்.ஆங்கில பெயர் பஸ்டார்ட் உச்சரிப்பால் தகுதி இழந்தது என்பது புது தகவல் தருகிறார்.
" எவளாச்சும் ஒரு செங்கல் நட்டு வச்சாளா" என்று பாட்டு மட்டுமே கேட்டவர்களுக்கு, ராணி கீ வாவ் வரலாறு வியக்க வைக்கும்.
ராஜஸ்தானையும் குஜராத்தையும் சுற்றி பார்க்க தூண்டுகிறது இந்த புத்தகம்.