Saturday, 14 October 2023

கட்டணமில்லா பேருந்து

1. வேப்பங்கொட்டை

மே மாதத்து வெயிலில்

சிறுநகரத்து வேப்பமரத்தடியில்

கொட்டை பொறுக்கும்

பாட்டியோடு அலைகிறான்

ஒரு சிறுவன்

வேலை முடித்து ஏதாவது

வாங்கி தருவாள் என்ற எண்ணத்தில் !

சிறுவனின் கைவைத்த

பனியனில்

சிரித்து கொண்டிருந்தார்

சாதி கட்சி தலைவர் !!!


2. ஆசிரியை

விடுமுறைக்கு வந்த

சித்தியை தனது

பள்ளியில் ஆசிரியையாக

சேர சொல்கிறாள் சிறுமி !

பாட்டியின் நகைகளை

பங்கு கேட்க

வந்திருக்கிறாள் சித்தி

என்று தெரியாமல் !!!


3. கட்டணமில்லா பேருந்து

கட்டணமில்லா கடைசிப் பேருந்து

வரும் என்பதால்

கையில் வைத்திருந்த இருபது

ரூபாய்க்கு அழும் குழந்தைக்கு

வடை வாங்கி தந்தாள் 

அடுத்த வாரத்தில் உரிமைத் தொகை

வங்கி கணக்கில் வரவு

வைக்கப்படும் !

பெயர்ப்பலகை விளக்கு 

அணைக்கப்பட்டு

பணிமனைக்கு விரைந்தது

கடைசிப் பேருந்து !!!


4. பால் கறப்பவன்

முச்சந்தி வீட்டில் கழனீர்

குடித்துவிட்டு

தெருமுனையில் அமாவாசைக்கு

தந்த அகத்திய கீரையை

சாப்பிட்டு விட்டு

சிறுவர் பூங்கா முன்பு

சாணி போட்டுவிட்டு

நெடுஞ்சாலை மரத்தடியில்

படுத்து அசைபோடும்

பசு மாட்டுக்கு

தெரியும் பால் கறப்பவன்

எப்போது வருவான் என்று !!!


5. நண்பனின் அழைப்பு

நீண்ட நாட்களுக்கு பிறகு

நண்பனிடம் இருந்து

அலைபேசி அழைப்பு

எடுத்தவுடன் எனது 

கஷ்டங்களை விடாமல்

சொன்னேன் !

கடன் கேட்க தான்

அழைத்திருப்பான் 

என்ற கணிப்பில் !!!



2 comments:

  1. பழனி சார் அருமை..... நடப்பு நிகழ்வுகளை கூர்ந்து கவனிக்கிறவங்களாலதான் இதை எல்லாம் எழுத முடியும் அருமை 👌👌👌👌👌

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி ராம் 🙏

      Delete