Tuesday, 19 February 2019

சாதி

கிராமங்களில் தான் சாதி
பார்க்கிறார்கள்
நகரத்தில் இல்லை என்றார்கள்
உண்மை தான் நகரத்தில்
பக்கத்து வீட்டுக்காரனின்
முகத்தையே சரியாய்
பார்த்ததில்லை பிறகெப்படி
சாதி பார்க்க முடியும் !

நகரத்தில் தான் எல்லா
சாதிக்கும் தலைமை
அலுவலகமும்
திருமண தகவல் மையமும் உள்ளது !

ஒவ்வொரு தொகுதியிலும்
ஒரு குறிப்பிட்ட சாதியினரே
வெல்ல முடியும் என்பது
நடப்பு அரசியல் !

எல்லாரும் அர்ச்சகர் ஆகலாம்
என்று சொல்லிக்கொள்ளும்
கட்சிகளில் எல்லாரும்
தலைவராக முதல்வராக
முடியவில்லை !

அப்படியே முதல்வரானாலும்
பதவியை காப்பாற்ற
மக்கள் பிரதிநிதிகளுக்கு
நட்சத்திர விடுதியில்
சகல விருந்தும் அளிக்க வேண்டியுள்ளது !

கல்வியால் சாதி ஒழியும்
என்றார்கள்
கல்வி கற்க கற்பிக்க
சாதி சான்றிதழ் தேவைப்படுகிறது !

பன்றிக்கு பூனூல் அணிவித்தால்
சாதி ஒழியும் என்கிறது
பகுத்தறிவுக் கூட்டம் !

சாதியை எப்படியாவது
ஒழிக்க வேண்டும் எனும்
முனைப்பில் ஊடகங்களும்
ஆதிக்க சாதி தாழ்ந்த சாதி என்று
செய்தி வெளியிட்டு சாதிவெறி
எனும் கணல் அணையாமல்
பார்த்துக்கொள்கிறார்கள் !!!

No comments:

Post a Comment