இரவு 8 மணிக்கு மேல் டிவி பார்க்க அம்மா அனுமதி தருவதில்லை. அம்மா தூங்கிய பிறகு சத்தத்தை குறைத்து வைத்து பார்ப்போம். பகலை பொறுத்தவரை யார் வீட்டில் பார்ப்பது என்ற போட்டியே நடக்கும், பெரும்பாலும் எங்க வீட்டில் வந்து பாண்டியும் பார்ப்பான்.
இந்தியாவின் முதல் போட்டி தென்னாப்பிரிக்காவை எதிர்த்து ஆடியது. 250 என்பது கடினமான டார்கெட் சேஸ் செய்ய அன்றைய தேதியில் இந்தியா வென்று விடும் என்ற நினைத்த நேரத்தில், யார்டா இவன் இந்த அடி அடிக்கிறான் என்று நினைக்க வைத்து எளிதாக வென்று சென்றார் குளூஸ்னர்.
2வது போட்டியில் டெண்டுல்கர் ஆடவில்லை, அவரது தந்தை இறந்துவிட இந்தியா திரும்பி இருந்தார். ஜிம்பாப்வே 3 ரன் வித்தியாசத்தில் வென்றது. வெங்கடேஷ் பிரசாத்தை திட்டினோம். அடுத்த போட்டியில் டெண்டுல்கர் வந்து சதம் அடித்து வென்றோம். அதற்கடுத்த போட்டி கங்குலி டிராவிட் உலக சாதனை படைத்தார்கள்.
கடைசி லீக் போட்டி இங்கிலாந்து அணியுடன். பிரிட்டானியா ப்ரீ டிக்கெட் கொடுத்த போட்டி. மழையால் பாதியில் நிறுத்தப்பட்டு, அடுத்த நாளில் தொடர்ந்தது. இந்தியாவுக்கு வெற்றியும் கிடைத்தது.
சூப்பர் 6ல் மூன்று போட்டியும் வெல்ல வேண்டும் என்ற சூழல். ஆனால் அந்த விதிமுறை புரிய பல ஆண்டுகள் ஆனது. ஆஸ்திரேலிய அணியுடனான போட்டியில் மெக்ராத் இந்தியாவை நசுக்கினார். பாகிஸ்தான் போட்டியில் வென்றது ஆறுதல். நியூசிலாந்து போட்டியில் தோற்று வெளியேறியது இந்தியா. அரை இறுதி போட்டியும் இறுதி போட்டியும் பார்த்தேன்.
2003 உலகக் கோப்பை, 12ம் வகுப்பு தேர்வுகளின் போது. நல்ல அணி எப்படியும் வென்றுவிடும் என்று நம்பினோம். விடுதியில் சாயங்காலம் ஹாலில் வைத்து மேட்ச் போடுவார் வார்டன். ஸ்டடி ஆரம்பித்த பிறகு டிவி அணைத்து வைக்கப்படும்.
முதல் போட்டியில் ஹாலந்து (அன்று நெதர்லாந்து அணி ஹாலந்து என்ற பெயரில் ஆடியது) அணியுடன் சொதப்பி ஒரு மாதிரி வென்றது. அடுத்த போட்டியில் ஆஸியுடன் படுதோல்வி. அதற்கு பிறகு நமீபியா, ஜிம்பாப்வே, பாகிஸ்தான் என தொடர் வெற்றிகளை பெற்றது இந்தியா.
ஹாஸ்டலில் டிவி ஓடாத நேரத்தில் பாளையங்கோட்டை பகுதியில் எந்தெந்த கடைகளில் கிரிக்கெட் பார்க்க வசதி உள்ளது என்ற டேட்டா பேஸ் எங்கள் வசம் இருந்தது. அடுத்த காலையில் தந்தி பேப்பரில் வாசிப்பது ஒரு சுகானுபவம். மேட்ச்களை பற்றி கூட்டமாக உட்கார்ந்து பேசி பரவசம் அடைவோம். அந்தக் கூட்டத்தின் உறுப்பினர்களில் பிளசிங் மற்றும் சங்கர் மட்டும் நினைவில் நிற்கும் பெயர்கள்.
சூப்பர் 6 போட்டிகளில் நியூசிலாந்து உடனான போட்டியில் இந்தியா மூன்று விக்கெட்டுக்களை அடுத்தடுத்து இழந்தது. ஷேன் பாண்ட்க்கு இன்னும் 8 ஓவர்கள் இருந்ததால் ஆட்டம் கையை விட்டு போச்சு என்று பார்க்கவில்லை. கைப்பும், டிராவிட்டும் கரை சேர்த்தனர்.
இறுதிப் போட்டி மார்ச் 23 ல், பயாலஜி க்ரூப்புக்கு தேர்வுகள் முடிந்து விட்டது 20ல். அவர்கள் நுழைவு தேர்வுக்கு படித்தார்கள். எங்களுக்கு 25ம் தேதி கம்யூட்டர் சயின்ஸ் தேர்வு. இறுதி போட்டியில் ஆஸ்திரேலியா வெளுக்க, சச்சின் முதல் ஓவரில் அவுட்டாக, நாம் பார்க்க விட்டால் வெற்றி பெறும் என்ற பேராசையில் 5ம் ரூமில் அடைக்கலம் ஆனேன். காதில் கங்குலி அவுட் ஆனது கேட்டது.
கல்லூரி காலத்தில் 2007 உலகக் கோப்பை. இதில் பிரச்சினை என்னவென்றால் போட்டிகள் நடுஇரவு 1 அல்லது 2 வரை செல்லும். விடுதியில் டிவி கிடையாது. எங்கு பார்ப்பது என்ற கேள்வி. முதல் போட்டி தூத்துக்குடி நண்பன் கார்த்தி வீட்டில், கார்த்தி தூங்கி விட்டான், அவனது அப்பாவும் தூங்கிவிட்டார். பங்களாதேஷ் வெற்றியை ஜீரணிக்க முடியாமல் தவித்தேன். அடுத்த போட்டி எங்கள் வீட்டில் முதல் பேட்டிங் மட்டும் பார்த்தேன். சச்சின் 6வது பேட்ஸ்மேனாக, டிராவிட் 7வது பேட்ஸ்மேனாக களம் கண்ட போட்டி.
மூன்றாவது போட்டி இலங்கையோடு, க்ளாஸ் மேட் வெஸ்லி வீட்டில் பார்த்தேன். அதுவும் சுவாஹா.
2011 உலகக் கோப்பை வேலைக்கு சென்ற பின், சைதாப்பேட்டை மேன்சனில், அருண் ரூமில் டிவி இருந்தது. அனைத்து போட்டிகளும் அதில் தான். இங்கிலாந்து உடனான போட்டி டை ஆக, பியூஸ் சாவ்லாவை திட்டினோம்.
சென்னையில் நடைபெற்ற வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான போட்டி, தோல்வியை நோக்கி செல்வது போல இருந்தது. விரக்தியில் நான், ராஜ்குமார், வசந்த் மூணு பேரும் சைதை ராஜ்ஜில் நாடோடி மன்னன் படத்துக்கு போனோம். சினிமாஸ்கோப் இல்லாத படம் என்பதால் திரையின் நடுவில் மட்டுமே தெரிந்தது. இடைவேளைக்கு பிறகும் கருப்பு வெள்ளையில் ஓடியதால் வெளியே வந்தோம். அறைக்கு வந்தபின் இந்தியா ஜெயித்தது தெரிந்தது.
இறுதி போட்டியில் கடைசி வரை பார்த்து மகிழ்ந்திருந்தோம். நள்ளிரவு 12க்கு பிறகே நாங்கள் சாப்பிடாதது நினைவுக்கு வந்தது.
2015 உலகக் கோப்பை, தூஸானில் பணிபுரிந்த போது. ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற முத்தரப்பு போட்டிகளில் சொதப்பிய இந்திய அணி உலகக் கோப்பையை சிறப்பாக தொடங்கியது.
குறிப்பாக முதல் போட்டி, நான் திருச்செந்தூர் கோவிலுக்கு சென்று கொண்டிருந்தேன். எனது மனைவி ஸ்கோர் அனுப்பி அப்டேட் செய்தது ஆச்சர்யங்களின் அணிவகுப்பு.
இந்த உலகக் கோப்பையிலும் வெஸ்ட் இண்டீஸ் எதிரான போட்டியில் சிரமமே என்ற நிலை இருந்தது. அலுவலகத்தில் இருந்து கிளம்பும் போது நானும் பார்ட்னர் ராஜாவும் பேசிக்கொண்டோம். பெரிசு (2011 உலகக் கோப்பையில் பெரிசு - சச்சின், 2015ல் தோனி) நின்றால் ஆட்டம் நமக்கு என்று. ஆட்டத்தில் இந்தியா வெற்றி. பெரிசு - 45*
நண்பர் கோபியோடு 2015 உலகக்கோப்பை கழிந்தது. அரை இறுதி போட்டியை அலுவலகத்தில் நேரடி ஒளிபரப்பு செய்தனர். நான் எனது கணிணியில் கிரிக் இன்ஃபோ மூலம் தொடர்ந்து கொண்டு இருந்தேன். இந்திய அணி தான் அந்த போட்டிக்கு பிறகு தொடரவில்லை.
2019 உலகக் கோப்பை, கையில் இருக்கும் அலைபேசியில் எப்போதும் ஸ்கோர் பார்த்து கொள்ளும் அளவுக்கு டெக்னாலஜி வளர்ந்துவிட்டது. நன்றாக சென்றது இந்திய அணியின் ஆட்டம். மீண்டும் அரை இறுதி, ரன் அவுட்டில் தொடங்கி ரன் அவுட்டில் சர்வதேச கிரிக்கெட்டை முடித்து கொண்ட பெரிசு. (அன்று தெரியாது அது தான் கடைசி போட்டி என்று). இந்திய அணி நாக்அவுட் போட்டிகளில் இன்னும் மனதளவில் பெரிய தன்னம்பிக்கையோடு தயாராக வேண்டும் என்று தோன்றியது.
2023 உலகக் கோப்பை, இந்தியாவோடு ஆப்கானிஸ்தானும் என் மனதில் ஒட்டிக் கொண்டது. இதுவரை இரு அணிகளின் செயல்பாடும் திருப்திகரமாக உள்ளது.
"இந்த நிகழ்காலம் இப்படியே தொடராதா..."
No comments:
Post a Comment