Wednesday, 7 March 2012

23 C LSS








வட சென்னையின் அயனாவரத்தையும்
தென் சென்னையின்
பெசன்ட் நகரையும்
வண்ணங்களோடு இணைக்கும்
வானவில் தான் 23C
இதன் பயண பாதை!
ஒரு சுவாரஸ்யமான உலகம் தான்!

பெசன்ட் நகரில் பயணத்தை
துவக்கினால் அடையாரில்
சென்னையின் முக்கியமான
சிக்னல் மத்ய கைலாஷ் !

அண்ணா பல்கலை கடந்து
சின்ன மலை ஏறி
அழுக்கு நதி அடையாரை
கடந்து சைதாபேட்டை
வந்தால் அகன்ற வீதியாய்
அண்ணா சாலை!

அண்ணா சாலையில் அதிகம்
போக்குவரத்து நெரிசல் உள்ள
நந்தனம்தேனாம்பேட்டை
சந்திப்புகளை நின்று 
திணறி கடக்க வேண்டிய 
கட்டாயம் !

LIC கட்டிடம் பார்த்துவிட்டு 
அண்ணா சாலையில் இருந்து 
நழுவி எழும்பூரை
பார்க்க வேண்டும் !




எழும்பூரில் இருந்து
பூந்தமல்லி நெடுங்சாலையில் ஏறி
தாச பிரகாஷ்ல் பிரிந்து
மோட்சம், அபிராமி
திரை அரங்கங்களை கண்டு
ரசித்து விட்டு தான்
அயனாவரம் பணிமனையை
அடைய முடியும் !

23C ன் சிறப்பம்சம் என்பது
வேலை நாட்களில்
அண்ணா சாலையில் இருமருங்கிலும்
மொத்த பணியாளர்களுக்கு
பணிவிடை செய்வது!

பெசன்ட் நகர் கடற்கரைக்கு
செல்வோருக்கு
உறுதுணையாய் இருப்பது!
பள்ளி மாணவர்களுக்கு
படிக்கட்டில் பயணம்
செய்ய பயிற்சி அளிப்பது!
23C பள்ளி மாணவர்களின்
பாட புத்தகத்தை
படித்தது உண்டு !
வேலை செய்வோரின்
வேதனையை பார்த்தது உண்டு !

சென்னைக்கு அறிமுகமாகி
வேலை தேடுவோரின் 
பைல்களை புரட்டியதுண்டு !

மகப்பேறு மருத்துவமனைக்கு செல்லும் 
தாய்குலங்களின் சுமையை 
தாங்கியதுண்டு !

பச்சிளம் குழந்தைகளின் 
கதறல்களை கேட்டதுண்டு !
“பார்த்தேன் ரசித்தேன் உட்பட
சில படங்களில் 
நடித்ததுண்டு !

சில்மிஷ சீண்டல்களால்
பெண்டிருக்கு இடம் மாற்றிய
பெருமை இந்த
பேருந்துக்கும் உண்டு !

 எல்லாவற்றையும் விட
பேருந்து முழுக்க நிரம்பி
வழியும் எக்கசக்க காதல்கள்
காத்திருப்புகள் கண் பேசும்
வார்த்தைகள் கண்டனங்கள்
என மொத்தத்தில் 23C
ஒரு காதல்  x பிரஸ்
23C ஒரு கதைகளம் தான்
கதாநாயகன் அல்ல

நெடும்தூரம் செல்லும் 
நகர பேருந்து என்பதால் 
 கதாநாயகர்கள் தான்
இதில் உள்ளனர்
கதாநாயகர்கள் படிக்கட்டு
பயணத்தில் கை தேர்ந்தவர்கள்
இதுவரை எந்த சூழலிலும்
இவர்கள் விழுந்ததில்லை
so விழா நாயகர்கள் !

நான்கு காதல்கள்
1. அடையாறு முதல் அண்ணா பல்கலை வரை
2. சைதாபேட்டை முதல் தேனாம்பேட்டை வரை
3. நந்தனம் முதல் LIC வரை
4. அயனாவரம் முதல் அபிராமி வரை

அருண்அண்ணா  பல்கலைகழக
மாணவன் , முதுகலை
பட்ட  படிப்பு
அடையாரில்  பேருந்தில்
ஏறுபவன் !
பெரும்பாலும்  பேருந்து
உட்புறம்  செல்ல
இவன்  முற்படுவதில்லை

சாதனாசக  பயணி
அதே  பேருந்து  நிறுத்தம்
சைதையில் தனியார்
நிறுவனத்தில்  பணி!

கதிர்  சைதாபேட்டையில்
பேருந்தில்  தொற்றிகொள்பவன்
சென்னைவாசி
என்ன  வேலை  பார்க்கிறான்
என்ற  உண்மை  எவர்க்கும்
தெரியாது  நாமும்
கிளற  வேண்டாம்

“த்தா” என்ற  உலகத்தரமான  
வார்த்தை  இவன்  உதடுகளில்
அடிக்கடி  வரும்
நன்றாக  சொல்லி  பார்த்தால்
உலகத்தை  உருவாக்குபவள்
என்ற  பொருள் வருவதால்
மன்னித்து  விடுவோம்

தாமு சார்லியாய்
 ஜால்ரா உக்கு
இரண்டு  நண்பர்கள்
இருப்பதால்  இவன்   என்றும்
இளைய  தளபதி  தான் !

மதன்  BPO ல்   வேலை
செய்பவன்
ஆங்கிலம்  சரளமாய்  பேசுவான்
அது  போதுமே !
LIC பக்கத்தில்  அலுவலகம்
CIT நகரில்  bachelor வீடு
23C தான்  இவனது  வாகனம்
காரணம்,

ராதிகாஇவளும்  BPO ல்
வேலை  செய்பவள்
மாநிறம்ஒப்பனை  இல்லாமல்
பார்த்தால் ஒவ்வாமை  வந்துவிடும்

வீட்டில்  இருந்து  கிளம்பும்  போதே
அடையாள  அட்டை  அணிந்து
அமர்களப்படுத்துவாள்
தலைமுடியை  பின்னல்  போட
பிடிக்காதாஅல்லது  தெரியாதா
என்பது  தெரியவில்லை
எப்போதும்  தலைவிரி   கோலம்  தான் !

வார கடைசிகளில்
ஆடை  அலங்கோலம்  வேறு
காண  சகிக்காது  இந்த
கலாசார  சீர்கேடு !
மதனுக்கு  பார்த்த உடன்  ராதிகாவை
பிடிக்கவில்லை
பார்க்க  பார்க்கத்தான்   பிடித்தது
அவள்  வரும்  தெருமுனையில்
நின்று  புகை  பிடிப்பான்
அவளை  எப்படியாவது  கைபிடிக்க
வேண்டும்  என்பதே  ஆசை!

அவன்  அலைபேசியின்
அழைப்பொலி கூட
“தெருமுனையை  தாண்டும்  வரைக்கும்
வெறும்  நாள் தான்  என்றிருந்தேன்
தேவதையை  பார்த்ததும்  இன்றோ
திருநாள்  என்றேன்”  என்ற  பாடல்  தான்

முத்து இவனும்  சென்னைவாசி
அயனாவரத்தில்   வசிப்பவன்
‘X’  பிரஸ்  மாலில்  ஒரு  துணிக்கடையில்    
துணி  மடிப்பவன்!
இவன்  காதலி  ஜானகி
புரசைவாக்கத்தில்  புடவை
கடையில்  துணி  மடிப்பவள்!

மகாலட்சுமியை  உவமையாக
கொண்டால்  ஜானகி
உவமேயமாக  இருப்பாள்!
பேருந்தே  வியக்கும்
பேரழகி   என   சொல்லலாம்
புடவை  கடையில்  வைத்து
அவளை  பார்த்தான் முத்து
அவளை  மடிக்க  முயற்சிக்கிறான்!

இங்கேயும்  23 C தான்
இருவரின்  வாகனம்

கதிருக்கு  ஜன்னல்  இருக்கை
கல்லூரி மாணவி
ஷன்மதி  மீது காதல் !
ஷன்மதி  SIET கல்லூரி மாணவி
அப்பா  போலீஸ்காரர்
கதிர்  படிக்கட்டில்  தொங்கி
தலை  கோதி கொண்டு
“த்தா” என்று  பேசிக்கொண்டே
வரும்   அழகில்  மயங்கித்தான்
போனாள்  ஷன்மதி !

கதிர்  தான்  தளபதியாயிற்றே
நடத்துனரிடம்  நகையாடுவது
அவனது  பொழுதுபோக்கு
ஒருநாள்  படிக்கட்டில்
தாய்குலங்கள்  ஏறும்  பொது
விசில்  அடித்து  விட்டார்
நடத்துனர்

“த்தா”  பொம்பளைங்க
ஏறும்  போது விசில்  அடிப்பியா
“த்தா”  அச்சி சாவசிடுவேன்
“த்தா”  பெரிய  பப்பா நீ
சரமாரியாய் சாடினான்  கதிர்
நடத்துனரும்  தவறு  தன் பக்கம்
என்பதால்  தலை  குனிந்து
கொண்டார் !

கதரின்  சமூக பற்றை  கண்டு
வியந்தாள்  ஷன்மதி
அவன்  செல்போன்  எண்ணை
செல்லமாக  கேட்டாள்
அவனை  சுற்றி  பட்டாம்பூச்சிகள்
பறந்தது !

ஷன்மதி  – கதிர்
கடலையும்  காதலும்  
வளர்ந்தது  23C
அறியாத   இரவுகளில் !

ஒரு  நாள்  இரவு  ஷன்மதி
அப்பா  ஒட்டு  கேட்டார்
காதல்  கலைந்தது
இல்லை  கலைக்கப்பட்டது
கதிர்  கலங்கிவிடவில்லை
ஆனாலும்
பயணம்  அவன்
மேற்கொள்வதில்லை
போலீஸ்காரன் சகவாசம்
எதுக்கு  என்று  விட்டுவிட்டான்!
ஷன்மதி  கொஞ்சமாய்
தவித்தாள் துடித்தல்
தவிப்பும்  துடிப்பும்
கொஞ்ச  நாளில்    அடங்கிவிட்டது!

அருண்  சாதனா உடன்
புன்னகையில்   ஆரம்பித்து
கொஞ்சமாய்  பேசி
காதலை  சொல்ல  
தயாராகி  இருந்தான்
அருண்  கவிதையில்
கை  தேர்ந்தவன்
கவிதையாய் காதலை
எழுதினான்
காகிதத்தில் !
 
என்னவளே
உன்னிடம்  ஒரு  கேள்வி
உன்  சிறகுகளை  எங்கு
மறைத்து  வைக்கிறாய்
தேவதையே !
உனக்கு  ஒரு  எச்சரிக்கை
பூங்கா களுக்கு  தனியாய்
சென்று  விடாதே
பட்டாம் பூச்சிகள்
பறந்து  வந்து
கொத்தாய் பூவே  உன்னை
தூக்கி சென்றுவிடும்!
உனக்காக  ஒரு  பரிசு
தர  ஆசைபடுகிறேன்
எனது  இதயத்தை  தருகிறேன்
காலியாக  அது  இருக்கும்  என்று
கேலியாக  கூட நினைக்காதே!
அதன்  ஆரிக்கிள்களிலும்
வென்றிகிள்களிலும்
நீயே  நிறைத்திருக்கிறாய் !   
என்  காதலை  தருகிறேன்
உன்னிடம்
உன்னுடன்  வாழும்  கனவை
நிஜமாக்கி  தா
என்  பேருந்து  தேவதையே!

காதலுடன்
அருண்

சாதனாவிடம்  சேர்த்தான்
காதலை  பேருந்தில்  வைத்து
சாதனா  படித்து  பார்த்தாள்
பிடித்திருந்தது
கவிதையை,  காதலை
பிடிக்கவில்லை
சாதனா  நேரடியாகவே
சொல்லிவிட்டாள் என்னை
கல்யாணம்  பண்ணனும்னு
ஆசைபட்டா  எங்க  அப்பா
அம்மாகிட்ட  பேசுங்க  என்று !

முதுகலை  படிப்பை  முடித்தால்தான்
முடிவெடுக்க   முடியும்
என்ற  நிலையில்  இருந்தான்  அருண்
பேருந்து  பயணம்  அவனுக்கு
பிடிக்கவில்லை
ஆனாலும்  சாதனாவின்
முகம்  பார்த்து
சந்தோசமாய்  தான்  இருந்தான்!

அவனது  கவிதை  தொகுப்பில்
ரசித்த  இன்னொரு
கவிதை  இதோ

காதலை  பற்றி
தெரிந்ததில்லை
உன்  கண்களை  காணும்  வரை !
அழகியலை  பற்றி
அறிந்ததில்லை
உன்னை  காணும்  வரை !
பூக்களின்  புன்னகையை
பார்த்ததில்லை
உன்னை  பார்க்கும்  வரை !
மழை  வரும்  பொது  ஆண்  மயில்
தொகை  விரிக்கும்
படித்திருக்கிறேன்
மழை  பெய்யும்  போது பெண்  மயில்
குடை  விரித்ததை  கண்டேன்
உன்னை  பார்த்த  மழைக்கால
காலை  நேரத்தில்!
சிறகுள்ள  தேவதைகளை
சினிமாவில்  பார்த்திருக்கிறேன்
சிறகில்லாத  தேவதையை
கண்டேன்
பேருந்து  நிறுத்தத்தில் !

கடவுள்  நேரில்  வந்தால்
நன்றி  கூறி  வரம்  கேட்பேன்
நன்றி  உன்னை  எனக்கு
காட்டியதற்கு !
உன்னோடு  உயிருள்ளவரை
வாழ வேண்டும்  என்று
வரம்  கேட்பேன் !

மதன்  சொல்லும்  முன்
ராதிகாவே  சொல்லிவிட்டாள்
ஒரு  காதலர்  தினத்தின்
காலையில்
வாழ்த்து  அட்டை  மூலம்
காதலை  சொல்லிவிட்டாள் !

அதற்கு  பின்  நாட்களில்
அவர்களின்  கடலையை
23C யால்  ஜீரணிக்க
முடியவில்லை  என்பது
சற்று  உண்மை  தான் !

ஒவ்வொரு  வாரமும்
விதவிதமான  பரிசு
பொருட்களால்
ராதிகாவை
கவர்ந்து  கொண்டே
இருந்தான்

முத்து தினமும்  ஜானகி
முகம்  பார்த்தான்
அவளும்  அருகில்  இருப்ப வளின்
காதில் எதோ  பேசி
குறுநகை  புரிவாள் !
இவனும்  ‘சுப்ரமணியபுரம்’ ஜெய் போல்
தலையை  ஆட்டி கொள்வான் !

தினமும்  பார்த்தவளை
திடிரென  சிலநாட்களாக
பார்க்க  முடியவில்லை
எதிர்பாராத நேரத்தில்
புடவை  கடையில்
வேலை   பார்ப்பவள்
புடவையில்  வந்தாள்!

அவளை  அதுவரை
சுடிதாரில்  மட்டுமே  பார்த்திருக்கிறான்
புடவையில்  அவளை
பார்ப்பது  முத்துக்கு புதிது
உற்று  பார்த்தால்
ஜானகியின்  நெற்றி  வகிட்டில்
குங்கும  பொட்டு !

உருக்குலைந்து  போனான்  முத்து
சேலையில்  வந்தவள்
சோகம்  விதைத்து  போனாள் !

டாஸ்மாக்  கூட்டி சென்று
சரக்கு  அடிக்க  வைத்து  அவளை
மறக்கடித்தனர்
முத்துவின்  தோழர்கள் !

இன்றும்  23Cன்  
பின்  படிக்கட்டில்
சோர்ந்த  முகத்துடன்
முத்து  சென்று
வருகிறான்

சாதாரண  நாளில்
சாதனாவை  சந்தித்தான்  அருண்
சட்டென்று  மறக்க  முடியாத
நாளாக  மாற்றி விட்டாள் !

தீபம்   அச்சகத்தில்
அச்சேறியிருந்த
திருமண  அழைப்பிதழ்
மாப்பிள்ளை  முதுகலை
பட்டதாரி
மென்பொருள்  துறை  வேலை
அவள்  நகர்ந்துவிட்டாள்

பேருந்து  நிறுத்தத்தில்  நின்று
பேருந்தை  பார்த்தான்
பெசன்ட்  நகர்  என்பது
கலங்கி  இருந்தது , இல்லை
இவன்  கண்கள்  தான்
கலங்கி  இருந்தது !

கண்கள்  கசிந்தாலும்
மனது  கவிபாடியது
விட்டு  சென்றவளை  எண்ணி
மன்னிக்கவும்
மனதை  தொட்டு  சென்றவளை  எண்ணி !

உன்னோடு  நான்
கைகோர்த்து  நடப்பதாய்
கனவு  கண்ட  வீதிகள்
கண்களை  குளமாக்குகிறது !
உன்னோடு  நான்
பேசி  சிரிப்பதாய்
சொன்ன  வார்த்தைகள்
மனதை  ரணமாக்குகிறது !
உனக்காக  நான்
காத்திருக்க  நினைத்த
மர அடிவாரம்
நிழல்  தர  மறுக்கிறது !
உனக்கு  நான்
பரிசளிக்க  நினைத்த
பரிசு  பொருட்கள்  என்னை
பரிகாசம்  செய்கின்றன !
உனக்காய்  நான்
எழுதிய  காதல்  வரிகள்
என்னை  காயபடுத்துகின்றன !

குடையில்லாமல்  வந்து
நனைந்து   விட்டேன்
உன்  காதல்  மழையில் !
மழைவிட்டும்  நான்
நனைகிறேன்
கண்ணீர்  மழையில் !

மதனுக்கு  வேலை  பறிபோன
நாளில்  தான்  தெரிந்தது
ராதிகா  காதலை  காதலிக்கவில்லை
காசைத்தான் காதலிக்கிறாள்  என்று !

வேலை  போனதை
அவளிடம்  தான்  முதலில்
சொன்னான்
அடுத்த  வேலை  தேடி
கொள்வதாய் கூட
சொன்னான்!
அவள்  உதாசீனபடுத்திவிட்டு
சென்று  விட்டாள் 

வெறுத்து  போய்
பேருந்தில்  ஏறியவன்
மனகலக்கதில்  பயண  சீட்டை
மறந்துவிட்டான்!
பரிசோதகரின்  பார்வையிலும்
பட்டுவிட்டான்
பாக்கெட்டில்  ஒரு  பயணசீட்டு
இருந்தது
எடுத்து  நீட்டினான் !
அது  3 ரூபாய் பயணசீட்டு
இந்த  பேருந்தில்  இல்லாத
பயண  சீட்டு
செல்லாத  டிக்கெட்  என்று
வண்டிக்கு  அழைத்து  சென்றனர்

மனதுக்குள்  எண்ணி
கொண்டான்
தானும்  ஒரு
‘செல்லாத  டிக்கெட்’  என்று
அவன்  கண்ணோரத்தில்
பெருகிய  நீர்த்துளி
கன்னத்தை  தொட்டு  பார்த்தது !

இன்னும்  எக்கசக்க
செல்லாத  காதல்,
சொல்லாத  காதல்,
பகட்டான   காதல்,
படிக்கட்டு  காதல்,
சொல்லி  தோற்ற  காதல்,
ஏற்கபடாத   காதல்  என  

நிறைய  காதல்கள்,
நிறைய  தவிப்புகள்,
நிறைய  தயக்கங்கள்
நிறைய  சோகங்களுடன்

நாலு  கியரையும்  மாற்றி
நகர்வலம்  வருகிறது
நமது  பேருந்து
23C LSS!


No comments:

Post a Comment