Wednesday, 9 December 2020

தபால்காரர்

 கட்டு கடிதங்களோடு

மிதிவண்டியில் அவர்

வருவதே தனி அழகு!

பொங்கல் முன்போ

பொங்கல் முடிந்தோ

வரும் வாழ்த்து அட்டைகள் தான்

எங்களுக்கான கடிதங்கள்.

தபால் தலை இல்லாமல்

வந்ததற்கு தண்டம் கட்டி

வாங்கி மகிழ்வோம்.

மாடு மேய்க்கும்

மாடசாமி தாத்தா

எனக்கு எதாவது லட்டர்

வந்திருக்கிறதா என 

நகையாடுவார்.

தபால்காரரின் பதில்

புன்னகை மட்டுமே.

மாடசாமி தாத்தாவின்

முதியோர் உதவித்தொகையை

வீடு தேடி கொடுத்து

புன்னகையை பரிசாக

பெற்றார் தபால்காரர்.

துருப்பிடித்து போன

தபால் பெட்டியை

மோட்டார் சைக்கிளில் வரும்

புது தபால்காரர்

தொடுவதில்லை.

அதற்கான சாவி

தொலைந்திருக்கலாம்.

நாங்கள் எங்கள்

பால்யத்தை அதில் தான்

பூட்டி வைத்திருக்கிறோம்!!!


No comments:

Post a Comment