Wednesday, 5 July 2023

கானமயில்

"கானமயிலாட கண்டிருந்த வான்கோழி" என்று ஒளவை மூதுரையில் பாடிய கானமயில் இன்று தமிழ்நாட்டில் கிடையாது.



மிக மோசமாக அருகி வரும் உயிரினம், தமிழ்நாடு உட்பட 11 மாநிலங்களில் இருந்த கானமயில்கள் இப்போது ராஜஸ்தான், குஜராத், மகாராஷ்டிரா, கர்நாடகா, ஆந்திராவில் மட்டுமே உள்ளது. எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா 150. (2018 கணக்கெடுப்பின்படி).

1930ல் ஒகேனக்கல் மற்றும் கோவையில் அவை இருந்ததாக சொல்கிறார் சூழலியல் ஆய்வாளர் தியோடர் பாஸ்கரன்.

கானமயில், பறக்கும் பறவைகளில் அதிக எடை கொண்ட பறவை. (நெருப்பு கோழிக்கு பறக்க தெரியாது). இதன் எடை 8 கிலோ முதல் 15 கிலோ. அதிகம் பறப்பது இல்லை பெரும்பாலும் நடந்தே இரை தேடி கொள்பவை.

புல், பூண்டுகள் மற்றும் பூச்சிகளை உண்ணும் அனைத்துண்ணி கானமயில்.

கானமயில் வாழிடங்கள் வறண்ட நில புல்வெளிகள், தற்போது இருக்கும் 90% கானமயில்கள் ராஜஸ்தானில் மட்டுமே உள்ளது. ராஜஸ்தான் மாநில பறவையும் கூட.

1960களில் சலீம் அலி என்ற சூழலியல் அறிஞர் கானமயிலை தேசிய பறவையாக அறிவிக்க குரல் கொடுத்தார். அதன் ஆங்கிலப் பெயர் Great Indian Bustard உச்சரிப்பு பிரச்சினை ஆகும் என்ற காரணத்தால் கைவிடப்பட்டது.

கானமயிலின் அழிவுக்கு முக்கிய காரணம் வேட்டை, ஆங்கிலேயர் காலத்தில் அதிகமாக வேட்டையாட பட்டுவிட்டது. அடுத்த காரணம், கானமயில்களுக்கு நேர் பார்வை கிடையாது, பக்க வாட்டு பார்வை அதனால் மின் கம்பிகளின் அடிப்பட்டு நிறைய இறந்துவிட்டன. 

கானமயில் தரையில் முட்டை இடும் இனம், இதனால் நாய், நரி, உடும்பு போன்றவை முட்டையை எளிதில் சூரையாடிவிடுவது மூன்றாம் காரணம்.

அச்சம் நிறைந்த பறவை என்பதால் இனப்பெருக்கத்திலும், குஞ்சுகளை காப்பாற்றுவதிலும் பின்தங்கியுள்ள பறவையினம்.

தற்போது ராஜஸ்தான் மாநில பாலைவன பூங்காவில் கானமயிலை காப்பாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 

ஆனாலும் காற்றாலை, சூரிய மின் சக்தி என தனியார் நிறுவனங்கள் ராஜஸ்தான், குஜராத்தை படை எடுக்கின்றன. 

No comments:

Post a Comment