Tuesday, 20 March 2012

சென்னையில் என் முதல் நாள்


காலையில் எழுந்த உடன்  கழிவறைக்கும்
குளியலறைக்கும்  நீண்ட  வரிசை !
அடுத்து  இஸ்திரி  பெட்டிக்கு
காத்திருப்பு !

ஆடை  அணிந்து  தெருவில்
நடந்தேன்
சென்னை  தமிழ்  மணந்தது !
பேருந்து  நிறுத்தம்  வந்தேன்
பேருந்து  விழி  பிதுங்கி  வந்து
நின்றது !

படிக்கட்டு  பாண்டிகள் இறங்கி
வழிவிட்டனர்
பெண்களை  உரசி  சரசமாட
நினனக்கும்  விரசகாரர்களால்
நடு பேருந்தில்  இடம்  இருந்தும்
நகர  முடியவில்லை !

“பேருந்தில்  நீ  எனக்கு  ஜன்னலோரம்
என்றான் சினிமா  கவி ஞன்
ஆனால் இவர்களுக்கு  பேருந்தில்
நீ  எனக்கு  படிகட்டோரம்!

அலுவலகத்திற்கு  சென்றேன்
ஆங்கிலம்  சரளமாய்  இருந்தது
சென்னை  செந்தமிழ்  என்று  ஒன்று
உண்டே  என்று  அதை  தேடினேன்
தொண்டை  வறண்டு  விட்டது !

ஒரு  ரூபாய் கொடுத்ததால்
குளிர்ந்த  நீர்  கிடைத்தது
சென்னை  செந்தமிழை  கண்டேன்!
பேருந்து  பெயர்பலகையிலும்
திரைப்பட  சுவரொட்டியிலும்!

இரவு  அறையில்  படுக்க
இடம்  பத்தாமல்  மொட்டை  மாடியில்
படுத்தேன்
கொசுக்கள்  காதோரம்  வந்து
தாலாட்டின
இப்போது  தெரிந்து  கொண்டேன்
சென்னையில்  இலவசமாய்
 கிடைப்பது  இது  மட்டும்  என்று!

உடம்பில்  நீருற்று  பெருகினாலும்
பரவாயில்லை  என
கொசுக்களின்  தாலாட்டு
பிடிக்காமல்  போர்வையை
இழுத்து  போர்த்தினேன்
சட்டென்று  தூங்கி  போனேன்!

ஆயிரம்  கனவுகளுடன்
சென்னை  வந்ததாலோ   என்னவோ
கனவுகள்  வரவேயில்லை !

No comments:

Post a Comment