Tuesday, 22 December 2020

2020

 சக மனிதனை பார்த்து

புன்னகைக்க கூட நேரமில்லா

நகர வாழ்க்கையில்

சகலரையும் பார்த்து சந்தேகப்பட

வைத்தது இக்கொடிய நோய்!

வீட்டினுள் பணி செய்யும்

யுக்தியை அறிமுகம் செய்தது!

முடி வெட்ட முடியாமல்

காடாய் வளர்ந்த முடி

இருந்தாலும்

முள்ளு முள்ளாய் இருந்த

தாடியை மறைத்து கொள்ள

முகக்கவசம் உதவியது!

காய்கறி விலை உயர்ந்ததால்

இல்லங்களில் கருவாடு

மணந்தது!

மனித நடமாட்டம் இல்லாமல்

மாசற்ற காற்றை

சுவாசித்தன தெருநாய்கள்!

வீட்டிற்குள் அடைபட்டிருந்த

நாள்கள் பழைய விளையாட்டுகளையும்

புதிய அனுபவங்களையும் தந்தது!

தடை தகர்ந்த பின் 

வெளியே சென்றாலும்

வீடு திரும்பும் போது

வினையை இழுத்து

வந்துவிடக்கூடாது என

மனம் பதறியது!

எல்லாரையும் சமமாக

முடங்க வைத்த இறைவன்

வறுமையை தாறுமாறாய்

பகிர்ந்தளித்தான்!

சிறு குடலுக்கு எட்டிய உணவு 

பெருங்குடலுக்கு கிடைக்கவில்லை

பலருக்கு!

யாரோ செய்த தவறுக்கு

ஆண்டின் மீது பழியை

போட்டு நகர்வோம்

அடுத்த ஆண்டுக்கு.

வடுவாய் இருக்கும்

2020!!!


1 comment:

  1. Nallathoru sinthanai... Palani kumar adhutha muthu kumar aaga vazhthukal... Haikkoo kalum konjam muyarchikalame..

    ReplyDelete