Monday, 22 May 2023

சென்னை (2007 - 2023)

16 ஆண்டுகள் சென்னை வாழ்வில் மறக்கமுடியாத நினைவுகள்.

1. சேப்பாக்கம் கிரிக்கெட்

மைதானத்தில் கிரிக்கெட் பார்க்க வேண்டும் என்ற நெடுநாள் ஆசை அருண் மூலம் நிறைவேறியது. அருண் தான் சேம்பியன்ஸ் லீக் போட்டிக்கு டிக்கெட் புக் பண்ணியது. நான், அருண், தினேஷ் (ஜாகீர்), இன்னொரு நபர் யாரென்று நினைவில்லை. முதல் போட்டி ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையில் நடந்தது. இரண்டாவது போட்டி சென்னை மும்பை அணிகள் விளையாடியது. சென்னையின் வெற்றி வாய்ப்பை கலைத்தது மலிங்கா பேட்டிங். பொல்லார்ட், ரெய்னா, ரோட்ஸ், ஆன்டாங், வார்னர், பொலிஞ்சர், சகால் ஆகியோரை மிக அருகில் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. வெயிலும், வெக்கையும் அதிகம் சேப்பாக்கம் மைதானத்தில்.

2. சைதை மேன்சன் 

மேன்சன் என்றாலே புழுங்கிய துணிகளின் வாடையுடன், ஒற்றை மின்விசிறி கொண்ட ஒடுங்கிய அறை என்று தான் பலருக்கும் தெரியும். ஆனால் எங்கள் சைதை மேன்சன் மூன்று பேர் தங்க கூடிய அறை. சமயத்தில் 5 பேர் தூங்கினோம். பாதி மொட்டை மாடி எங்கள் வசம். தங்கியிருந்த எல்லாருக்குமே நினைவுகள் நிறைவாக உண்டு. அங்கு தான் நிறைய பேருக்கு நல்ல வேலை கிடைத்தது. உலகக் கோப்பை வெற்றி பெற்ற, உணர்ச்சிபூர்வமான நாள் மேன்சனில் தான் அதை கண்டு ரசித்தோம். மொட்டை மாடியில் அமர்ந்து உண்டு, உறங்கி, விளையாடிய நாட்கள் இனியவை.

3. காற்று வெளியிடை

மனைவியுடன் கடைசியாக திரையரங்கில் பார்த்த படம். படம் சூர மொக்கை என்றாலும் இரண்டாம் ஆட்டத்தில் இருந்த திரையரங்க குளிர், காட்சிகளை உயிர்ப்பாக்கியது. பூந்தமல்லி சுந்தர் திரையரங்கில் பார்த்த படம்.

4. வேளச்சேரி அறைகள்

வேளச்சேரியின் அறைகள், காற்றோட்டம் இல்லாத குறுகிய அறைகள். எப்போதும் ஓனர்களின் தொல்லை, கொசுக்கடி, பண கஷ்டம் என இருந்தவை. நிறைய நட்புகள், சுவையான அனுபவங்கள் தந்த அறைகள் அவை. மதியழகன் தெருவும், கண்ணகி தெருவும் அதிக நாட்கள் இருந்தவை. அந்த நாட்களை வைத்து நிறைய கதை எழுதலாம்.

5. கையேந்தி பவன் பிரியாணி

சைதை தபால் நிலையம் எதிரில் இருந்த பிரியாணி கடை, கையேந்தி பவன் பிரியாணி தினேஷால் அறிமுகமானது. மிக மெதுவாக பார்சல் கட்டி தருவார். பொறுமையாக இருந்தால் வித்தியாசமான சுவையுடைய பிரியாணி சாப்பிடலாம். அடிக்கடி இரவு உணவு கையேந்தி பவன் பிரியாணி தான்.

6. மழை நாட்கள் 

சென்னையில் எத்தனையோ வெயிலை கடந்திருந்தாலும் மழை நாட்கள் மறக்க முடியாதவை. செல்ப்ல் படுத்து தூங்கிய வேளச்சேரி மழை நாட்கள்.

பூந்தமல்லியில் தனிந்திருந்த போது வெளியே வர அச்சப்பட வைத்த நீலம் புயல் கரை கடந்த நாள்.

பணம் மட்டும் முக்கியமல்ல என்று புரிய வைக்க தகவல் தொடர்புகளை பிடுங்கி எறிந்த டிசம்பர் மழை நாட்கள்.

வர்தா விளையாடி ஓய்வெடுத்து திசை மாறி வீசிய நாள்.

மாண்டஸ் சிதைத்த நாளில் மறவாமல் பால் பாக்கெட் போட்ட தாத்தாவுக்கு நன்றியை தவிர வேறேதும் சொல்லவில்லை.

இன்னும் சென்னையோடு பல நினைவுகள்

-தொடரும்-


No comments:

Post a Comment