Wednesday, 30 July 2025

அன்னா - குறுநாவல்

அன்னா என்ற பெயரைக் கேட்டதும் நான் ரஷ்யப் பெயர் போல உள்ளதே என நினைத்தேன். 

அன்னா, இயக்கம் ஒரு போராளிக்கு வைத்த பெயர். வாசு முருகவேல் அவர்களின் எழுத்துக்கள் எனக்கு மிகவும் பிடித்தவை. மூத்த அகதி நாவலுக்கு இலக்கியப் பரிசு கிடைத்தது. ஆக்காண்டி நாவல் பெரிய வீச்சை ஏற்படுத்தியது. 

அன்னாவை குறுநாவல் வடிவில் எழுதியுள்ளார்.  குறு நாவலில் உள்ள ஒரு வசதி ஒரே நாளில் வாசித்து விடலாம். 

ஹலால் பாலு, கூல் கிளின்டன், முகமூடி ராசன் என பாத்திரங்கள் வருகின்றன. யாரை பற்றியும் பெரிய விவரணைகள் கிடையாது. சில வரிகளிலே நமக்கு அவர்களைப் பற்றி ஒரு சித்திரத்தை கடத்தி விடுகிறார். 

பெரிய வலியை கூட சில வரிகளில் சொல்லிவிட்டார். பசுமாடு அனத்தி கொண்டிருந்தது. பறந்து வந்த செல் தென்னந்தோப்பை தாண்டி விழுந்ததும் மாட்டின் ஓசை இல்லை என்று எழுதி இருக்கிறார். 

வாசுவுக்கே  உரித்தான பகடியும் ஆங்காங்கே உள்ளது. கல்லுப்பிள்ளையார் முகத்தில் தெரிந்த ஒளியை அன்னா கவனிக்கவில்லை என்று போகிற போக்கில் சொல்லி செல்கிறார். 



இந்த நாவலை புதிய முறையில் எழுதியுள்ளார். ஓர் இரவில் நடக்கிற கதை, ஆனால் கடந்த காலத்திற்கு சென்று நிகழ்காலத்திற்கு வந்து என முன்னும் பின்னுமாக எழுதியுள்ளார். 

இந்த நாவலில் நான் கற்றுக் கொண்ட புதிய சொல் ஐமிச்சம் (ஐயம் + அச்சம் கலந்த நிலை) என்ற சொல். 

கிளிநொச்சி தான் களம் என்றாலும் இலக்கிய பரப்பில் போற்றப்பட வேண்டிய படைப்பு. 


Friday, 11 July 2025

உறவுகள்

தாத்தா

வெற்றிலையை மறக்க

பீடியை கையில் எடுத்தார்! 

ஊர் கடைகளில்

சொக்கலால் பீடி 

அவருக்கென இருக்கும்! 

இப்போது சொக்கலால்

பீடி இருக்கா என்று

தெரியவில்லை! 

தாத்தாவின் நினைவுகளோடு

சொக்கலாலும் இருக்கிறார்!!! 

****

அப்பா

துடுப்பாட்டம் இதழில்

எழுதுவதால் சமூக வலைதள

நண்பர்கள் ஆசிரியர் என

என்னை அழைக்கிறார்கள்! 

ஆசிரியரின் மகனுக்கு

இதைவிட பெருமை

என்ன உள்ளது!!! 

****

மனைவி

அலைபேசியில் சமையல் 

குறிப்பு ஒலிக்க

அசந்து தூங்கும்

அவள் புன்முறுவல்

பூக்கிறாள்! 

அநேகமாக வாணலியில்

வழங்கும் வெங்காய பதம்

காரணமாக இருக்கலாம்! 

அவ்வளவு சுருங்கிவிட்டது

அவளின் உலகம்!!!

****

அம்மா

இந்த ஆண்டு 40ஐ

தொடப்போகிறேன்

திருவிழாவில் குச்சி ஐஸ்

வாங்கி சாப்பிடும்போது

அம்மா வந்து 

அடிப்பாளோ என்ற

பயத்துடனே!!! 

****

மகள்

புதிய பள்ளி என்று

ஆர்வமுடன் சென்ற

மகளுக்கு சனிக்கிழமை

வேலைநாள் இருப்பது

பிடிக்கவில்லை! 

வீட்டில் அவள் 

வைத்திருக்கும் பள்ளியில்

ஏழு நாளும் வேலைநாள்! 

எதுவும் தெரியாமல்

அடி வாங்கும் ஒற்றை

மக்கு மாணவன் நான்!!! 

****

நண்பன்

வேலைப்பளு, 

மனைவி மீதான கோபம், 

கோவில்களின் வரலாறு, 

மகள்களின் நடனம், 

சென்ற இடங்கள், 

பார்த்த படங்கள்

எல்லாவற்றையும்

பகிர்கிறான் வாட்ஸ்அப்

ஸ்டேட்டஸ் வாயிலாக!!! 

****

ஆச்சி

அவித்த உருளைக்கிழங்கை

குழம்பில் போடுவதற்கு முன்

எனக்கென இரண்டு துண்டுகள்

வைத்திருப்பாள் ! 

திருவிழா நாளில்

எனக்கு தர முந்தியில்

காசு முடிந்திருப்பாள்! 

இன்னும் கொஞ்சம் காலம்

இருந்திருந்தால்

என் மகளுக்கு காட்டி

இருப்பேன் பாம்படம்

அணிந்து வெள்ளந்தி

சிரிப்போடு இருக்கும்

பூட்டி ஆச்சியை!!!