அன்னா என்ற பெயரைக் கேட்டதும் நான் ரஷ்யப் பெயர் போல உள்ளதே என நினைத்தேன்.
அன்னா, இயக்கம் ஒரு போராளிக்கு வைத்த பெயர். வாசு முருகவேல் அவர்களின் எழுத்துக்கள் எனக்கு மிகவும் பிடித்தவை. மூத்த அகதி நாவலுக்கு இலக்கியப் பரிசு கிடைத்தது. ஆக்காண்டி நாவல் பெரிய வீச்சை ஏற்படுத்தியது.
அன்னாவை குறுநாவல் வடிவில் எழுதியுள்ளார். குறு நாவலில் உள்ள ஒரு வசதி ஒரே நாளில் வாசித்து விடலாம்.
ஹலால் பாலு, கூல் கிளின்டன், முகமூடி ராசன் என பாத்திரங்கள் வருகின்றன. யாரை பற்றியும் பெரிய விவரணைகள் கிடையாது. சில வரிகளிலே நமக்கு அவர்களைப் பற்றி ஒரு சித்திரத்தை கடத்தி விடுகிறார்.
பெரிய வலியை கூட சில வரிகளில் சொல்லிவிட்டார். பசுமாடு அனத்தி கொண்டிருந்தது. பறந்து வந்த செல் தென்னந்தோப்பை தாண்டி விழுந்ததும் மாட்டின் ஓசை இல்லை என்று எழுதி இருக்கிறார்.
வாசுவுக்கே உரித்தான பகடியும் ஆங்காங்கே உள்ளது. கல்லுப்பிள்ளையார் முகத்தில் தெரிந்த ஒளியை அன்னா கவனிக்கவில்லை என்று போகிற போக்கில் சொல்லி செல்கிறார்.
இந்த நாவலை புதிய முறையில் எழுதியுள்ளார். ஓர் இரவில் நடக்கிற கதை, ஆனால் கடந்த காலத்திற்கு சென்று நிகழ்காலத்திற்கு வந்து என முன்னும் பின்னுமாக எழுதியுள்ளார்.
இந்த நாவலில் நான் கற்றுக் கொண்ட புதிய சொல் ஐமிச்சம் (ஐயம் + அச்சம் கலந்த நிலை) என்ற சொல்.
கிளிநொச்சி தான் களம் என்றாலும் இலக்கிய பரப்பில் போற்றப்பட வேண்டிய படைப்பு.
No comments:
Post a Comment