இலங்கை அணியை பொறுத்தவரை இதற்கு முன் ஆப்கானிஸ்தான் அணியுடன் ஒருநாள் போட்டிகள் தோற்றுள்ளது. சமீபத்தில் நடந்த ஆசிய கோப்பையில் ஆப்கானிஸ்தான் அணி ரன் ரேட்டுக்காக விளையாடி தோற்றது.
ஆப்கானிஸ்தான் அணி டாஸ் வென்று பீல்டிங் தேர்வு செய்தது ஆச்சரியம், ஏனென்றால் ஆப்கானிஸ்தான் அணியின் பலமே பந்துவீச்சு தான். ஆனால் பனிப்பொழிவு தான் காரணம் என்றார் ஷாகிதி.
சென்ற போட்டியில் நன்றாக பந்து வீசி மூன்று விக்கெட் வீழ்த்திய நூர் அகமது நீக்கப்பட்டு வேகப்பந்து வீச்சாளர் பரூக்கி அணிக்கு திரும்பினார். அவர் நான்கு விக்கெட்டுக்களை வீழ்த்தியது, அதிர்ஷ்ட தேவதை ஆப்கானிஸ்தான் வசம் வந்ததை காட்டியது.
முதல் பத்து ஓவர்களை முஜீப்பும், பரூக்கியும் சிறப்பாக வீசினர். பந்துவீச்சில் மாற்றம் செய்ய வேண்டிய தேவை ஏற்படவில்லை. ஒரு விக்கெட் மேல் முறையீட்டால் கிடைத்தது.
ஆனால் ஆப்கானிஸ்தான் சோர்ந்து போகாமல் தொடர்ந்து போராடி சீரான இடைவெளியில் விக்கெட் வீழ்த்தியது. அதே சமயம் இலங்கை வீரர்கள் அடித்து ஆடி ரன்கள் குவிக்க முயற்சி செய்யவில்லை. சீனியர் வீரர் மாத்யூஸ் கூட சிங்கிள் எடுப்பதில் தான் கவனம் செலுத்தினார்.
இரண்டாவது ஓவரில் இக்ரம் அலிஹில் கையில் காயம் ஏற்பட, குர்பாஸ் விக்கெட் கீப்பிங் பொறுப்பை ஏற்றார்.
ஷாகிதி பந்து வீச்சாளர்களை திறம்பட மாற்றி இலங்கை ரன் குவிக்க விடாமல் கட்டுக்குள் வைத்தார். நவீன், நபி பந்துவீச்சு பெரிதாக எடுபடவில்லை. மற்றவர்கள் சமாளித்தனர்.
100வது போட்டியில் விளையாடிய ரஷீத் கான் தன் பங்கிற்கு ஒரு விக்கெட் வீழ்த்தினார். ஒரு கேட்ச் பிடித்தார். இப்ராஹிம் டைரக்ட் ஹிட்டும் குறிப்பிடத்தக்கது.
242 என்ற இலக்கை விரட்டிய ஆப்கானிஸ்தானின் பேட்டிங் முதுகெலும்பு குர்பாஸ் முதல் ஓவரில் மிடில் ஸ்டம்பை தவறவிட்டார். ஆனால் ஆப்கானிஸ்தான் கலங்கவில்லை, நிதானமாக ஆட்டத்தை தொடர்ந்தனர் இப்ராஹிம் - ரஹ்மத் ஷா.
மீண்டும் பந்து வீச வந்த மதுசங்க, இப்ராஹிம் விக்கெட்டை வீழ்த்த கேப்டன் களத்திற்கு வந்தார். ரஹ்மத் ஷா - ஷாகிதி, வலது கை - இடதுகை பார்ட்னர்ஷிப் கொடுக்க இலங்கைக்கு தலைவலி ஆரம்பித்தது. இலங்கை போல பந்துகளை வீணடிக்காமல் முன்னேறினர்.
சதீரா , ரஹ்மத் ஷா கேட்சை விட சேதாரம் இல்லாமல் அடுத்த பந்தில் மீண்டும் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். அடுத்து களம் இறங்கியவர் ஓமர்சாய். உலகக் கோப்பை அணியில் குல்பதீன் நயீப்க்கு பதிலாக தேர்வு செய்யப்பட்டவர். குல்பதீன் நயீப் யார் என்றால் 2019 உலகக் கோப்பையில் ஆப்கானிஸ்தான் அணியின் கேப்டன்.
ஆசியக் கோப்பை போட்டிகளில் சிறப்பாக பந்து வீசினார். ஆசிய விளையாட்டு போட்டியில் கேப்டனாக இருந்து அணியை இறுதிப் போட்டிக்கு கொண்டு சென்றவர்.
நேற்று ஓமர்சாய் ஆடிய ஆட்டம், அவரது தேர்வு குறித்து இருந்த கருத்து வேறுபாடுகளுக்கு பதில் கூறியது போல இருந்தது. ஆட்டம் தொய்வடைந்த நேரத்தில் சிக்ஸ் அடித்து நிமிர்த்தியவர். உலகக் கோப்பை போட்டிகளில் தனது இரண்டாவது அரைசதத்தை அடித்தார்.
நேற்றைய போட்டியில் ஆப்கானித்தான் அணிக்கும் இலங்கை அணிக்கும் இருந்த வித்தியாசம். இலங்கை அணி ரன் குவிப்பில் எந்த முனைப்பும் காட்டவில்லை, பார்ட்னர்ஷிப் எதுவும் சரியாக அமையவில்லை. இலங்கை அணி முழுக்க வேகப்பந்து வீச்சாளர்களை மட்டுமே நம்பி களம் இறங்கி இருந்தது. விக்கெட் வீழ்த்த ஸ்பின்னர்கள் இல்லை. ஆப்கானிஸ்தான் அணி தனது திட்டத்தை சரியாக செயல்படுத்தியது இக்ரம் காயமோ, குர்பாஸ் டக் அவுட்டோ அணியை பாதிக்கவில்லை.
இலங்கை அணி 19 போர்கள் 2 சிக்ஸர்கள்
ஆப்கானிஸ்தான் அணி 19 போர்கள் 5 சிக்ஸர்கள்.
No comments:
Post a Comment