Monday, 27 April 2020

ஆவுடையப்பன்

      ஆவுடையப்பன் ஒருநாள் கருக்கலில் தான் அந்த கிராமத்துக்கு வந்து சேர்ந்தான். ஆள் பரதேசி போல் காட்சி அளிக்கவே திருடன் என நினைத்து மரத்தில் கட்டி வைத்து அடிக்க முடிவு செய்தனர்.
       அவன் திரும்ப திரும்ப கேட்டது சாப்பாடும் தண்ணியுந்தான். சற்று நேரத்தில் அவன் மன வளர்ச்சி குன்றியவன் என்றறிந்து சாப்பாடு கொடுத்தனர்.
     சாப்பிட்டு கிளம்ப தயாரானான், தாயம்மா பாட்டி வழி மறித்தாள். இப்போ போகாத, பக்கத்தூர்ல கட்டி வச்சு அடிக்க போறாங்க. அந்த கோவில் கொட்டகைல படுத்து காலைல போ என்றாள்.

சரி என்று தலையை ஆட்டினான்.

உன் பேர் என்ன? என்றாள்.
ஆவுடையப்பன் என்றான்.

அதற்கு பின் அந்த கிராமத்திலே ஒரு பணக்காரர் வீட்டில் வேலைக்கு சேர்ந்தான். சாப்பாடு மட்டும் தான் சம்பளம் கிடையாது. கோவில் கொட்டகையில் தூங்கி கொள்வான்.

காலையில் 5 மணிக்கு எழுந்து ஐந்து மாட்டு சாணியை அள்ளி தொழுவத்தை சுத்தம் செய்வான். 7 மணிக்கு கிடைக்கும் பழைய சோத்தையும் ஊறுகாயையும் சாப்பிட்டுவிட்டு மாடு மேய்க்க போய் விடுவான்.

முதலில் மாடு மேய்ப்பவர்கள் அவனை கண்டு பயந்தனர். பின்னர் பழகிவிட்டனர். மாடுகளும் பழகிவிட்டன.

பம்ப் செட்டில் குளித்துவிட்டு மாட்டை மதியம் வீட்டிற்கு ஓட்டி வருவான்.
தோட்டத்திலிருந்து நிச்சயம் ஏதாவது சுமை கொடுத்து அனுப்புவாள் முதலாளியம்மா.

ஒரு மழை நாள் முதலாளிக்கு சொந்தகாரர் இறந்துவிட சுடுகாட்டுக்கு வண்டி செல்ல முடியவில்லை. ஆவுடையப்பன் விறகு  மொத்தத்தையும் தலை சுமையாய் கொண்டு சென்றான்.

யார் செத்தாலும் இங்கு தான் எரிப்பார்களா? என்றான்.

ஆமா என்றார்கள் சுடுகாட்டுக்கு வந்த சிலர்.

மொதலாளி நான் வேனா இன்னும் கொஞ்சம் வெறகு கொண்டு வந்து போடட்டுமா என்றான்.

எதுக்கு என்றார் முதலாளி.

நீங்க செத்து போன தேவைப்படுமில்லா என்றான். சுடுகாடு என்பதை மறந்து அனைவரும் சிரித்து விட்டனர்.

வீட்டுக்கு போன பின் முதலாளியம்மா கேள்விப்பட்டு "ஏ மூதேவி இங்கயே திண்ணுகிட்டு இப்பிடி பேசுவயான்னு " சொல்லி விளக்குமாரால் விளாசி தள்ளினாள்.

      ஊரில் யார் எந்த வேலை சொன்னாலும் தயங்காமல் செய்வான். சொன்னதை மட்டும் செய்வான்.
 
     மாடு மேய்க்கும் சிறுவர்கள் அவனைத்தான் வேர்கடலை, தட்டாங்காய், வெள்ளரிகாய் பறித்து வர சொல்வார்கள், திருட்டு என்று தெரியாமலே பறித்து வருவான்.

    முதலாளியம்மா ஒருநாள் கிணற்றில் இருந்து தண்ணீர் இறைக்க சொன்னாள். ஆவுடையப்பன் ரெண்டு பெரிய தொட்டி நிறைய நிரப்பிவிட்டு மாட்டுக்கான கல்தொட்டியிலும் நிரப்பி விட்டான்.

     முதலாளியம்மா ஏ மூதேவி கழனி தண்ணிய உன் வாயிலயா ஊத்த முடியும், இதுல கொஞ்சம் தண்ணிய எடுத்து தூர ஊத்து என்றாள்.
அவன் தண்ணீரை எடுத்து பக்கத்தில் இருந்த மாங்கன்றுக்கு ஊற்றினான்.


     அந்த கிராமத்திலே அவனை மதிப்பது இருவர் தான். தாயம்மா பாட்டியும். சண்முகைய்யா தாத்தாவும்.

     முதலாளி செலவுக்கு பணம் கொடுத்தால் அதை தாயம்மா பாட்டியிடம் கொடுப்பான். ஏன்டா என்பாள்.

     புன்னகைப்பான். நான் இந்த ஊர்ல வாழ்வதற்கு நீ தான் காரணம் என்பது அந்த புன்னகைக்கான விளக்கம்.

    அவள் மட்டும் தான் அவனை ஆவுடையப்பன் என்பாள்.
மற்ற எல்லாருக்கும் ஆவுடை தான்.

   தீபாவளிக்கு முக சவரம் செய்து புது சட்டை புது வேட்டி கட்டியிருந்தான்.
தாயம்மா பாட்டி தான் அழகா இருக்கடா ஆவுடையப்பா என்றாள். மற்றவர்கள் கிண்டல் செய்தார்கள்.

சண்முகைய்யா தாத்தா நாட்டு மருந்து செய்ய இவன் தான் பச்சிலை பறித்துக் கொடுப்பான்.

ஒருநாள் மாடுகள் முட்டி விளையாடி ஒரு மாட்டின் கொம்பு உடைந்து விட்டது.
அந்த கொம்பை சேர்த்து ஒட்ட வைக்க ஒரு பச்சிலை செடி தேவைப்பட்டது.

ஆனால் செந்தட்டி செடிகளை தாண்டி போக வேண்டி இருந்தது.எல்லாரும் சேர்ந்து ஆவுடையப்பனை அனுப்பிவிட்டனர். அவனும் பறித்து வந்துவிட்டு சொரிந்து கொண்டு இருந்தான்.
 
    சண்முகைய்யா தாத்தா தான் பச்சிலை மருந்து கொடுத்து தடவச் சொன்னார்.

    தோட்டத்து கிணற்றில் தண்ணீர் ஆழத்துக்கு சென்று விட பம்ப் செட்டை கிணற்றுக்குள் இருக்கும்
மேடைக்கு இறக்கி வைத்திருந்தனர்.
சாணி கரைத்து ஊற்றினால் மட்டுமே மோட்டார் வேலை செய்யும்.

அந்த சமயத்தில் வேறோரு வேலைகாரன் ஆவுடையப்பனை சாணி கரைத்து ஊற்ற சொன்னான்.

ஆவுடையப்பனும் அரை குறையாய் கரைத்து குழாய் முழுக்க நிரப்பி விட்டான். சாணி குழாயினுள் நன்றாக இறுகிவிட்டது. அதை சரி செய்ய முதலாளிக்கு ஆயிரம் ரூபாய் செலவாகி விட்டது.

ஆவுடையப்பனை அடிக்க கை ஓங்கிவிட்டு யார் சொல்லி செஞ்ச என்றார். செய்ய சொன்னவனை திட்டிவிட்டி நகர்ந்தார்.

மருந்தடிக்க மணி காலையிலே தோட்டத்துக்கு வந்தான்.
ஆவுடையப்பன் அவனிடம் நான் மருந்தடிக்கட்டுமா என்று கேட்டான்.

எய்யா ராசா, இது விசம், தண்ணீ சரியா விட்டு கலக்கலைனா செடி கருகி போகும். எக்குதப்பா ஏதாச்சும் பண்ணுணன்னா கிணத்து தண்ணீ பூரா விசமாயிரும் என்றான் மணி.

அந்த கிராமத்தி, ஆற்றில் தண்ணீர் வரும் போது கால்வாய் வழியாக தண்ணீர் குளத்துக்கு வரும்.

பக்கத்துக்கு ஊர் குளத்துக்கு 70 சதவீதமும் இவர்கள் ஊருக்கு 30 சதவீதமும் தண்ணீர் வரும்.

இந்த ஆண்டு குளத்துக்கு தண்ணீர் வரவில்லை ஆனால் பக்கத்து ஊருக்கு தண்ணீர் வந்து கொண்டிருந்தது.

என்ன என்று போய் பார்த்தால் 30% தண்ணீரும் பக்கத்து ஊருக்கு போகுமாறு தடுப்பு சுவர் கட்டப்பட்டிருந்ததது.

ஊர்க்காரர்கள் சிலர் போய் அந்த சுவரை உடைந்து விட்டனர்.
பக்கத்து ஊர்காரர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

காவலர்கள் வந்து விசாரித்தனர். ஊர்க்காரர்கள் தங்கள் உரிமையை எடுத்து கூறினர்.
உங்களுக்கு உரிமை இருப்பதால் அரசு சுவரை உடைக்கக்கூடாது. ஆட்சியர் அலுவலகத்தில் மனு கொடுத்து உரிமையை பெற வேண்டும் என்றார் காவலர்.

கடைசியாக ஆவுடையப்பன் தான் விவரமில்லாமல் சுவரை உடைத்ததாய் ஆவுடையப்பனை கை காட்டினர்.

ஆவுடையப்பனை காவல் நிலையம் கூட்டி போய் நைய புடைத்தனர். யாரெல்லாம் செஞ்சீங்க என்றனர்.

நான் மட்டும் தான் என்றான்.

எதுக்கு உடைச்ச என்றனர்

மாடு குளுப்பாட்ட கொளத்துல தண்ணீ இல்ல அதான் என்றான்.

சாயங்காலமாய் இப்ப நீ போ நாளைக்கு திரும்ப விசாரிப்போம் என்று அனுப்பி வைத்தனர்.

உடலெங்கும் வலியோடு திரும்பினான்.
அவனுக்கு சாப்பிட பிடிக்கவில்லை. முதலாளியம்மா அதுக்கும் திட்டிவிட்டு போனாள்.

தாயம்மா பாட்டி தான் சுக்கு தண்ணீ கொண்டு வந்து கொடுத்தாள்.

கொஞ்ச நேரம் வானத்தை பார்த்து கொண்டிருந்தான். அழவில்லை ஆனால் கண்ணீர் வடிந்தது.
வலியோடு தூங்கி போனான்.

மறுநாள் ஊரில் அனைவரும் ஆட்சியர் அலுவலகம் சென்றனர்.
சாயங்காலம் ஒரு மாடு மேய்க்கும் அலறி கொண்டு ஓடி வந்து சொன்னான்.

"ஆவுட மருந்த குடிச்சிட்டான்".

ஆவுடையப்பனை ஊருக்கு தூக்கி வந்தனர். வாயில் நுரை தள்ளியிருந்தது.
சண்முகைய்யா தாத்தா நாடி பார்த்து உடைந்து போய் சொன்னார்.

"சீவன் போயிருச்சு".

ஒரு பைத்திகார பயல கொண்ணுடீங்கள பாவிகளா என்று சொல்லிவிட்டு அழுதார்.

கருக்கலில் வந்தவன் கருக்கலில் போய்டானே என்று ஒப்பாரி வைத்தாள் தாயம்மா பாட்டி.

No comments:

Post a Comment