Friday, 11 July 2025

உறவுகள்

தாத்தா

வெற்றிலையை மறக்க

பீடியை கையில் எடுத்தார்! 

ஊர் கடைகளில்

சொக்கலால் பீடி 

அவருக்கென இருக்கும்! 

இப்போது சொக்கலால்

பீடி இருக்கா என்று

தெரியவில்லை! 

தாத்தாவின் நினைவுகளோடு

சொக்கலாலும் இருக்கிறார்!!! 

****

அப்பா

துடுப்பாட்டம் இதழில்

எழுதுவதால் சமூக வலைதள

நண்பர்கள் ஆசிரியர் என

என்னை அழைக்கிறார்கள்! 

ஆசிரியரின் மகனுக்கு

இதைவிட பெருமை

என்ன உள்ளது!!! 

****

மனைவி

அலைபேசியில் சமையல் 

குறிப்பு ஒலிக்க

அசந்து தூங்கும்

அவள் புன்முறுவல்

பூக்கிறாள்! 

அநேகமாக வாணலியில்

வழங்கும் வெங்காய பதம்

காரணமாக இருக்கலாம்! 

அவ்வளவு சுருங்கிவிட்டது

அவளின் உலகம்!!!

****

அம்மா

இந்த ஆண்டு 40ஐ

தொடப்போகிறேன்

திருவிழாவில் குச்சி ஐஸ்

வாங்கி சாப்பிடும்போது

அம்மா வந்து 

அடிப்பாளோ என்ற

பயத்துடனே!!! 

****

மகள்

புதிய பள்ளி என்று

ஆர்வமுடன் சென்ற

மகளுக்கு சனிக்கிழமை

வேலைநாள் இருப்பது

பிடிக்கவில்லை! 

வீட்டில் அவள் 

வைத்திருக்கும் பள்ளியில்

ஏழு நாளும் வேலைநாள்! 

எதுவும் தெரியாமல்

அடி வாங்கும் ஒற்றை

மக்கு மாணவன் நான்!!! 

****

நண்பன்

வேலைப்பளு, 

மனைவி மீதான கோபம், 

கோவில்களின் வரலாறு, 

மகள்களின் நடனம், 

சென்ற இடங்கள், 

பார்த்த படங்கள்

எல்லாவற்றையும்

பகிர்கிறான் வாட்ஸ்அப்

ஸ்டேட்டஸ் வாயிலாக!!! 

****

ஆச்சி

அவித்த உருளைக்கிழங்கை

குழம்பில் போடுவதற்கு முன்

எனக்கென இரண்டு துண்டுகள்

வைத்திருப்பாள் ! 

திருவிழா நாளில்

எனக்கு தர முந்தியில்

காசு முடிந்திருப்பாள்! 

இன்னும் கொஞ்சம் காலம்

இருந்திருந்தால்

என் மகளுக்கு காட்டி

இருப்பேன் பாம்படம்

அணிந்து வெள்ளந்தி

சிரிப்போடு இருக்கும்

பூட்டி ஆச்சியை!!! 






1 comment:

  1. நினைவுகள் தான் வாழ்க்கை, வாழும் போதும், வாழ்ந்த பின்னும்.

    ReplyDelete