டெல்லியில் ஆப்கானிஸ்தான் - இங்கிலாந்து போட்டி. டெல்லி மைதானம் பந்துவீச்சுக்கு சுத்தமாக உதவவில்லை முந்தைய போட்டிகளில். (ஆசிய கோப்பையில் ஆப்கானிஸ்தான் வெளியேறியதற்கு காரணம் இது போன்ற மைதானமே). இலங்கை - தென்னாப்பிரிக்கா போட்டியில் கிட்டத்தட்ட 750 ரன்கள் வந்தது.
இந்தியா - ஆப்கானிஸ்தான் போட்டியில் 270 ரன்களை சேஸ் செய்ய ரோகித் வானவேடிக்கை காட்டினார். எவ்வளவு ரன்களையும் சேஸ் செய்ய முடியும் என்று நினைத்து தான் பட்லர் பீல்டிங் தேர்வு செய்தார். ஆப்கானிஸ்தான் அணியில் நஜிபுல்லா ஷர்தானுக்கு பதிலாக இக்ரம் அலிஹில் அணிக்கு வந்தார். குர்பாஸ்க்கு பதிலாக விக்கெட் கீப்பிங்கும் செய்தார்.
குர்பாஸ் - இப்ராஹிம் வழக்கமான தொடக்கம் தந்தனர். குர்பாஸ் உலகக் கோப்பையில் முதல் அரைசதம் அடித்து அடித்தளம் அமைத்தார். இப்ராஹிம் அவுட்டாக பெரிய இழப்பு ஏற்பட்டது. ஆனாலும் 100 ரன்களுக்கு மேலாக பார்ட்னர்ஷிப் கொடுத்துவிட்டார்.
100வது போட்டியில் ஆடிய ரஹ்மத் ஷா 3 ரன்களில் ஸ்டம்பிங் ஆக, அடுத்த பந்தில் கேப்டன் அழைக்கிறார், முதல் பந்தில் ஒரு ரன் அடித்தால் கேப்டனுக்கு தன்னம்பிக்கை கொடுக்கும் என நினைத்து ரன்அவுட் ஆனார் பார்ம்ல் இருந்த குர்பாஸ். இன்னும் கொஞ்ச நேரம் நின்றிருந்தால் சதம் கூட அடித்து இருக்கலாம்.
ஓமர்சாய் 19 ரன்களில் அவுட்டாக களத்திற்கு வந்தார் இடதுகை பேட்ஸ்மேனான இக்ரம் அலிஹில். நிதானமாக ஆடினார். சென்ற உலகக் கோப்பையில் 8வது பேட்ஸ்மேனாக களம் இறக்கப்பட்டவர். ஷாகிதி, நபி என்று சீனியர்கள் அவுட்டானாலும் இவர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். சர்வதேச ஒருநாள் போட்டிகளில் மூன்றாவது அரைசதம் அடித்தார் இக்ரம்.
கடைசியில் ரஷீத்கான், முஜீப் அதிரடியால் ஆப்கானிஸ்தான் 284 ரன்கள் எடுத்தது.
பந்துவீச்சில் சிறிய மாற்றம் செய்தார் ஷாகிதி. முதல் ஓவரை முஜீப் வீசினார். இரண்டாவது ஓவரை பரூக்கி வீசினார், பலனும் கிடைத்தது பேர்ஸ்டோ விக்கெட் வடிவில். அனுபவ ரூட்டை முஜீப் காலி செய்தார். 10 ஓவர்களில் 2 விக்கெட் விழுந்திருந்தாலும் வலுவான இடத்தில் தான் இருந்தது இங்கிலாந்து.
150 வது ஒருநாள் போட்டியில் ஆடிய நபி மாலன் விக்கெட்டை வீழ்த்த ஆட்டம் சூடு பிடித்தது. ரன் எடுக்க திணறிய பட்லர் நவீன் பந்தில் போல்டானது முதல் திருப்புமுனை.
ஆப்கானிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் 20 ஓவர் போட்டிகளுக்கு சிறப்பானவர்கள். நாலு ஓவர்கள் என்றால் சிறப்பாக வீசுவார்கள். பத்து ஓவர்கள் என்றால் சிரமமே. இருக்கும் ரிசோர்ஸை சரியாக பயன்படுத்தினார் ஷாகிதி.
ஸ்லிப்ல் பீல்டரை நிறுத்தி இரண்டு விக்கெட்டுகளை காலி செய்தார். ப்ரூக் விக்கெட் தான் இரண்டாம் திருப்புமுனை. குர்பாஸ் கீப்பராக நின்றால் அந்த கேட்ச்சை பிடித்திருப்பாரா என்பது சந்தேகமே. அசல் ஆட்டநாயகன் இக்ரம் அலிஹில் தான்.
கூட்டு முயற்சிக்கு கிடைத்த வெற்றி என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. அதே சமயம் களத்தில் வீரர்கள் திட்டி கொள்வது, கோபத்தை வெளிப்படுத்துவதை தவிர்க்கப்பட வேண்டும்.
18 உலகக் கோப்பை போட்டியில் 2 வது வெற்றியை பெற்றுள்ளது ஆப்கானிஸ்தான். நடப்பு சாம்பியனை வென்றது சிறப்பு.
இந்த ஆண்டின் தொடர்ச்சியாக எட்டு தோல்விகளுக்கு பிறகு கிடைத்திருக்கும் வெற்றி அணியின் தன்னம்பிக்கையை கூட்டும். அதே சமயம் இப்ராஹிம், ரஹ்மத் ஷா, நபி ஆகியோரின் பேட்டிங் வலுவைடைய வேண்டும்.
No comments:
Post a Comment