Friday, 9 June 2023

நல்லக்குமார் ஞானதாஸ்

நான் பத்தாம் வகுப்பில் விடுதியில் சேர்ந்த போது அவரும் விடுதிக்கு வந்தார் வார்டனாக.
ப்ராங்ளின் சார், எபனேசர் சார் இருவரும் விடுதியை விட்டு சென்ற பின் விடுதியின் முழுப் பொறுப்பும் இவர் வசம் வந்தது.

திருநெல்வேலி மாவட்டம், களக்காடு அருகே உள்ள தோப்பூர் தான் நல்லக்குமார் சார் ஊர். கணித பட்டதாரி, சில அரியர்கள் கைவசம் இருந்த நிலையில் ஹாஸ்டலுக்கு வந்தவர்.

அவரது பெயர் பலருக்கும் தெரியாது. அதற்கு பின்னால் உள்ள சுவாரஸ்ய சம்பவம். விடுதியின் சாப்பாட்டுக்கூடத்தின் பெஞ்சில் ஒரு சிறுவன் ஏறி குதித்தான் ஸ்டைலாக. அது வல்லரசு பட விஜயகாந்த் போல இருந்ததால் அந்த சிறுவனுக்கு வல்லரசு என பட்டப்பேர் வைத்தார்கள்.

அந்த சிறுவனை நல்லக்குமார், வா வல்லரசு வா என்று கூப்பிட்ட தொனி வல்லரசு பட வில்லன் போல இருந்ததால் இவருக்கு வாசிம்கான் என பட்டப்பேர் வைத்தனர். அவரது முக வெட்டும் வில்லன் போல தான் இருக்கும் என்பதால் வாசிம்கான் என்ற பேர் செட்டானது.

மாணவர்கள் மத்தியில் வாசிம்கான் ஆனார். அந்த பெயரை யார் வைத்தது என்று புலனாய்வு செய்து கொண்டிருந்தார்.

ஏதாவது கணித ஆசிரியர் ஒரு வாரம்/ பத்து நாள் மருத்துவ விடுப்பு எடுத்தால் இவர் போய் வகுப்பெடுப்பார் தற்காலிக ஆசிரியராக.
மற்றப்படி விடுதி நிர்வாகம் மட்டுமே.

விடுதி நிர்வாகமும் அவரால் சரியாக செய்ய முடியவில்லை. அதனால் எட்டாம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு தேவதாஸ் வார்டனாக இருந்தார். இவருக்கு கீழ், கீழ் படியாத பெரிய மாணவர்கள். தோப்பூரில் விவசாயமே பார்த்திருக்கலாம் என்று புலம்பி கொள்வார்.

விடுதி கட்டண விவரம் அனுப்பும் கடிதத்தில் முகவரி எழுத எப்போதும் என்னையே அழைப்பார். ஒருமுறை மகேந்திர சிங் அவனது முகவரியில் டோனாவூர் என்பதே எழுதாமல் விட்டுவிட சொன்னான். மதிப்பெண்கள் விவரம் அந்த கடிதத்தில் போகும் என்பதால். கடிதம் திரும்பி விடுதிக்கே வந்தது. நான் கவனகுறைவில் விட்டுவிட்டதாக நினைத்தார் நல்லக்குமார்.

குடியரசு தின விழா, சுதந்திர தின விழாவிற்கு வ.உ.சி மைதானம் செல்ல அனுமதி கேட்டால் கொடுப்பார். மற்ற வார்டன்கள் நிச்சயம் தர மாட்டார்கள். 

நக்கல், நையாண்டி கொஞ்சம் அவருக்கு உண்டு. ஒருநாள் விடுதிக்கு வந்த இயற்பியல் ஆசிரியருக்கு வணக்கம் சொன்னேன். அப்போது நல்லக்குமார் சொன்னது "அதான் பிராக்டிக்கலுக்கு 50 மார்க் போட்டு அனுப்பிட்டாரே இன்னும் என்ன வணக்கம்" என்று.

ப்ளஸ் 2 வில் விடுதியை விட்டு வெளியே டியூசன் சென்று வர அனுமதி தந்தார். டியூசன் நேரத்திற்க்கேற்ப சாப்பாடு எடுத்து வைக்க சொன்னார். ஓரளவுக்கு மார்க் எடுக்க உதவியது.

ஆனாலும் விடுதியில் எக்கச்சக்க பிரச்சனைகள் எல்லாமே தலைமை ஆசிரியரிடம் சென்று அவருக்கு கெட்ட பேர் வந்தது.

விடுதி தினத்தில் கூட நாங்கள் போட்ட நாடகம் மண்ணை கவ்வியது. அவருக்கு கெட்டபேரை தந்தது.

மாணவர்கள் யாரும் பெரிதாக அவரை மதிப்பதில்லை. வாசிம்கானுக்கு பிடித்தவர்களில் நானும் ஒருவன் அன்றைய தேதியில். என்னை பொறுத்தவரை அவர் நல்லக்குமார் தான்.

வாசிம்கானுக்கு நிரந்தர வேலை கிடைத்ததா?
விவசாயம் செய்கிறரா? என்னை நினைவில் வைத்திருப்பாரா? 

விடை தெரியாத வினாக்கள்.



No comments:

Post a Comment