Sunday, 29 April 2012

கீழ பிள்ளையார் குளம்


கீழ பிள்ளையார் குளம்  
திருநெல்வேலி மாவட்ட  கிராமம். தொழில்  பெரும்பாலும்  விவசாயத்தை  அடிப்படையாய்  
கொண்டது . பெண்கள்  பீடி  சுற்றும்  தொழில்  செய்கிறார்கள் .

அருகில்  உள்ள  ரயில்  நிலையம்  தாழையூத்து  10kms திருநெல்வேலி  25kms
அருகில்  உள்ள  விமான  நிலையம்  தூத்துக்குடி  60-65 kms மதுரை  150 kms
அடிப்படை வசதிகள்
·         தொடக்க பள்ளி ஒன்று உள்ளது. நிடுநிலை பள்ளி 3 km தொலைவில் மேல பிள்ளையார் குளத்தில் உள்ளது.உயர் நிலை பள்ளி 9 km தொலைவில் மானூரில் உள்ளது.
·         மருத்துமனை 4.5km தொலைவில் அலவந்தான் குளத்திலும் 9 km தொலைவில் மானுரிலும் உள்ளது.
·         வங்கி உரக்கடை டாஸ்மாக் போன்ற வசதிகள் மானூரில் உள்ளன.
பேருந்து

திருநெல்வேலி  ஜங்ஷன்ல்  இருந்து  டவுன்  ரஸ்தா  மானூர்  வழியாக
  • சீதாபதி  8 முறை  (தடம்  எண் 46)
  • அரசு  பேருந்து  2 முறை  (தடம்  எண்  37G)
  • அரசு  பேருந்து  2 முறை  (தடம்  எண்  23B)
  • அரசு  பேருந்து  2 முறை  (தடம்  எண்  – )
  • அரசு  பேருந்து  2 முறை  (தடம்  எண்  –) (சொகுசு  பேருந்து )

கல்வி

மூத்த  தலைமுறையினர்  கல்வி  கற்கவில்லை. அவர்களுக்கு  கேள்வி  ஞானமும், அனுபவ  அறிவும் அதிகம். இரண்டாம்  தலைமுறையினர்  கொஞ்சம்  பேர்  பாபநாசம்  செயின்ட்  மேரிஸ்  பள்ளியில்  படித்துள்ளனர். சிலர்  பட்டாளத்தில் (மிலிடரி ) வேலை  பார்த்துள்ளனர். பலர்  இந்தியா  சிமிண்ட்ஸ்  மற்றும்  கிருஷ்ணா  மைன்ஸ்ல்  நிரந்தர  தொழிலாளியாய்  வேலை  பார்த்து  ஓய்வு 
பெற்றுள்ளனர் . மூன்றாம் தலைமுறையினர்  கல்வி  100% இல்லை  என்றாலும்  பேஸ்புக்கு  வந்து  விட்டனர்.
நான்காம்  தலைமுறையினர்  100% கல்வி

விளையாட்டு

இன்றைய  சூழலில்  கிரிக்கெட்  மட்டுமே பிரதான விளையாட்டு. முன்  நாட்களில்  பாண்டி, பல்லாங்குழி, பம்பரம், சிலன்குச்சி , கோலிகாய், மரம்  ஏறி  குரங்கு, கள்ளன்  போலீஸ்  போன்ற  விளையாட்டுகள்  இருந்தன.
கோவில்கள்

கருப்பசாமி  கோவில்  ஓடக்கரை

மேல பிள்ளையார் குளம்  அருகில்  ஒரு  ஓடை  கரையில்  இருக்கிறது   இந்த  கோவில். முன்னோர்கள்  கருப்பசாமியை ஊர்க்கு  கொண்டு  வரும்  போது இந்த  ஓடை  கரையில்  வைத்து  விட்டு  இளைப்பாறினார். அதற்கு  பின்  அந்த  இடம்  பிடித்து  போய் 
விட்டதால் கருப்பசாமி  ஓடைகரையை  விட்டு  வரமறுத்து  விட்டதாக  தகவல்.

கருப்பசாமி  கோவில்

ஊரின்  மத்தியில்  அமைத்துள்ளது  இந்த கோவில். ஓடை  கரை  கருப்பசாமியில்  இருந்து  படி மண்  எடுத்து  வந்து  ஊருக்குள்  பிரதிஷ்டை  செய்யபட்டுள்ள கோவில்.

காட்டுமாடசாமி கோவில்

குறிச்சி  நகர்  அருகில்  ஒரு  ஓடை  கரையில்  இருக்கிறது  இந்த கோவில். இந்த  கோவிலில்  தளவாய்  மாடன் தளவாய்  மாடத்தி  மற்றும்  சங்கலி  பூதத்தார் அருள்  பாலிக்கிறார்கள் .

குறிச்சி  உடையார்  சாஸ்தா

குறிச்சி  நகரின்  மைய  பகுதியில்  அமைத்துள்ளது இந்த கோவில்.

அரிஹர  புத்தனார் சாஸ்தா

குளத்தின்  வடக்கு  கரையில்  வீற்றிருக்கிறார்  இந்த  சாஸ்தா . கரை  சாஸ்தா  என்று  பெரும்பாலும்  அறிய  படுகிறார். பணிகுனி  உத்திர  தினங்களில்  சாஸ்தா  வழிபாடு  பிரசித்தி  
பெற்றது.

முத்துவீரன்  கோவில்

குளத்தின்  கிழக்கு  கரையில்  மறுகால்  மடை  அருகில்  இருக்கிறது  இந்த  கோவில் .

உதிரமாடன்  கோவில்

ஊருக்கு கிழக்கே  செழிய  நல்லூர்  செல்லும்  வழியில்  இருந்து  விலகி  ஆரோரத்தில்  இருகிறார். இங்கு  உதிரமாடன் , சிவனார் , பேச்சி  அம்மாள் , முண்டன் , தளவாய் மாடன் , தூசி மாடன் , துளசி மாடன்  உள்பட  21 தெய்வங்கள்  இருப்பது சிறப்பு .

மாடசாமி  கோவில்

ஊரின் வடக்கு பகுதியில்  உள்ளது  மாடசாமி  கோவில். ஊர்  போது  கோவில்களில்  இதுவும்ஒன்று. மழை வேண்டி  மாடசாமிக்கு கொடை கொடுப்பது  வழக்கம் .

அம்மன்  கோவில்

ஊரின்  வடக்கு பகுதியில்  வயகாட்டினுள்  இருக்கிறது  அம்மன்  கோவில். இங்குள்ள  தான் தோன்றி  அம்மனுக்கு  மேள சத்தம்   மற்றும்  வில்லிசை  பிடிக்காது. எனவே  இந்த  கோவிலுக்கு  குரு  பூஜை  மட்டுமே  
உண்டு  கோவில்  கொடை  கிடையாது.

கோவில் கொடை

கோவில் கொடை பொதுவாக மூன்று நாட்கள் நடைபெறும். 
வியாழகிழமை இரவு கரகாட்டம் நடை பெறும். இப்போதெல்லாம் கரகாட்டம் முகம் சுழிக்கும் 
வகையில் இருப்பதால் பாட்டு கச்சேரி வைக்க ஆரம்பித்து விட்டோம்.
வெள்ளி கிழமை மத்தியான கொடை.
வெள்ளி கிழமை அர்த்த ஜமாத்தில் நடை பெறும் சாம கொடை .
சனிகிழமை   காலை கிடா வெட்டு.
இப்போது கொடைகளில் சரக்கும் சண்டையும் சாதாரணமாகி விட்டது.  
சிறப்புகள்
ஐப்பசி மாத மழைக்கு பின் பச்சை பசேலென வயல் வெளிகளை பார்க்கலாம். குற்றால சீசனில் ஊரில் இருந்து கொண்டே சாரல் ரசிக்கலாம். மழை காலங்களில் ஓடைகளில் செம்மண் கலரில் நுரையுடன் கூடிய வெள்ளம் பார்க்கலாம். தவளை கத்தும் இரவுகள். பனி பெய்யும் காலைகள். பொங்கல் விழா போட்டிகள். இன்னும் மண் மணம் மாறாத நிறைய விஷயங்கள் உள்ளன.


அழிந்து  போன  அழியாத  நினைவுகள்

குத்துக்கல்

குளத்தின்  நடுவே  தூண்  போன்ற  செங்குத்து  கல்  இருந்தது. அது  தான்  குத்துக்கல். குளத்து  
தண்ணீர்  குத்துகல்லை மூழ்கடித்து விட்டால்  குளம்  நிறைந்ததாய்  அர்த்தம். கரை  சாஸ்தா 
கோவிலில்  இருந்து  நீந்தி  சென்று  குத்துகல்லை  தொட்டு  விட்டால்  தான்  நீச்சலில் பாஸ். முதலில்  குத்துக்கல்  உடைத்தது. தற்போது  குத்துக்கல்  இல்லாமலே  போய்விட்டது. 
ஆனாலும் நினைவுகளில்  நீங்காமல்  உள்ளது  குத்துக்கல்.

ஊர்  கிணறு

ஊரில்  புழக்கதிற்கான  தண்ணீருகென  ஒரே கிணறு மாடசாமி  கோவில் அருகில்  இருந்த 
ஊர்கிணறு. யார்  வேண்டுமானாலும்  தண்ணீர்  இறைத்து  கொள்ளலாம்.( தற்போது  உள்ள  
நல்லிகளில்  அடுத்த  தெரு  ஆட்கள்  தண்ணீர்  பிடிக்க  முடியாது!) மேல்நிலை  நீர்தேக்க  
தொட்டியும்  குழாய் இணைப்புகளும்  வந்தபின்  ஊர்கிணறு  நாரை கிணறாய் மாறிவிட்டது. 
ஊர்கிணறு  சமத்துவத்தை  நிலைநாட்டியது. ஆனால் குழாயடிகளோ  குடும்மிபிடி  சண்டைகளை   வளர்த்துவிட்டன

கமலை  கிணறு

உயர்  தொழில்  நுட்பத்தின்  உதவியால்  மின்  மோட்டார்  பம்ப்களும், நீர்  முழ்கி  பம்ப்களும்  
வந்து  கமலை  கட்டி  இறைப்பதை  ஓரங்கட்டிவிட்டன. சீரான  இடைவெளியில்  கூனையில்  
இருந்து  வழியும்  நீரை  மீண்டும்  ஒரு  முறை  காண  மனது  அலைபாய்கிறது. 
கமலைகினறுகளுக்கு சாட்சியாய் பெரிய  கற்கள்  மட்டுமே  இப்போது  உள்ளன.


பனங்காய்  வண்டிகள்

ஒவ்வொரு  வருட  பனங்காய்  சீசனிலும்  தின்று  முடித்த  பனங்காய் யை  சக்கரமாய்  பயன்படுத்தி  ஓட்டும்  வண்டி  இபோது  வழகொழிந்து  விட்டது. ஒரு  சக்கர  வண்டி  ஓட்டினால்  சிறுவன்  
என்றும் , இரு  சக்கர  வண்டி  ஓட்டினால்  பெரிய  சிறுவன்  என்றும்  கோட்பாடு  இருந்தது. செல்  போன்  கேம்களின்  முன்னே  சிதைந்துவிட்டன   பனங்காய்  வண்டிகள்.



கல்  திரட்டு  காடுகள்

கல்திரட்டு  காடுகள்  சிறந்த  விவசாய  நிலங்கள்  இல்லை  என்றலும்  உளுந்து, பாசி பயிறு 
போன்ற  மானாவாரி  பயிர்கள்  விளைய  ஏற்றவை . கல் திரட்டு  காடுகளில்  அடிக்கும்  கற்று  வீட்டை  விட்டு  வெகு  தூரம்  வந்து  விட்டதாய் 
சொல்லும். காற்றாலைகாரன் திருடி  விட்டான்  கல்  திரட்டு  காடுகளை  (காற்றை).

No comments:

Post a Comment