Tuesday, 26 August 2025

நீண்ட தூர/நேரப் பேருந்துகள்

நெல்லையில் நகரப் பேருந்தில் தனியார் பேருந்துகள் அதிகம். தற்போது இரு சக்கர வாகனங்கள் மற்றும் இலகுரக வாகனங்கள் புழக்கத்தால் பொது போக்குவரத்து பயன்படுத்துவோர் எண்ணிக்கை குறைந்து விட்டது. மேலும் மகளிர் இலவச பேருந்து தனியார் பேருந்துகளை முடக்கி விட்டது. மேலும் தனியார் பேருந்துகளின் அராஜகம் அதிகமாகி உள்ளது. கட்டண உயர்வு, பேருந்து நிறுத்தத்தில் இறங்கும்/ஏறும் முன் பேருந்தை இயக்குவது, அரசு பேருந்து ஓட்டுனர், நடத்துனரிடம் சண்டை போடுவது என. 

நெல்லையில் நீண்ட தூரத்திற்கு இயக்கப்பட்ட தனியார் பேருந்துகள் பற்றியும் அவற்றின் தற்போதைய நிலை குறித்தும் பார்ப்போம். 

35 - நெல்லை சந்திப்பு - வடக்கு செழியநல்லூர் / ராஜா புதுக்குடி

Antony பஸ் கம்பெனியின் SK பஸ், ஜங்ஷனில் இருந்து வடக்கு செழியநல்லூர் செல்லும். ஜங்ஷனில் இருந்து ராம் தியேட்டர், தச்சநல்லூர், தாழையூத்து, கங்கை கொண்டான் வழியாக செல்லும். கங்கை கொண்டானுக்கு பிறகு சன்னது புதுக்குடி வரை மதுரை நெடுஞ்சாலையில் சென்று பிறகு இடது புறம் திரும்பி கிராமச் சாலையில் வடக்கு செழியநல்லூர் வரை செல்லும். இத்தி குளம், காந்தீஸ்வரன் புதூர், வடக்கு செழியநல்லூர்,  மேட்டு பிராஞ்சேரி போன்ற கிராமங்களுக்கான பேருந்து. திரும்பி வரும் போது மீண்டும் மதுரை நெடுஞ்சாலையில் சென்று வலது புறத்தில் உள்ள ராஜா புதுக்குடிக்கும் சென்று வரும் பேருந்து. தச்சநல்லூர் - தாழையூத்து மற்றும் தாழையூத்து - கங்கை கொண்டானுக்கு இடையில் உள்ள சின்ன ஊர்களுக்கு இந்த பஸ் ஆதாரம். 

33A -தெற்கு செழியநல்லூர் - ஹைகிரவுண்ட்

ஹைகிரவுண்ட்டில் இருந்து மார்கெட், ஜங்ஷன், தாழையூத்து, தென்கலம் வழியாக தெற்கு செழியநல்லூர் வரை செல்லும் Antony பஸ். 

தாழையூத்துக்கு அடுத்துள்ள  சங்கர் பாலிடெக்னிக், தென்கலம், தென்கலம் புதூர், நல்லம்மாள்புரம், பல்லிக்கோட்டை, அலவந்தான் குளம், நெல்லை திருத்து மற்றும் தெற்கு செழியநல்லூர் ஆகிய கிராமங்களுக்கான பேருந்து. ஜங்ஷன் பேருந்து நிலையத்தில் நுழையும் போதே கூட்டம் நிறைந்து விடும். இந்த ஊர்களில் தென்கலம் மட்டும் வித்தியாசமான ஊர். மற்ற கிராமங்கள் விவசாயம் சார்ந்தவை. தென்கலம் கிராம நிலையை விட்டு உயர்ந்து விட்டது. ஆனால் நகர் அஸ்தஸ்தை எட்டவில்லை. முழுக்க வியாபாரம் சார்ந்த ஊர். பீடித்தொழில், அவுரி, பருத்தி, மிளகாய் வத்தல் வியாபாரம் பெருமளவில் நடக்கும். குறுகலான சாலைகள் இந்த சாலைகளில் ஒரு பேருந்து மட்டுமே செல்ல முடியும். எதிரில் வேறு பேருந்து வந்தால் ஏதாவது ஒரு பேருந்து பின்னால் செல்ல வேண்டும். ஓட்டுநருக்கு சிரமமான சாலை. 

(தற்போது இந்தப் பேருந்து ஹைகிரவுண்ட் வருவதில்லை. சில நேரங்களில் தென்கலம் வரை மட்டுமே இயக்கப்படுகிறது) .


33C - ஹைகிரவுண்ட் - மானூர் / மதவக்குறிச்சி

ஜங்ஷனில் இருந்து தாழையூத்து வழியாக நாஞ்சான்குளம், வெங்கலப்பொட்டல் கிராமங்களை கடந்து சங்கரன்கோவில் நெடுஞ்சாலையில் ரஸ்தாவில் இருந்து மானூர் வரை செல்லும் SBC பேருந்து. 

மதுரை நெடுஞ்சாலையையும், சங்கரன்கோவில் நெடுஞ்சாலையையும் இணைக்கும் ஒரே பேருந்து இது தான். மானூர் பகுதியில் இருப்பவர்கள் சங்கர் பாலிடெக்னிக் செல்ல ஏதுவான பேருந்து. ரஸ்தாவில் இருந்து மேற்கே மதவக்குறிச்சி கிராமம் வரை செல்லும். 

(தற்போது ஆண்டவர் விலாஸ் என்ற பெயரில் இயங்குகிறது. ஆனால் மானூர் செல்வதாக தெரியவில்லை). 

16 - நெல்லை சந்திப்பு - கொங்கராயங்குறிச்சி

 ஜங்ஷனில் இருந்த பாளை பஸ் ஸ்டாண்ட் , ஹைகிரவுண்ட், கேடிசி நகர், வல்லநாடு வழியாக கொங்கராயங்குறிச்சி செல்லும் SRS மற்றும் GMT பஸ்கள். 

வல்லநாடு வரை தூத்துக்குடி நெடுஞ்சாலையில் செல்லும் இந்தப் பேருந்துகள். வல்லநாடுக்குப் பிறகு கிள்ளி குளம், மணக்கரை, ஆறாம் பண்ணை வழியாக கொங்கராயங்குறிச்சி செல்லும். இந்த சாலை வல்லநாடு பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிக்கு அருகில் உள்ளது. கிள்ளி குளம் வேளாண்மை கல்லூரிக்கு செல்லும் பேருந்துகள் இவை. 

(தற்போது GMT பேருந்து இயங்கவில்லை. SRS உள்ளது, ஆனால் கொங்கராயங்குறிச்சி செல்கிறதா எனத் தெரியவில்லை). 


34 - நெல்லை சந்திப்பு - பாப்பாக்குடி

ஜங்ஷனில் இருந்து டவுண், பேட்டை, கல்லூரி, முக்கூடல் வழியாக பாப்பாக்குடி வரை செல்லும் SSMS பேருந்து. 

கல்லூர், முக்கூடல் போன்ற ஊர்களுக்கு நிறைய புறநகர் பேருந்துகள் இருந்தாலும் நடுவில் இருக்கும் சிறிய நிறுத்தங்களுக்கு ஆதாரமான பேருந்து. 

(இப்போது பாப்பாக்குடி வரை அதிகம் செல்வது இல்லை. சுத்தமல்லி விலக்கு வரை தான். அதுவும் மதிதா கல்லூரியை நம்பி) 

36B - நெல்லை சந்திப்பு - வீரவநல்லூர்

ஜங்ஷனில் இருந்து டவுண், பேட்டை, கல்லூர், சேரன்மகாதேவி வழியாக வீரவநல்லூர் வரை செல்லும் DPT பேருந்து. 

வீரவநல்லூரை பொறுத்தவரை நிறைய புறநகர் பேருந்துகள் உண்டு. பயணியர் ரயில் நிலையமும் இருப்பதால் இந்தப் பேருந்து வழியில் இருக்கும் ஊர்களில் வசதிக்கு மட்டுமே. 

(இந்தப் பேருந்து தற்போது ஸ்ரீமதி என்ற பெயரில் இயங்குகிறது). 

இவை போக மற்ற பேருந்துகள்

39A, மருத குளம் பேருந்து முன்பு TPC ராஜா தற்போது VSP (அகிலா) 



38 கோவை குளம் பேருந்து - முன்பு DANIEL இப்போது ராஜா புதிய பேருந்து நிலையம் வரை இயக்கப்படுகிறது. 

39B தெய்வநாயகப்பேரி - முன்பு DSR, தற்போது ராஜா. 

46 கீழப்பிள்ளையார் குளம் பேருந்து - SBC இன்று, Antony என்று இயங்குகிறது. 

இந்த (எங்க ஊர்) பேருந்து குறித்து.

https://markazhipani.blogspot.com/2020/04/sbc-46.html

32 கருங்குளம் பேருந்து - இப்போது வேணி இயங்குகிறது. 

16B கலியாவூர் பேருந்து - முன்பு KVV பிறகு சரவண பாலாஜி தற்போது வேறு பெயரில் இயங்குகிறது. 

37/11 பள்ளமடை பேருந்து - முன்பு DHANAPERINBAM, இப்போது ரெகோபாத் என்ற பெயரில் இயங்குகிறது. 

10/30 கோபாலசமுத்திரம் பேருந்து - முன்பு IMPERIEL, இப்போது வேணி பேருந்து இயங்குகிறது. 

15 மணப்படைவீடு பேருந்து - வேணி பேருந்து, இப்போது (சுந்தரி) ஹைகிரவுண்ட் வரை இயங்குகிறது. 

19 ஆழிக்குடி/அனவரதநல்லூர் - முன்பு ARG, இப்போது SMC - இயங்குவதாக தெரியவில்லை. 

23 நரசிங்கநல்லூர் / கருங்காடு பேருந்து- முன்பு DPT இப்போது SMC

35 அணைத்தலையூர் - முன்பு SRS, தற்போது வேணி

11A விட்டிலாபுரம் பேருந்து - இப்போதும் Andrews பேருந்து இயங்குகிறது

13 திருமலைகொழுந்துபுரம் பேருந்து- முன்பு SPM, இப்போது Andrews.


12 கீழப்பாட்டம் பேருந்து - இப்போதும் SPR என்ற பெயரில். 

12 நடுவக்குறிச்சி - முன்பு ARG, இப்போது பாலமிதுஷா என்ற பெயரில் இரண்டு வேணி பேருந்துகள் இயக்கப்படுகின்றன. 

36 சேரன்மகாதேவி பேருந்து - ADJ பேருந்து உள்ளது. DPR - ஸ்ரீமதியாக மாறியுள்ளது. 

11/52 - அய்யனார்குளம்பட்டி பேருந்து - இப்போதும் SGKR பேருந்து இயங்குகிறது. 

26 - சிவந்திபட்டி  - முன்பு JRT, இப்போது ஸ்ரீ ராமஜெயம் மற்றும் GNR என்ற பெயரில். 

நாரணம்மாள்புரம் பேருந்து - GMT பேருந்து இப்போது இல்லை. 

ஆழ்வார் கற்குளம் பேருந்து - இப்போது ராஜா வல்லநாடு வரை செல்கிறது. 

3/33 - நாஞ்சான்குளம் பேருந்து - அதே ANTONY என்ற பெயரில். 

9-பாப்பையாபுரம் / ராஜவில்லிபுரம் வேணி பேருந்துகள் இயக்கப்படுகின்றன. 



No comments:

Post a Comment