சொந்தகாரர்கள் அக்கம்பக்கத்தில் அமைந்து விட, நாலு தெரு 40 வீடுகள் கொண்ட கிராமத்தில் பிறந்தவனுக்கு கிறிஸ்துமஸ் பண்டிகை பற்றி தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
ஆறாம் வகுப்புக்கு நகருக்கு வந்தபின் தான் அப்படி பண்டிகை இருப்பதும் அதை மக்கள் கொண்டாடுவதும் தெரியவந்தது. ஏனென்றால் கிறிஸ்துமஸ் விடுமுறை அரையாண்டு விடுமுறை நடுவிலே வந்து விடுவதும் காரணம்.
டிசம்பர் மாதம் தொடங்கி விட்டால் பாளையங்கோட்டை நகரெங்கும் கடைகளில் ஸ்டார் தொங்கும். வீடுகளில் விடிய விடிய ஸ்டார் ஒளிரும்.
பத்தாம் வகுப்பில் விடுதிக்கு சென்ற பின் குடில் அமைக்கிறார்கள், அதை அலங்கரிக்கிறார்கள் என்பது தெரியும்.
டிசம்பர் துவங்கினாலே ஊருக்கு செல்ல போகிறோம் என்ற சந்தோசம் வந்துவிடும். விடுதியில் அடிக்கடி "பெத்தலையில் பிறந்தவரை" பாடல் பாடுவார்கள்.
கல்லூரி காலத்தில் நண்பர் ஜெபவீர சிங் ஊரான கீழப்பத்தைக்கு கிறிஸ்துமஸ் தினத்தன்று சென்றிருந்தேன். களக்காடுக்கு அருகில் இருக்கும் கிராமம் அது.
நள்ளிரவு பண்ணிரெண்டு மணிக்கு தேவாலயம் சென்றிருந்தேன்.
முகத்தில் எந்த தூக்க கலக்கமும் இல்லாமல் அத்தனை மனிதர்கள் ஒரே இடத்தில் கொண்டாடுவது எங்க ஊர் திருவிழா போல் இருந்தது. சர்ச்க்குள் விருப்பமில்லாமல் பலமுறை சென்றிருக்கிறேன்.விரும்பி சென்ற அந்த பனி இரவு அழகாய் இருந்தது.
சென்னைக்கு வந்த பின், சைட் இஞ்சினியர் பணியில் மறுநாள் விடுமுறை என்றால் நள்ளிரவு வரை வேலை தொடரும். அப்படி ஒரு கிறிஸ்துமஸ்க்கு முந்தைய இரவில் எங்கள் சைட்க்கு பைப் கொண்டு வந்து இறக்கினார்கள். நகர எல்லைக்குள் கனரக வாகனங்கள் அனுமதி இல்லாததால் இரவு பதினோரு மணிக்கு தான் வந்தார்கள். பைப் இறக்கி முடிக்க 2 மணியாகிவிட்டது.
டீக்காசு வேண்டும் என்று என்னிடம் இருந்த 300 ரூபாயில் 150 ரூபாயை வாங்கி கொண்டார்கள். நான் ரூம்க்கு போக 150 ரூபாய் பத்தாது என்றேன். அவர்களே ஆட்டோ பிடித்து தருவதாய் என்னை லாரியில் ஏற்றி கொண்டார்கள்.
லாரி எழும்பூர் குழந்தைகள் மருந்துவமனையை கடக்கும் போது ஒருவர் மருத்துவமனையை பார்த்து கையெடுத்து கும்பிட்டார். நான் அவரை பார்த்தேன்.
இங்கதான் சார் பல உயிர்கள் ஜணிக்குது அப்போ இது கோவில் தானே என்றார்.
நான் ஆமாம் என்பது போல் தலையசைத்தேன். 150 ரூபாய்க்கு ஆட்டோ கிடைத்தது. அன்று கிறிஸ்துமஸ் தினம்.
No comments:
Post a Comment