Monday, 22 May 2023

ஆதவனின் காதல்

ஆதவன், பொறியியல் படிப்பை முடித்த கையோடு சென்னைக்கு வந்து விட்டான். பொறியியல் படிப்பின் கடைசி நாளுக்கும் சென்னை வந்த நாளுக்குமான இடைவெளி இரண்டு வாரங்கள்.

இந்த இரண்டு வாரங்களில், பக்கத்து ஊர் அண்ணனின் கண்ணில் பட்டு, அவரின் சிபாரிசில் நேர்முக தேர்வு முடித்து வேலையும் கிடைத்து விட்டது. அவன் எதிர்பார்த்த வேலையில்லை என்றாலும் தினமும் சென்று வந்தான். எந்தவித ஈடுபாடும் இல்லாமல்.

பக்கத்து ஊர் பசங்களோடு அறையில் தங்கி இருந்தாலும் தனித்து விடப்பட்டது போன்ற உணர்வே அவனுக்கு இருந்தது.

ஆதவனின் நண்பன் நளனிடம் இருந்து அலைபேசி அழைப்பு வந்தது. மச்சி எனக்கும் ஏதாவது வேலை ஏற்பாடு செய்து கொடு என்று. நளனுக்காக அண்ணனிடம் பேசினான், நளனுக்கும் வேலை சிபாரிசில் கிடைத்தது, வேறு நிறுவனத்தில்

ஆதவனுக்கு பணி கட்டிட பணிகள் நடைபெறும் இடம், நளனுக்கு அலுவலகத்தில் பணி.

வேளச்சேரியில் ஆதவனும், நளனும் தனியாக அறை எடுத்தனர். ஆதவனுக்கு பணியிடம் தரமணி ரயில் நிலையம் அருகில். நளனுக்கு திருவான்மியூரில் அலுவலகம். இருவரும் காலையில் கிளம்பி சாப்பிட்டுவிட்டு ஒரே பேருந்தில் தான் செல்வார்கள்.

ஆதவனுக்கு இழந்ததை மீட்டது போல் இருந்தது. கல்லூரியில் ஆதவன் சில பெண்களிடம் பேசியது உண்டு. நளன் படிப்பு, விளையாட்டு இதை தவிர வேறேதும் தெரியாது என்கிற ரீதியில் திரிந்தவன்.

வேளச்சேரி செக்போஸ்ட் இவர்கள் தினமும் ஏறும் பேருந்து நிறுத்தம். அங்கு தான் அவளும் பேருந்து ஏறினாள். மாநிறம், கண்ணுக்கு மை தீட்டி காண்பவர்களை கவரும் முகம்.

ஆதவன், நளனிடம் சொன்னான் மச்சி, அந்த பொண்ணு உன்ன பார்க்கதுல என்று. நளனும் பார்த்துவிட்டு இல்ல மச்சி அது உன்ன தான் பார்க்குது என்றான்.

இருவரும் பார்த்தனர் தினமும். நளன் சொன்னான் மச்சி அந்தப் பொண்ணு டைடல் பார்க்கில் இறங்குகிறது என்று. அன்று முதல் அந்த பெண்ணிற்கு டைடல் என்று பேர் வைத்தனர். மனதில் அலையை ஏற்படுத்தியவள் என்று பொருள் கொள்ளலாம்.

பேருந்தில் முன்புற வாசல் வழியாகவே ஏற்றுவார்கள், டைடலை பின்பற்றி. ஒருநாள் டைடலிடம் கொடுத்து பாஸ் பண்ணி டிக்கெட் எடுத்தான் ஆதவன். நளனுக்கு சற்றே வயித்தெரிச்சல் வந்தது.

ஆறு மாதத்தில் இருவரும் பணியிடங்களை மாற்றினர். ஆதவன் வேளச்சேரி விட்டு சைதாப்பேட்டை சென்றான். ஆதவனின் பக்கத்து ஊர் நண்பர்களுடன் பேசும் போது சொன்னார்கள். நளன் பெரிய ஆளாகிவிட்டான் என்று. ஆதவன், "ஆமா நல்லா கம்பெனில நளனுக்கு வேலை, என்னை விட சம்பளமும் கூட" என்றான்.

ஆதவன் பணி நிமித்தமாக வேளச்சேரி செல்ல வேண்டி வந்தது. ரொம்ப நாட்களுக்கு பிறகு வேளச்சேரிக்கு சென்றான். வேலையை முடித்து சைதாப்பேட்டை செல்ல விஜயநகர் பேருந்து நிறுத்தத்தில் பேருந்து ஏறினான். ஜன்னல் சீட் கிடைத்தது. பேருந்து செக்போஸ்ட் பேருந்து நிறுத்தம் வரும் போது பார்த்தான். 

நளனும் டைடலும் கை கோர்த்து நடந்து வந்து கொண்டிருந்தனர்.

No comments:

Post a Comment