Tuesday, 29 August 2023

கிரிக்கெட் 11 - டேனிஷ் கனேரியா

டேனிஷ் கனேரியா

பாகிஸ்தான் அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர். பாகிஸ்தான் அணியில் இடம்பெற்ற இந்து மதத்தை சார்ந்த இரண்டாவது வீரர். முதல் வீரர் இவரின் சொந்தகாரரான அனில் தால்பட்.

சக்லைன் முஸ்டக்கிற்கு பிறகு பாகிஸ்தான் அணியில் நிரந்தர சுழல்பந்து வீச்சாளர்களே இல்லை. அப்ரிடியோடு வேறு சில பேட்ஸ்மேன்கள் சுழற்பந்து வீசினார்கள்.

பாகிஸ்தான் அணிக்காக விளையாடிய வீரர்களில் இஸ்லாமியர் அல்லாத ஏழாவது வீரர். பாகிஸ்தான் அணி வேகப்பந்து வீச்சில் எப்போதும் பலமாக இருப்பதால் சுழற்பந்து வீச்சாளருக்கு வாய்ப்பு கிடைப்பதே கடினம்.

2000ல் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் அறிமுகமானார் ஆறடி உயரமான கனேரியா. 2010 வரை 61 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 261 விக்கெட் வீழ்த்தியுள்ளார். சாகித் அப்ரிடி இருந்ததால் ஒருநாள் போட்டிகளில் அதிக வாய்ப்பு கிடைக்கவில்லை. கிடைத்த வாய்ப்பையும் தக்கவைக்கவில்லை. 18 ஒருநாள் போட்டிகளில் ஆடி 15 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார்.

டெஸ்ட் போட்டிகளில் 4 முறை ஆட்டநாயகன் விருது பெற்று உள்ளார். பங்களாதேஷ், இலங்கை, தென்னாப்பிரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு எதிராக தலா ஒருமுறை. இதில் இலங்கை எதிராக 2004ல் கையில் ரத்தம் வடிந்த போதும் 60 ஓவர்கள் பந்துவீசி 7விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

பேட்டிங்கில் படுமோசம் கனேரியா. தொடர்ந்து 4 இன்னிங்க்ஸில் டக் அவுட் ஆனவர் என்ற பெருமை அவர் வசம் உள்ளது.

குஜராத்தியான கனேரியாவின் முழுப்பெயர் டேனிஷ் பிரபாசங்கர் கனேரியா.

அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய பாகிஸ்தானிய ஸ்பின்னரான கனேரியா, தனது உயரத்தால் அதிக பவுண்ஸ் வீச கூடியவர். கடைசியாக விளையாடிய டெஸ்ட் போட்டியில் ஒரே ஒரு விக்கெட் மட்டுமே வீழ்த்தினார்.

கனேரியா கிரிக்கெட்டில் சாதித்த இன்னொரு விசயம், சூதாட்டம். சூதாட்டத்தில் சிக்கியதால் இங்கிலாந்து கிரிக்கெட் போர்டு (கவுண்டியில் ஆடியவர்) ஆயுள் தடை விதித்தது குறிப்பிடத்தக்கது.


No comments:

Post a Comment