Friday, 28 August 2026

எனது ஆசிரியர்கள் 6

எனது ஆசிரியர்களில் இப்போது கல்லூரி பேராசிரியர் நாகராஜன் சார். 

கல்லூரியில் ஒரு சில ஆசிரியர்கள் மட்டுமே மூன்று செமஸ்டர்கள் பாடம் எடுத்தவர்கள் அவர்களில் ஒருவர் நாகராஜன் சார். 

6வது செமஸ்டரில் கேம் (CAM) , 7வது செமஸ்டரில் எண்விரான்மென்டல் (Environmental), 8வது செமஸ்டரில் இஞ்சினியரிங் மேனேஜ்மெண்ட் (Engineering Management) எடுத்தார். 

நாகராஜன் சார் என்றாலே ஜஸ்ட் இமாஜிங் ( just imagine) என்ற வார்த்தை நினைவில் வரும். அந்த அளவுக்கு அடிக்கடி அந்த வாசகத்தை பயன்படுத்துவார். அவர் எதுக்கு கோபப்படுவார், எதுக்கு கோபப்படமாட்டார் என்று கண்டுபிடிப்பது சிரமம். 

ஒருநாள் சன்குமாரை பார்த்து "களக்காட்ட்ட்டு காரா ஒறங்கினயாடா" என்றார். சன் குமார், நான் தூங்கலனு சொல்ல, நீ தூங்கினத பார்த்தேன்டா என்றார். ஒரு வழியாக சன் குமார் நான் தூங்கினேன்னு சொல்லி முகம் கழுவிவிட்டு வந்தான். 

நாகராஜன் சார் வகுப்புகளை விட அவரை இமிடேட் பண்ணி வேலப்பன் செய்யும் சேட்டைகள் சுவாரஸ்யமானவை. வேலப்பன் அவரது குரல் மற்றும் உடல் மொழியை எடுத்து  அழகாக செய்து காட்டுவான். 

முதல் பீரியட் அவர் எடுத்தால், எவ்வளவு லேட்டாக சென்றாலும் அனுமதித்து அட்டென்டஸ் தருவார். முதல் பீரியட் எடுக்க வந்தால் டிராபிக் போலீஸ் மாதிரி கைய ஆட்டிட்டு இருக்க வேண்டி இருக்க என்பார். 

நாகராஜன் சாருக்கு கேபின் கேட் (CAD)லேப் அருகில் என்பதால் மெக்கானிக்கல் துறையை விட்டு ஒதுங்கி இருப்பது போலவே இருக்கும். பாடங்களை தாண்டி பொதுவான விசயங்களை நிறைய சொல்வார். அவர் எடுத்த இரண்டு பாடங்கள், பொது பாடங்கள் தான். 

பேருந்து நிலையங்களில் பேருந்துகளை நேராக நிறுத்தாமல் குறுக்காக நிறுத்துவது ஏன்? ஓட்டப் பந்தயங்களில் ஏன் ஆன்டி கிளாக்வைஸ் (anti clockwise) திசையில் ஓடுகிறார்கள் என்பது போன்ற அறிவியல் பூர்வமான விசயங்களை வகுப்பில் விவாதிப்பார். 

ஒருநாள் ரூபேஸை கூப்பிட்டு பரிட்சை பேப்பரை எடுத்து வரச் சொன்னார். எதுக்கு குறிப்பிட்டு ரூபேஸை சொல்கிறார் என்று ஆச்சயர்த்தில் எல்லாரும் இருந்தோம். பேப்பர் கொடுத்த பின், ரூபேஸை கூப்பிட்டு உன் பேப்பரில் எழுதியிருப்பதை வாசித்து காட்டு என்றார். ஏதோ சினிமா பாட்டை எழுதி வைத்திருக்கிறான் என்று நாங்கள் காத்திருந்தோம். ரூபேஸ் எதுவும் எழுதவேயில்லை. ஒரு ஓம் அல்லது பிள்ளையார் சுழி, ஒரு புள்ளி கூட வைக்காமல் எப்படிடா பேப்பர் கொடுக்க மனசு வருது என்றார். 

நாகராஜன் சார் தான் இரண்டாவது செமஸ்டரில் எங்களோடு ஐவி (இண்டஸ்ட்ரியல் விசிட்) வந்தார். 3ம் ஆண்டில் எங்களோடு டூர் வர மாட்டேன் என்றார். நாகராஜன் சார் தான் மெக்கானிக்கல் இஞ்சினியரிங் துறையின் வேலைவாய்ப்பு ஏற்பாடுகளை (placement cell) பார்த்துக் கொண்டார். 

நாகராஜன் சார் நினைவில் நீங்கா ஆசிரியர், வேலப்பனும்.... 

No comments:

Post a Comment