Wednesday, 21 June 2023

தனியார் பேருந்துகள்

விபத்து என்றால் தனியார் பேருந்துகள் தான், தனியார் பேருந்துகளை தாறுமாறாக இயக்குகிறார்கள் என்ற குற்றச்சாட்டுகள் உள்ளது.

இதற்கான காரணங்கள், முதல் காரணம் அரசு. அரசு எப்படி காரணமாக முடியும்? பெட்ரோல் டீசல் விலை ஏறும் போது பேருந்து கட்டணங்களை உயர்த்தாமல், எதிர் கட்சிகள் கண்டனம் தெரிவிக்கும் என்று பயந்து விட்டு விடுவது. அதே சமயம் அரசு பேருந்துகளில் டீலக்ஸ், டிஎஸ்எஸ், ஒன் டூ ஒன் என கூடுதல் கட்டணத்தில் பேருந்து இயக்கப்படுகிறது.

கட்டணம் உயர்த்தாமல் இருப்பதால், பேருந்து முழுக்க பயணிகள் ஏறினால் தான் பேருந்து நிலையத்தை விட்டு நகர்ந்த வேண்டிய கட்டாய சூழல். அது மட்டுமில்லாமல் நடத்துநரின் கலெக்ஷன் படி அதில் தான் அடங்கியுள்ளது. இதனால் ஏற்படும் நேர விரயத்தை பயணத்தில், வேகத்தால் சரி செய்ய வேண்டிய சூழலில் தான் பேருந்தை இயக்குகிறார்கள் ஓட்டுநர்கள்.

அரசு பேருந்தை விட வேகமாக செல்லும் என்பதால் தான் தனியார் பேருந்துகளுக்கு கூட்டம். கலெக்ஷனுக்கு அரசு பேருந்து ஓட்டுநர் நடத்துநர்களுக்கு டீ வாங்கி கொடுத்து தாமதமாக பேருந்தை இயக்க சொல்லும் தனியார் பேருந்து நடத்துநர்களும் உண்டு.

அதே சமயம் சாலைகளின் தரத்தில் அரசு எதுவும் செய்வதில்லை. ஒரு நெடுஞ்சாலையில் ஒரு கோட்டத்தின் சாலை நன்றாகவும் அடுத்த கோட்டத்தின் சாலை மோசமாகவும் இருக்கும் சாலைகள் உண்டு. தனியார் பேருந்துகள் கிடைக்கும் இடத்தில் அதிகபட்ச வேகத்தை பயன்படுத்தி கொள்கிறார்கள்.

இரண்டாவது காரணம், தனியார் பேருந்துகளின் முதலாளிகள். எதார்த்தம் என்ன என்பதை புரிந்து கொள்ளாமல் ஓட்டுனர், நடத்துநர்களை வதைப்பது, கெட்ட வார்த்தைகளால் திட்டுவது, ஒரிஜினல் லைசென்ஸை வாங்கி வைத்து கொண்டு அடிமை போல் நடத்துவது. 

இந்த மொத்த சுமையை தாங்கி கொண்டு முதலாளிக்காக உழைக்கிறார்கள் தனியார் பேருந்து ஊழியர்கள், தங்களில் குடும்ப சுமைக்காக.

தனியார் பேருந்துகளில் இன்வாய்ஸ் என்பது எத்தனை பயணிகள் தற்போது பயணிக்கிறார்கள் என்பதை ஸ்டேஜ் வைஸ் காட்டும். அதில் எத்தனை லக்கேஜ், எத்தனை பாஸ் என்ற தெளிவும் வேண்டும். இதை சோதனையிட சூப்பர்வைசர்கள் வருவார்கள்.

அரசு பேருந்தை (நகர பேருந்து) பொறுத்த வரை எண்களை நிரப்பினால் போதும். செக்கிங் இன்ஸ்பெக்டர் கூட பயணிகளை மட்டுமே செக் செய்வாரா.

ஆம்னி பஸ்கள் நிலை இன்னும் மோசம். உதாரணமாக நாகர்கோவிலில் இருந்து சென்னைக்கு இயக்கும் பஸ்ஸை எடுத்து கொள்வோம். நாகர்கோவிலில் கூடுதலாக அரை மணி நேரம் நிறுத்தி பயணிகளை ஏற்ற வேண்டும். பஸ் ஸ்டாண்டு பக்கத்து ஒயின் ஷாப்பில் குடித்து கொண்டிருக்கும் ரிசர்வேஷன் பயணியை போன் செய்து கூப்பிட வேண்டும். திருநெல்வேலியில் ஏறும் பயணிகளுக்கு டிரைவர் நம்பரை கொடுத்து விடுவார்கள்.

ஒவ்வொரு பயணியின் போனை அட்டெண்ட் செய்து காவல்கிணறு தாண்டிவிட்டது. வள்ளியூர் தாண்டிவிட்டது என்று ஓட்டுனர் பதில் அளிக்க வேண்டி உள்ளது. பிறகு திருநெல்வேலியில் இன்னும் அரை மணி நேரம் நிறுத்தி பயணிகளை ஏற்ற வேண்டும்.

இந்த ஒருமணி நேர தாமதத்தை ஓட்டுனர் தன் தலையில் சுமந்து பேருந்தை இயக்க வேண்டும். இது ஓனர்களின் கட்டளை, இல்லை என்றால் இணையத்தில் ரேட்டிங் மோசமாக அமையும்.


No comments:

Post a Comment