Tuesday, 31 October 2023

மாலத்தீவு

பிஎட் முடித்து, எம்எஸ்ஸியில் சில அரியர்கள் வைத்திருந்தேன். வேலை இல்லை, தேடிக் கொண்டிருப்பதாக நினைத்தேன். தினமும் தோப்புக்கு சென்று குளித்து தென்னைகளை பார்த்து விட்டு வருவது அன்றாடம். வேலை இல்லாததால் வீட்டில் மரியாதை குறைந்து கொண்டே வருகிறது. எதை செய்தாலும் திட்டு. குறிப்பாக கிரிக்கெட் போட்டிகளை பார்க்க முடியவில்லை. 

சொந்தகாரர் ஒருத்தர் வந்து வேலை இருப்பதாக சொன்னார். ஹாஸ்டல் வார்டன் வேலை, நானும் வேறு வழியில்லாமல் சம்மதித்தேன். வார்டன் வேலை, ஏதாவது கணக்கு வாத்தியார் மெடிக்கல் லீவு எடுத்தால் அங்கு வகுப்பு எடுக்க செல்ல வேண்டும். மற்றபடி பெரிய வேலை கிடையாது என நினைத்து சம்மதித்தேன்.
5000 சம்பளம். காத்திருப்பில் இருந்தால் அதே பள்ளியில் ஆசிரியர் வேலை கிடைக்கும். எனக்கும் சரியென பட்டது. 

இங்கு வந்த பிறகு தான் தெரிந்தது வார்டன் வேலை எவ்வளவு கஷ்டம் என்று. ஊரில் ஏதாவது பிரச்சினை கைமீறிப் போனால் கெட்டவார்த்தை பேசி எந்த பிரச்சனையும் சமாளித்துவிடுவேன்.

ஆனால் மாணவர்களை என்னால் மேய்க்கவே முடியவில்லை. கிள்ளிட்டான், அடிச்சிட்டான் என்று சிலர். சார் அவன் சேட்டை பண்றான் என்று சிலர். வீட்டுக்கு போறேன் என்று அழும் சிலர்.

சமையல் பணியாளர்களை பற்றி சொல்லவே வேண்டாம், நான் சொல்வது எதையும் கேட்கவே மாட்டார்கள். குளிச்சிட்டு வேலை பாருங்க என்று சொன்னால் ஈரம் சொட்ட சொட்ட நின்று பரிமாறுவான்.

பள்ளியோடு இணைந்த விடுதி என்பதால் இரவு 9.30 வரை ஸ்டடி, அதற்கு பிறகு ப்ரையர், ப்ரையர் முடிச்சு தூங்க வேண்டும். சின்ன பையன்களுக்கு சீக்கிரமே தூக்கம் வரும். காலையில் 5 மணிக்கே எழுந்து குளிக்க வேண்டும். 5-6 தான் குளியல் நேரம்.

5 மணிக்கு பெல் அடித்துவிட்டு எல்லாரையும் எழுப்பி விட்டு நானும் குளித்து 6 மணி ப்ரேயருக்கு தயாராகி விடுவேன்‌. கிணற்றில் குளித்து பழகிய எனக்கு பாத்ரூம் குளியலில் திருப்தி இல்லை. ஆனால் ப்ரேயர் மனதிற்கு அமைதி தரும், புதிய நாளை துவக்க உந்துதல் தரும். மாணவர்களுக்கும் அதுபோல இருக்கும் என நம்பினேன்.

விடுதியில் மாபெரும் பிரச்சினை கழிவறை தான். போதுமான கழிவறை கிடையாது. நிறைய மாணவர்களுக்கு பயன்படுத்த தெரியாது. நான் தலைமை ஆசிரியரிடம் திரும்ப திரும்ப சொன்னதால் புதிதாக 5 கழிவறை கட்ட வேலை ஆரம்பித்துவிட்டது.

அடுத்த பிரச்சினை, மாணவர்களிடம் ஓரின சேர்க்கை. சின்ன பையன்கள் பலிகடா ஆவது பெரும் பிரச்சினை. அடுத்த பிரச்சினை சிரங்கு, யாருக்கு சிரங்கு பிரச்சினை என்றாலும் உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பி விடுவேன். விடுதி மாணவர்களுக்கு குறைந்த கட்டண மருத்துவமனை அருகில் உள்ளது.

மாணவர்களின் உடல் மொழி ஓரளவு புரிந்து ஓராண்டை ஓட்டி விட்டேன். மே மாத பாதியிலே அட்மிஷன் துவங்கும் என்பதால் மே பாதி வரை மட்டுமே லீவு.

மே மாத கடைசியில் ஒரு 65 வயது மதிக்கத்தக்க ஒருவர் தனது பேரன்கள் இருவரை விடுதியில் சேர்க்க வந்தார். மூத்தவன் 5ம் வகுப்பு, சின்னவன் 3ம் வகுப்பு. எங்கள் பள்ளியோடு இணைந்த ஆங்கிலப் பள்ளியில் சேர்ந்து விட்டாராம். 

விடுதியில் 6 வகுப்புக்கு மேற்பட்ட மாணவர்கள் மட்டுமே சேர்ப்போம், இவர்கள் சிறுவர்கள் என்றேன். தலைமை ஆசிரியரிடம் பேசி அனுமதி பெற்று விட்டதாக கூறினார் பெரிசு. ஹெட் மாஸ்டர் ஒரு கிறுக்கு **, என்று மனதில் தோன்றியது. வெளியில் வார்த்தைகளை கொட்டிவிடவில்லை.

பேப்பர் வெயிட்டை கையில் எடுக்க முயற்சி செய்து கொண்டிருந்தான் சின்னவன். இவங்க அப்பா, அம்மா என்ன பண்றாங்க என்றேன். அவங்க ரெண்டு பேரும் டீச்சர்ஸ் மாலத்தீவுல இருக்காங்க. அங்க இருந்தா நல்லா சம்பாதிக்க முடியும்.

என்னோட மகன் வழி பேரன்கள் என்றார். சொத்து பிரச்சினை கோர்ட்டில் நடைபெறுகிறது, நான் விவசாயத்தை பார்த்து கொண்டு இவர்களை பார்த்து கொள்வது சிரமம். அதனால் தான் விடுதியில் விடுகிறேன் என்றார்.

எனது இருக்கை எதிரே இருந்த சுவரில், சிலுவையில் அறையப்பட்ட இயேசு சாந்தமான முகத்தோடு இருந்தார்.

நான் எதிர்பார்த்தது போல் அவர்கள் இருவரும் அதிகம் அழவில்லை. இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை தாத்தா வந்து பார்த்து போவார். வாரம் ஒருமுறை அப்பாவும் அம்மாவும் போனில் பேசுவார்கள். அம்மா பேசி முடித்ததும் சிறுவர்கள் கலங்கிவிடுவார்கள்.

குளியலறை தொட்டி அவர்களுக்கு எட்டுமா என்று சந்தேகம் இருந்தது. ஆனால் பெரிய பையன்கள் ஓரளவுக்கு உதவி செய்தார்கள். புதன்கிழமை மாலை ஒரு மணி நேரமும், ஞாயிறு மாலை 3 மணி நேரமும் மாணவர்கள் பள்ளி வளாகத்தை விட்டு வெளியே சென்று வர அனுமதி உண்டு.

ஆனால் இவர்கள் இருவரும் வெளியே சொல்வதில்லை. நான் எனது சைக்கிளில் இருவரையும் வெளியே அழைத்து சென்றேன்.
ஸ்டேஷனரி கடையில் ஏதோ வாங்கினர். டீ குடிக்க சரி என்றனர். டீக்கடையில் டீ வாங்கி தந்த பிறகு தான் அவர்களுக்கு சூடான டீ கிளாஸை பிடிக்க தெரியாது என்பதை உணர்ந்தேன்.

அவர்களுக்கு துவைக்க தெரியவில்லை, மற்றவர்கள் சட்டையை விட மங்கலாகதான் அவர்கள் ஆடை இருக்கும். அவர்கள் மட்டும் தனி பள்ளியில் படித்ததால் பெரிய அளவில் மற்ற மாணவர்களோட ஒட்ட முடியவில்லை. வயது வித்தியாசமும் கூட.

காலாண்டு விடுமுறைக்கு வந்த தாத்தா, அவர்களை இங்கேயே தங்க வைக்க முடியுமா என்று கேட்டார். விடுதியை மூடிவிடுவோம் யாரும் இருக்க மாட்டோம் என்றேன். ஒரு வழியாக கூட்டி சென்றார்.

பத்து மாதங்கள் கடந்துவிட்டது. சிறுவர்கள் உற்சாகமாக இருந்தனர். அப்பா வருவதாகவும்,  வந்து அவர்களை மாலத்தீவுக்கு கூட்டி செல்வதாகவும் சொன்னார்கள்.

தேர்வுகள் முடித்த தினத்தில் அவர்களின் அப்பா வந்திருந்தார். அவரையும் சிறுவர்களையும் அழைத்து கொண்டு மைதானத்துக்கு சென்றேன். 

ஏன் சார், பசங்கள இங்க விட்டுட்டு மாலத்தீவுல போய் இருக்கீங்க என்றேன். 

அவங்க நல்லா இருக்கனுமங்கிறதுக்காக தான் அங்க நல்ல சம்பளம். ஒரு 5 வருசம் இருந்து சம்பாதிச்சுட்டு இங்க வரலாம்னு. நாளைக்கு அவங்க ஹையர் ஸ்டடிஸ்க்கு பணம் வேணுமே. இங்க இருந்தா சம்பளம் கைக்கும் வாய்க்கும் தான் சரியா வரும் என்றார்.

சார் நானும் பிஎட் முடிச்சு இருக்கேன், என் சம்பளம் 5000 ரூபாய். எங்க அப்பா சொத்து, வாழை தோட்டமும், தென்னந்தோப்பும் இருக்கு. அதை ஒழுங்கா பார்த்தா இதைவிட வருமானம் ஜாஸ்தி. எங்க அப்பா, என்ன சொந்த கால்ல நிற்க சொல்லி அனுப்பினார். எப்போ கஷ்டம்னாலும் வந்துடுனு சொன்னார். எனக்கு முதல்ல இந்த சின்ன பசங்கள மேய்கிறது கஷ்டமா இருந்துச்சு.

இப்போ இவனுக படுற கஷ்டத்த விடவா நம்ம கஷ்டம்னு தோணுது என்றேன்.

கீழ்வானத்தை பாரத்து கொண்டு நின்றார்.

நீங்க வேலை முடிச்சு வீட்டுக்கு போய் டீ குடிக்கும் போது, நம்ம பசங்க டீ டம்ளர் சூட்ட எப்படி தாங்கி டீ குடிப்பாங்கனு யோசிச்சு இருக்கீங்களா?

மூணு மாசத்துக்கு ஒரு முறை வீட்டுக்கு போகும் எல்லா பசங்களும் சந்தோசமா இருப்பாங்க, உங்க பசங்கள தவிர. ஏன்னா அவனுக இங்க இருந்து கிளம்பி வேற ஒரு ஹாஸ்டலுக்கு போறாங்க.

இங்க இருக்கிறதுல சின்ன பசங்க அவங்க ரெண்டு பேர் தான். எத்தனையோ வருசத்துக்கு பிறகு சந்தோசமா இருக்க இப்போ கஷ்டப்படுத்தறது நியாயம் இல்லை சார். பணம் தேவை தான் பணத்தை தாண்டி சந்தோசம் வேணும் சார். 

தாத்தா வந்துட்டு போன சில நாட்களுக்கு மட்டும் உங்க பசங்க கூடவே சில பசங்க இருப்பாங்க, அப்புறம் இருக்க மாட்டாங்க. திண்பண்டம் தீர்ந்து போகிற வரைக்கும் தான் அந்த பாசம்.

3ம் வகுப்பு படிக்கிற பையன 5 மணிக்கு எழுப்புறது எனக்கே கஷ்டமா தான் இருக்கும். ஆனா இங்க ரூல் அப்படி.

தலை குனிந்து நின்றாள் மாலத்தீவுகாரர்.

விடுதிக்கு வந்து பெட்டிகளை எடுத்து செல்லும் போது சின்னவனிடம் சொன்னார், நாம மாலத்தீவு போகல, அப்பா மட்டும் போய் அம்மாவ கூட்டிட்டு வந்துடுறேன். நாம ஊர்லயே இருக்க போறோம் என்றார்.

மே மாத கடைசியில் விடுதிக்கு வந்தேன். மீண்டும் அந்த சிறுவர்கள் விடுதிக்கு வரவில்லை. எனக்கு எதிரே இருந்த போட்டோவில் இயேசு உயிர்த்தெழுந்திருந்தார்.






No comments:

Post a Comment