கல்லூரி நண்பர்களில் சுந்தர் ஜெகன் மறக்க முடியாத ஆள். இருக்கும் இடத்தை கலகலப்பாக வைத்திருப்பதால் எல்லாருக்கும் பிடிக்கும்.
என்னிடம் முதன் முதலாக பேசிய வார்த்தை "பார்ட்டிகாரனுக்கு எந்த ஊர்". கல்லூரி முதல் நாள் அன்றே பேசினோம். அவனோடு பேசிக்கொண்டே இருக்க வேண்டும் என்று இருந்தது அந்த நாளில்.
எல்லோரிடமும் பேசி பழக கூடிய ஆள் ஜெகன். அவனை பிடிக்காதவர் யாரும் இல்லை என்று சொல்லலாம். அவனுக்கு பிடிக்காத ஒரே நபர் அவனது அறை தோழன் தீபன் மட்டுமே.
எங்கள் கல்லூரி விடுதியில் எல்லார் வாயிலும் ஒரு பாடலை முனுமுனுக்க வைக்கும் திறமை ஜெகனுக்கு உண்டு. ஒரு பாடல் அவனுக்கு பிடித்துவிட்டால் வரிகள் தெரியுதோ இல்லையோ, திரும்ப திரும்ப பாடுவான்.
கல்லூரியில் சேர்ந்த புதிதில் முதன்முதலாக அவன் பாடிய பாட்டு உயிரின் உயிரே...
வாழமீனுக்கும் பாடலில் எல்லாருக்கும் மாளவிகா பிடிக்கும் என்றால் அவனுக்கு மட்டும் காதல் தண்டபாணியை பிடிக்கும் (தலைவரு திமிங்கிலம் தானுங்கோ).
காத்தாடி போல ஏன்டி என்ன சுத்துர பாடலை நான் கேட்பதற்கு முன்பாகவே பல வரிகள் எனக்கு தெரியும். உபயம் - ஜெகன்.
கடைசியாக ஜெகனை சைதாப்பேட்டை மேனசனில் சந்தித்தேன். வட இந்தியாவில் இருந்து வந்திருந்தான். அன்று அவன் முனுமுனுத்தது "ராஞ்சோ ராஞ்சோ" காட்டு சிறுக்கியின் இந்தி வடிவம்.
ஜெகன் கில்லி விளையாடியதால் விடுதியை விட்டு வெளியேறினான். அதனால் ஏற்பட்ட வெற்றிடத்தை வைல்ட் கார்ட் என்ட்ரி மூலம் சரி செய்தான்.
ஜெகனின் மொழி வழக்கு இமான் அண்ணாச்சி போல இருக்கும். இமான் அண்ணாச்சி ஊருக்கு பக்கத்து ஊரான ஆத்தூர் தான் ஜெகனுக்கு.
ஜெகன் கதை சொல்வதில் நேர்த்தியானவன். ஒருமுறை நள்ளிரவில் பேய் கதை சொன்னான்.
பனை மரங்கள் அதிகம் இருக்கும் இடத்தில் பேய் இருக்கும் என்பார்கள் என்று ஆரம்பித்து ஹஸ்கி வாய்ஸில் சொல்ல ஆரம்பித்தான்.
ஒருநாள் சாத்தான் குளம் பேருந்து நிலையத்தில் இரவு 10 மணிக்கு குழந்தையுடன் வந்து இறங்கினாள் ஒரு பெண். அவளது கிராமத்துக்கு செல்ல பஸ் கிடைக்காததால் ஆட்டோவில் சென்றாள்.
ஆட்டோ சாத்தான் குள டவுன் பகுதியை தாண்டி பனை மர காட்டுக்குள் பயணித்தது. அப்போது அந்த பெண் கேட்டாள் அண்ணே இந்த பக்கத்துல பேய் இருக்குனு யாரும் 9 மணிக்கு மேல ஆட்டோ ஓட்டுறது இல்லையாமே என்றாள்.
ஆமாமா பயந்தாங்கொள்ளி பசங்க நான் அப்படி கிடையாது என்றார் ஆட்டோகாரர்.
குழந்தையோட செத்து போன ஒரு பொம்பளை ஆவியா அலையுறதா சொல்றாங்களே அண்ணன்.
அதெல்லாம் பொய்மா நீ பயப்படமா வா என்றார் ஆட்டோகாரர்.
நீங்க நம்பலையா அண்ணன் என்றாள்.
எனக்கு அதில நம்பிக்கை இல்ல இருந்தா இப்படி சவாரி வருவனா என்றார் ஆட்டோகாரர்.
"நான் தான்டா அந்த பேய்" என்று கத்தி சொன்னான் ஜெகன். எல்லாரும் பதறிவிட்டோம்.
ஜெகன் எந்த விளையாட்டிலும் ஆர்வம் காட்டுவதில்லை. அவன் விளையாடும் ஒரே விளையாட்டு சீட்டுக்கட்டில் கழுத.
தனிமையில் இருந்தால் பலரும் பலசெயல்கள் செய்வார்கள். ஜெகன் தனிமையில் இருந்தால் தலை சீவி கொண்டு இருப்பான்.
எங்கு இருந்தாலும் ஒரு முகம் பார்க்கும் கண்ணாடி தன் முன் இருப்பதை உறுதி செய்வது ஜெகன் வழக்கம்.
அரியர்ஸ் வைப்பது கெத்து என நினைத்து கொத்தாய் அரியர் வைத்து அதை அசால்டாக கிளியர் செய்து கெத்து காட்டியவன்.
சுந்தர் ஜெகன் என்று பெயரை கேட்டு முகத்தை பார்த்து சுந்தரோ என கிண்டல் செய்த மலையாளி பசங்க நாளடைவில் ஜெகன் கூட நன்றாக பழகினர்.
அகத்தின் அழகு முகத்தில் தெரியாது என நிரூபித்தவன் "சுந்தர் ஜெகன்".
No comments:
Post a Comment