Sunday, 31 August 2025

ககக -6

திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் என்ற தகவலை கேட்டதும் கபில் சர்மா மகிழ்ச்சி அடைந்தார். பல்விந்தர் சிங்கிடம் பேசினார். பல்விந்தர் சிங் ஒரு எச்சரிக்கை விடுத்தார், திருநெல்வேலி மாவட்டத்தில் சாதி கலவரங்கள் மீண்டும் வரும் சூழல் உள்ளது கவனமாக இருக்கவும் என்று.

திருநெல்வேலிக்கு வந்த மூன்றாம் நாளே பாளையநல்லூர் கிராமத்தில் அரிவாள் வெட்டு என்ற செய்தி உதவியாளர் மூலம் கபில்சர்மாவுக்கு வந்தது. சார், நாம அரசு மருத்துவமனைக்கு போய் வெட்டுப்பட்டவரை பார்க்க போறோமா எனறார் உதவியாளர். புரோட்டாகால்படி அரசியல்வாதி போகும் போது கூட போவோம் என்றார். 

கலெக்டர் அலுவலக இளம் உதவியாளர் ஒருவரை அழைத்து, எனக்கு இந்த பாளைய நல்லூர் கிராமம் எப்படிஇருந்துச்சுனு முழு வரலாறு வேணும். இரண்டு நாளில் ரெடி பண்ணுங்க. இந்த இரண்டு நாள் நீங்க வேற வேலை பார்க்க வேண்டாம் என்றார் கபில். 

அடுத்த நாள் மாலையே அலுவலக உதவியாளர் வந்தார். விளக்கி சொல்ல ஆரம்பித்தார். சார், சுதந்திரம் அடைஞ்ச டைம்ல அங்க ஒரு பெரிய குளம் இருந்திருக்கு. அப்புறம் அந்த குளத்தை தனியார் கல் குவாரியா மாத்தி, புது குளம் தோண்டி கொடுத்து இருக்காங்க. அந்த பகுதியில் இருந்தவங்க கல் குவாரியில் வேலை பார்த்து இருக்காங்க. 

அப்புறமா கவர்மென்ட் ஒரு சாராருக்கு வீடு கட்டி கொடுத்து இருக்காங்க. அது வடக்கு பக்கமா, அதுக்கு அப்புறம் அந்த ஊர் தெக்கூர், வடக்கூர்னு வேற ஜாதியினர் ஊரா மாறி இருக்கு. 

சமீபத்தில் கல் குவாரியில் போதுமான அளவு கல் இல்லாததால் அந்த தனியார் கம்பெனி அதை மூடிட்டாங்க. இப்போ அந்த ஊர்காரங்களுக்கு வேலை இல்லை. 

ஒரு வண்டி மட்டுமே போகக்கூடிய சின்ன பாலத்தில் இரண்டு பிரிவினர் டிராக்டர்கள் எதிர் எதிரே வர யார் வழிவிட வேண்டும் என்பது சண்டையாகி வெட்டு குத்து வரை போய் இருக்கு சார் என்றார் உதவியாளர். 

கபில் சர்மா நாளைக்கு நான் பாளையநல்லூர் போறேன் எல்லா ஏற்பாடும் பண்ணுங்க என்றார் உதவியாளரிடம். 

கபில் பாளையநல்லூர் சென்று ரெண்டு பகுதிக்கும் நடுவில் இருந்த சின்ன கோவிலில் வண்டியை நிறுத்தினார். மரியாதையுடன் வெறும் காலோடு  சென்றார். கலெக்டர் வருவது யாருக்கும் தெரியாததால் பெரிய பரபரப்பு இல்லை. 

ஒரு பாட்டி மட்டுமே அங்கே இருந்தார். கபில் இந்த சாமி பேர் என்ன என்று பாட்டியிடம் கேட்டார். இவர் கசமாடன், அது அம்மன், அவரு காவல் மாடன். அந்த சாமி மட்டுமே ஏன் தனியா தள்ளி இருக்கார் என்று கேட்டார் கபில். 

அவர் வண்ணார் சாதி தம்பி என்றார் பாட்டி. சாமியிலும் சாதியா என்று நினைத்து கொண்டார் கபில். பாட்டி இங்க உங்களுக்கு இருக்கிற பிரச்சினை என்ன என்று கேட்டார். எங்களுக்கு குடி தண்ணீர் தட்டுப்பாடா இருக்கு. தண்ணி ஏற்பாடு பண்ணுங்க தம்பி என்றார் பாட்டி. 

ஊர்காரர்கள் வந்துவிட்டனர். கல் குவாரியில் வேலை போனவர்களுக்கு, மில் வேலை வாங்கி தருவதாக உறுதி அளித்தார் கபில். பாலத்தில் மேற்கில் இருந்து வரும் வாகனம் விலகி வழிவிட வேண்டும் என்றும் கூறினார். 

குடிநீர் பிரச்சினை பற்றியும் பேசினார்கள். பாளையநல்லூரில் பாறைகள் அதிகம் என்பதால் ஆழ்துளை கிணறு அமைப்பதிலும் சிக்கல் என்றனர். ஊர் பெருசு ஒருவர் முன்வந்து கசமாடன் கண் எதிரே இருக்கும் இடத்தில் நல்ல ஊற்று இருக்கும் என்றும் ஆழ்துளை கிணறு அமைக்க கசமாடன் அனுமதிக்க மாட்டார் என்றும் கூறினார். 

கபில் அவரிடம் ஊற்று இருக்கானு பார்ப்போம். இருந்தால் கசமாடனுக்கு என்ன பரிகாரமோ அதை செய்து போர் போடலாம் என்றார். ஊரும் சரி என்றது. அன்று இரவு அங்கேயே தங்கினார் கலெக்டர். மறுநாள் பேப்பரில் செய்தி வந்தது. கலவரம் வராமல் இருக்க பாளையநல்லூர் கிராமத்தில் இரவு முழுக்க தங்கிய கலெக்டர். என்னய்யா வந்த உடனே ஹீரோயிசமா என்று அமைச்சரிடமிருந்து போனும் வந்தது. 

அறிவியல் முறைப்படி நிலத்தடி நீர் சோதனை நடத்திய போது பெருசு சொன்னது உண்மையானது. ஆனால் இன்னொரு பிரச்சினை கிளம்பியது. அந்த இடம் வடக்கூருக்கு அருகில் இருப்பதால் தெற்கூர்காரர்கள் தங்களது தனியாக ஆழ்துளை கிணறு மற்றும் நீர்தேக்க தொட்டி வேண்டும் என்றனர். தெற்கூர் பகுதியில் நீரோட்டம் பார்க்க உத்தரவிட்டார் கலெக்டர். 

கலவரம் நடக்காமல் சாதுர்யமாக செயல்பட்ட கலெக்டரை நேரில் பார்த்து வாழ்த்து தெரிவித்தார் அமைச்சர். அந்த மீட்டிங்கின் போது அமைச்சர், கலெக்டரிடம் சொன்னது. பாளையநல்லூர் தெற்கூரில் வெறும் பாறைகள் இல்ல, கனிம வளம் கொட்டி கிடக்கிறது. அவர்களை வேறு பகுதிக்கு அனுப்பி விட்டால் கனிம வளங்களை எளிதில் எடுக்கலாம் என்றார். கபில் அதற்கு ஒத்துழைக்கவில்லை. உனக்கு வேண்டியது வரும் யோசிச்சு முடிவெடு என்றார் அமைச்சர். 

கபிலுக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை கனிம வளம் பற்றிய செய்தியை சமூக ஆர்வலர்களுக்கு தெரிவித்தார். 

கசமாடனுக்கு பரிகாரம்செய்யும் நாளில் கலெக்டரும் அழைக்கப்பட்டார். அமைச்சர், எம்எல்ஏக்கள் வந்திருந்தனர். அன்றிரவு அங்கேயே தங்கி மக்களோடு பேச முடிவு செய்தார் கலெக்டர். 

இரவு கசமாடன் கோவில் அருகில் காத்தாட அமர்ந்தார் கலெக்டர். அப்போது முகத்தில் துணி கட்டி வந்த கும்பல் கபிலை வெட்டி சாய்த்தது. ஊரும் கலவர முகம் கொண்டது. 

மறுநாள் சாதி வெறியர்களால் கலெக்டர் வெட்டி கொல்லப்பட்டார் என்று செய்தி வந்தது. 

கசமாடன எதிர்த்து போர் போட்டு இப்படி உயிர விட்டுட்டாரே கலெக்டர் என்று கதறி அழுதார் ஊர் பெருசு. ஊர் மொத்தத்தையும் கைது செய்தனர். இரண்டு பிரிவினரையும் வேறு வேறு இடங்களில் குடி அமர்த்த வேண்டும் என்றது நீதிபதிகள் குழு. 

வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. விசாரணை குழு அதிகாரியாக ரஞ்சிதா ஐபிஎஸ் நியமிக்கப்பட்டார். 

No comments:

Post a Comment