Monday, 23 October 2023

ஆப்கானிஸ்தான் - பாகிஸ்தான்

2012 முதல் ஏழு முறை விளையாடி பாகிஸ்தானை வெல்ல முடியவில்லை என்ற நிலையில் தான் களம் இறங்கியது. ஏழில் மூன்று முறை கிட்ட நெருங்கி வந்து கடைசி ஓவரில் தோற்றது குறிப்பிடத்தக்கது.

சென்னையில் ஏற்கனவே நியூசிலாந்தின் சேஸ் செய்ய முடியாமல் தோற்ற ஆப்கானிஸ்தானை சேஸ் செய்ய சொன்னது டாஸ் வென்ற பாகிஸ்தான். ஆப்கானிஸ்தான் அணியில் ஒரு மாற்றம், அணியின் சீனியர் வேகப்பந்து வீச்சாளர் பரூக்கிக்கு பதிலாக இளம் வீரர் நூர் அகமது. நாலு ஸ்பின்னர். குல்தீப்பை போன்ற இடது கை மணிக்கட்டு சுழற்பந்து வீச்சாளர் நூர் அகமது.

ஆப்கானிஸ்தான் சார்பாக முதல் ஓவரை நவீன் சிறப்பாக வீசினார். மற்றொரு முனையில் முஜீப்பும் சிறப்பாக ஆரம்பித்தார்.

பாகிஸ்தான் அடித்து ஆட ஆப்கானிஸ்தான் பவுலிங் மாற்றம் செய்ய வேண்டிய கட்டாயம். எழாவது ஓவர் நபி சிறப்பாக வீசினார். பாகிஸ்தான் முஜீப்பை விளாச ஓமர்சாயை பந்து வீச அழைத்தார். ஓமர்சாய் வீசிய 11 ஓவரில் முதல் விக்கெட். அதற்கு பிறகு முழுக்க ஸ்பின் ஆயுதம்.

ஆனால் 22 வது ஓவரில் அடுத்த விக்கெட் வீழ்த்தது, அதுவும் மேல் முறையீட்டால். அரைசதமடித்த அப்துல்லா ஷபீக் வடிவில். ஆனால் ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் அடித்து ஆட விடவில்லை. ரிஸ்வானை விரைவாக வீழ்த்தி, அடுத்த பந்தில் ஷகிலுக்கு ரிவ்யூ கேட்டு மிரட்டியது.

பாகிஸ்தான் கேப்டன் களத்தில் நின்றாலும் 250 சவாலான ஸ்கோர். அதற்கு மேல் அடிப்பதெல்லாம் நெட் ரன் ரேட்டை உயர்த்த உதவும் என்று பாகிஸ்தானை நம்ப வைத்தது ஆப்கானிஸ்தான். பாகிஸ்தான் பெரிய அதிரடி காட்டவில்லை. இப்திகார் இறங்க வேண்டிய இடத்தில் சதாப்பை இறங்கியது.

இப்திகாரின் கடைசிக் கட்ட அதிரடியில் பாக் 282 ரன் குவித்தது. வாக்கார் சொன்னார், இறுதிக்கட்ட ஓவர்களை வீச ஆப்கானிஸ்தானில் திறன்மிக்க வேகப்பந்து வீச்சாளர்கள் இல்லை என்று. அது உண்மை தான். கடைசி ஓவரில் நவீன் 3 ரன்கள் மட்டுமே விட்டு கொடுத்தது சிறப்பு.

இங்கிலாந்து எதிராக போட்டியில் பீல்டிங்கின் போது ஆப்கானிஸ்தான் வீரர்களை கோபத்தை சக வீரர்களோடு வெளிப்படுத்தியது தெளிவாக தெரிந்தது. நேற்றைய போட்டியில் சக வீரர்களோடு பேசிக்கொண்டனர்.

நாம் அடித்தால் வெற்றி பெறலாம் என்ற உறுதியோடு களம் இறங்கினர் குர்பாஸ் - இப்ராஹிம். குர்பாஸ்க்கு அடிக்க ஒரு நல்ல பந்தை போட்டு துவக்கினார் அப்ரிடி. அதே ஓவரில் இப்ராஹிமும் போர் அடித்தார்.

குர்பாஸ் - இப்ராஹிம் அடிக்கடி பேசிக்கொண்டனர். குர்பாஸை தூக்கி அடிக்க வேண்டாம் என்று இப்ராஹிம் சொன்னது போல் இருந்தது உடல்மொழி. குர்பாஸ் ஒரு சிக்ஸ் கூட அடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அதே சமயம் நன்றாக ஓடி ரன் எடுத்து பாகிஸ்தான் பீல்டர்களை மனதளவில் தாக்கினர். 130 ரன்களை கடந்த போது ஷாட் பாலில் தூக்கி அடித்ததால் அவுட் ஆனார் குர்பாஸ். அதற்கு முன் ஒரே ஒரு பந்தை மட்டுமே தூக்கி அடித்திருந்தார்.

அடுத்து வந்த ரஹ்மத் ஷா, தன் அனுபவத்தை காட்டினார். பொறுமையாக ஆடினார். எந்த நிலையிலும் நிதானம் தவறவில்லை. அந்த 90 மீட்டர் சிக்ஸ் யாரும் எதிர்பாராதது.

ஆப்கானிஸ்தானுக்கு ஸ்பின் நல்லா வந்துச்சு. நமக்கு வரலையே என்று பாபரை குழப்பத்தில் ஆழ்த்தினர் இப்ராஹிம் - ரஹ்மத். 85 ரன்களுக்கு பிறகு இப்ராஹிம் ரன் 
அடிக்க திணறி அவுட் ஆனார்.

அடுத்து வந்த கேப்டன் ஷாகிதி ஆட்டத்தின் வேகத்தை குறைக்கவில்லை. பாகிஸ்தானும் பெரிதாக முயற்சிக்கவில்லை. கடைசிக் கட்ட ஓவர்களில் ஸ்பின் வேண்டாம் என்று நினைத்த பாபர், வேகப்பந்து வீச வேண்டிய நேரத்தில் கூட ஸ்பின்னர்களை உபயோகித்தார்.

தொடர்ச்சியாக 11 டாட் பால்கள் என்ற நிலையில் ஷாகிதி சற்றே சொதப்பினாலும் மீண்டுவிட்டார். ஹசன் அலியின் மெய்டன் ஓவருக்கு பிறகு சதாப்பை வீச வைத்தது பாபர் செய்த மடத்தனம்.

பாகிஸ்தான் பீல்டர்கள் பவுண்டரி லைனில் பந்தை தடுக்க நினைத்தார்களே தவிர பந்தை நிறுத்த முயற்சிக்கவில்லை.

ஆப்கானிஸ்தான் பந்துவீச்சில் சிறப்பான அணி என்பது தெரியும். 282 ரன்னை சேஸ் செய்ய முடிந்த அணி என்று உலகுக்கு காட்டிவிட்டது. ஆப்கானிஸ்தானின் கூட்டு முயற்சிக்கு, தன்னம்பிக்கைக்கு கிடைத்த வெற்றி. ஆலோசகர் அஜய் ஜடேஜாவின் பங்களிப்பு நிச்சயம் உதவி இருக்கும்.

2 comments: