திடீரென தமிழ் உணர்வு, ஆளப்போறான் தமிழன் என்று பல வகையான பேச்சுகள், உணர்ச்சி பொங்கல்கள், ஆதி தமிழர் ஆராய்ச்சிகள் என இணையத்தில் பரபரப்பு. அது பற்றிய எனது கருத்துகள் கண்ணோட்டம் இதோ.
ஹிந்தி திணிப்பில் இருந்து வருவோம். இந்தியை பள்ளியில் பாடமாக நடந்த கூடாது. விருப்பம் உள்ளவர்கள் தனியாக படித்து கொள்ளலாம் எனும் போக்கு.
தனியாக இந்தி டியூஷன் சென்று கற்று கொள்ள எத்தனை பேருக்கு வசதி உள்ளது?
நான் தமிழகம் தாண்டி வெளியே செல்ல போவதில்லை வெளியே சென்றாலும் ஆங்கிலம் தெரியும் சமாளித்து கொள்வேன். பிறகெதற்கு இந்தி?
தமிழகத்தில் பல்வேறு வேறு துறைகளில் கூலி வேலை பார்ப்பவர்கள் வட இந்தியர்கள். அவர்களை வேலை வாங்க இந்தி அவசியம். இது எனது அனுபவம்.
நான் கட்டிட துறையில் வேலைக்கு சேர்ந்த போது எனக்கு முதலில் வழங்கப்பட்ட பணி, வேலை செய்யும் வடக்கர்களுக்கு அடையாள அட்டை வழங்கும் பணி. அந்த அட்டையில் அவர்களது பெயர், அப்பா பெயர், புகைப்படம் ஆகியவை இருக்கும்.
அப்போது தான் நான் அந்த கூட்டத்திடம் மாட்டிக் கொண்டேன். அப்பா பெயர் பாதர் நேம் என்று கேட்டால் அவர்களுக்கு தெரியவில்லை. மனைவி பெயர் சொல்கிறான், மகன் பெயர் சொல்கிறான் இன்னும் என்னனவோ சொன்னான்.
பத்து நிமிட சுத்தலுக்கு பிறகு பித்தாஜிகா நாம் என்று அப்பா பெயரை சொன்னான். அப்பப்பா.
அவர்கள் சொன்ன வேலையை செய்வார்கள். அதை தாண்டி துளியும் யோசிக்க மாட்டார்கள். ஒருமுறை நண்பர் ஒருவர் செங்கலை அங்கே போய் போடு என்று கூறினார். அங்கே போய் தலையில் இருந்து செங்கலை டம் என்று போட்டுவிட்டனர்.
அவர்கள் தான் குறைந்த சம்பளத்தில் கூலி வேலைக்கு கிடைப்பவர்கள்.
ஆளப்போறான் தமிழன் - தமிழன் தமிழ்நாட்டை ஆள வேண்டுமா? இந்தியாவை ஆள வேண்டுமா? சுயநல தமிழனால் இது சாத்தியமா?
மலையாளிகள் எங்கு சந்தித்தாலும் சகஜமாக பேசி ஒட்டி கொள்வார்கள். பெங்களூரில் இரு தமிழர் சந்தித்தால் யூ ஆர் ப்ரம் சென்னை? என்று பேசி கலைவது வாடிக்கை. பெங்களூரு வேண்டாம் சென்னையில் என்னை பார்த்தால் கதவடைத்து கொள்ளும் பக்கத்து வீட்டுக்காரன் தமிழனே.
முல்லை பெரியாறு பிரச்சினை என்றால் கேரளாவில் ஆளும் கட்சியும் எதிர் கட்சியும் ஒரே நிலைப்பாட்டில் இருக்கும். ஆனால் இங்கு இரு கட்சிகளும் மாறி மாறி குறை சொல்வது மட்டுமே நடந்துள்ளது.
தமிழகத்தில் பேருக்கு பின்னால் சாதி பெயர் போட்டு கொள்வதில்லை. சாதி சண்டை மட்டும் போட்டு கொள்வோம். கிராமத்துக்கு வரும் பேருந்தில் கல் வீசினால் நம் சாதியினரும் பயன்படுத்தும் பேருந்து இயங்காது என்ற அறிவு கூட இல்லாமல் எவனோ சொல்வதை கேட்டு இயங்குபவன் தமிழன்.
தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போராட்டம் வெற்றி பெற காரணம் தலைவன் இல்லாத போராட்டம் என்பதால் மட்டுமே.
மூலப்பொருட்களாக மின்சாரம் மட்டும் தேவைப்படும் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களை சென்னயில் வைத்துவிட்டு ஸ்டெர்லைட்டை தூத்துக்குடிக்கு அனுப்பிய சுயநல கூட்டம் தமிழர் கூட்டம்.
சென்னையில் புயல் கடந்தபின் இரு நாட்களில் சரி செய்யப்படும் மின்சாரம், கன்னியாகுமரி என்றால் இருபது நாட்கள் தேவைப்படும். ஏன் கன்னியாகுமரி தமிழகத்தில் இல்லையா?
ஆட்சி மாறும் போது தமிழ் புத்தாண்டு மாறும் அவலம் எவர்க்கு உண்டு. அறுவடை திருநாளே புத்தாண்டாய் இருக்க வாய்ப்பு என்று ஆய்வு செய்யவர்கள். தமிழன் அறுவடை திருநாளை தனியாகவும் புத்தாண்டை தனியாகவும் கொண்டாடி இருக்கலாமே என்று ஆய்வு செய்ய முன்வருவதில்லை.
காரணம் தான் சார்ந்த தன் கட்சி சார்ந்த தன் இயக்கம் சார்ந்த தன் சாதி சார்ந்த சுயநலம் .
தமிழக ஆட்டோகாரர்கள் தமிழர்களிடம் அடாவடியாய் கேட்பார்கள். வட இந்தியர்களிடம் அவர்கள் பாச்சா பலிக்காது. சேட்டுகள் அதிகம் வசிக்கும் சௌகார் பேட்டையில் கை ரிக்ஷாக்களே உள்ளன. ஏனென்றால் சேட்டுகள் கூடுதல் கட்டணம் தரமாட்டார்கள் என்று ஆட்டோகாரர்களுக்கு தெரியும். ஆட்டோ வாங்க கடன் வழங்குவது சேட்டுகளே.
வரிவிலக்கு என்றால் மாஸ் மாசுவாக மாறும். தமிழில் தலைப்பு வைக்க வரிவிலக்கு அவசியம். தன் படத்துக்கு இதுதான் சிறந்த தலைப்பு என்று பிறமொழி சொல்லை தலைப்பாக வைத்து யாரும் வரிகட்ட முன் வரவில்லை என்பதே நிதர்சனம்.
தமிழில் குழந்தைகளுக்கு பெயர் வைக்க வேண்டும். தாத்தாவின் பெயரை கொண்டவன் என்பதால் பெயரன் என்று இருந்த காலம் மலையேறிவிட்டது.
சமஸ்கிருதத்தில் பெயர் வைத்தால் தவறு. அரபி, ஆங்கிலம், லத்தீன், ஹீப்ரு போன்ற என்ன மொழியில் பெயர் வைத்தாலும் தவறில்லை.
தமிழில் பெயர் சூட்ட ஆர்வமுள்ளவர்கள் எவரும் தமிழ் கடவுள் முருகன் பெயரை பரிசீலிப்பது கூட இல்லை.
ஆரிய திணிப்பு.
ஆரியர்கள் தமிழ் கடவுள் முருகனை சன்முகன் ஆக்கிவிட்டார்கள். இது எப்போது நடந்தது என்றால் மன்னர்களின் காலத்தில். மன்னர்களின காலத்தில் அரண்மனைக்கு வெளியே உள்ள தமிழர்கள் வரலாறு எழுதப்படவே இல்லை. வரலாற்றில் எழுதப்பட்டவை நகரம் சார்ந்த விசயங்கள் மட்டுமே.
இலங்கேஸ்வரன் என்று புகழப்பட்ட ராவணன் தமிழன். ஆனால் திருமாலும் முருகனும் மட்டுமே தமிழ் கடவுள்கள். ஈஸ்வரன் தமிழ் கடவுளல்ல. கடிவாளம் போட்டு ஆயும் ஆய்வு முடிவுகள்.
தமிழனை தூண்டி விட்டு நீ பாதி நான் பாதி என்று கொள்ளை அடிக்கலாம் என திரியும் திராவிட கட்சிகளை அழிக்க முடியாது ஆனால் பயமுறுத்தலாம் ரஜினியை காட்டி. ஆனால் ரஜினி தமிழரல்ல...
எடப்பாடி பச்சை தமிழர் தான். தமிழுணர்வு பொங்கட்டும்.
யார் தமிழர்?
பண்முக தன்மை கொண்ட இந்தியாவில் எல்லா இனங்களும் கலந்து வாழ்கிறார்கள். அவர்களில் யார் தமிழர் தாய் மொழி தமிழாக கொண்டவர்கள் மட்டுமா? கலப்பு திருமணம் தவறா?
கடைசியாக இணையவெளியில் தமிழ் தமிழர் என கருத்து பதிபவர்களில் எத்தனை பேருக்கு 'ழு' 'ஐ''ஒ' இந்த எழுத்துக்களை பிழை இல்லாமல் பேனாவால் எழுதத் தெரியும்?
No comments:
Post a Comment