Wednesday, 11 October 2017

என் பேனாவில் மை ஊற்றியவர்கள் 6 பாண்டிச்சேரியும் தடாவும்

சைதாப்பேட்டை மேன்ஷனில் இருந்து வேலை கிடைத்து பெங்களூரு சென்ற தினேஷ் ஒரு நாள் அப்பாச்சி வண்டியுடன் "ஜாவா சுந்தரேசன்" போல் மாப்ள புதுசா வண்டி வாங்கிருக்கேன் என்றான்.
வண்டிலயா பெங்களூர்ல இருந்து வந்த என்று ஆச்சர்யமாய் கேட்டேன். கீழே நின்ற வெள்ளை நிற வண்டி ஆமாம் என்றது.
அடுத்த நாளே ECRல கொஞ்ச தூரம் போயிடு வரலாம் என்றான். நானும் கிளம்பினேன் முட்டுக்காடு, மகாபலிபுரம் தாண்டி கொஞ்ச தூரம் பாண்டிச்சேரி வரை நீண்டு விட்டது.
பாண்டிச்சேரி பீச் மதியம் 1 மணிக்கு நாங்கள் எதிர்பார்த்தது போல் இல்லை. அப்புறம் அக்கம் பக்கம் விசாரித்து சுண்ணாம்பார் பீச்சுக்கு போனோம். மதிய உணவில் எப்படியாவது மீன் சாப்பிட்டுவிட வேண்டும் என்ற தினேஷின் எண்ணம் நிறைவேறவில்லை..
சுண்ணாம்பார் /பாரடைஸ் பீச்க்கு படகில் போய் கடற்கரைக்கு செல்ல வேண்டி இருந்தது. தீவு போல் அழகு கொஞ்சும் இடம். மாலை 4 மணி வரை அங்கே இருந்தோம்.இன்னும் இரண்டு நண்பர்கள் வந்திருந்தால் நன்றாக இருக்கும் என்று தோன்றியது.
7 மணிக்கு பாண்டிச்சேரி பீச் ரொம்ப அழகாக இருந்தது. 7.30கு பாண்டிச்சேரியில் இருந்து கிளம்பினோம்.
வண்டி ஓட்டுவதை தினேஷ் ஒரு தவம் போல் செய்வான். வேகமாய் சென்றாலும் மெதுவாய் சென்றாலும் எப்போதும் வண்டி அவனது கட்டுப்பாட்டில் இருக்கும்.
பின்பு ஒருநாள் மேன்சனுக்கு தினேஷ் வந்த நாளில் சன்குமாரும் வந்தான். மனசு கஷ்டமாக இருக்கிறது எங்காவது நீண்ட தூரம் போய் வரலாம் என்றான் சன் .
பாண்டிச்சேரி போலாமா என்றான் தினேஷ், பாண்டிச்சேரி என்றதும் முகம் நிறைய புன்னகையுடன் நானும் வாரேன் என்றான் மாப்ள மார்த்தாண்டம் (மனோஜ்).
நானும் பாண்டிச்சேரி போகும் வழியில் சுத்த வேண்டிய இடங்களை மேப்பில் பார்த்து கொண்டேன். இரவு தங்கி மறுநாள் வருவதாய் திட்டம், காலையில் கிளம்பினோம். நானும் சன்னும் ஒரு வண்டி, மாப்ள மார்த்தாண்டம் தினேஷ் இன்னொரு வண்டியிலும் கிளம்பினோம்.
முதலில் சட்ராசில் உள்ள பழைய கோட்டைக்கு போனோம். பெரிய அளவில் எதுவும் இல்லை. பின் ஆலம்பாறை கோட்டைக்கு சென்றோம். கோட்டை மதில் சுவரை தவிர எதுவும் இல்லை. 4 வருடங்களாக தூரத்தில் இருந்தே பத்மநாதபுரம் கோட்டையை பார்த்தோம். இங்கு சிவப்பு லோலாக்கு பாடலில் வருவது போல் மதில் சுவர் மீது ஏறி போட்டோ எடுத்து கொண்டோம். கோட்டையின் பின்புறம் அழகான கடல். பின்புறம் இருந்து பார்க்க கோட்டை செம அழகு. அங்கு நிறைய சினிமா படப்பிடிப்பு நடைபெறுவதாய் கடை வைத்திருக்கும் அக்கா சொன்னாங்க.
பாண்டிச்சேரியில் ஒரு சின்ன ஹோட்டலில் ரூம் எடுத்து வண்டியை அங்கேயே நிறுத்திவிட்டு இரவு நடந்தே பீச்க்கு போனோம். பீச்சில் கொஞ்ச நேரம் அரட்டை அடித்து விளையாடிவிட்டு ரூம்க்கு திரும்பும் போது வழி தெரியவில்லை. ரூம் சாவியையும் ரிசப்ஷனில் குடுத்து விட்டோம். ஹோட்டல் பெயர் கூட யாருக்கும் சரியாய் நினைவில் இல்லை.
நடுத்தெருவில் நின்று சுத்தி சுத்தி பார்த்து கொண்டிருந்தோம். எதாவது க்ளூ கிடைக்குமா என்று. தினேஷ் திடீரென கத்தினான் 'சத்யா மாப்ள' என்று. நாங்களும் ஹோட்டலை கண்டுபிடித்து விட்டான் என்று சந்தோச பட்டால் இந்த சத்யா கடை தூத்துகுடியிலும் இருக்கு என்றான்.
மூவரும் அவனை திட்டி தீர்த்தோம். ஒரு வழியாக சன்குமார் கண்ணில் பட்ட கோவிலால் ஹோட்டலை அடையாளம் கண்டுகொண்டோம்.
மறுநாள் காலையில் ஹோட்டல் வராண்டாவில் ஒரே சத்தம். நான் மாப்ள மார்த்தாண்டத்திடம் என்னனு பாரு மாப்ள என்றேன். அவனும் என்ன பாஸ் ஒரே சத்தமா இருக்கு என்று போய் கேட்டான்.
அவர்கள் நான்கு பேர் போதையில் பாண்டிச்சேரி வந்ததே சத்தம் போடத்தான். பாண்டிச்சேரின்னா என்ன ஸ்பெஷல் என்று மனோஜை திட்டி அனுப்பிவிட்டனர்.
சுண்ணாம்பார் கடற்கரைக்கு சென்றோம். தினேஷை மண்ணில் புதைத்து வைத்து விளையாடினான் மனோஜ்.
மாலை 4 மணி வரை இருந்து விட்டு கிளம்பினோம். நிறைய புகைப்படங்களோடும் சந்தோசத்தோடும்.
அடுத்த முறை தினேஷ் வந்த போது எங்கு செல்லலாம் என்று தேடிய போது சிக்கியது தடா அருவி.
மேப்பில் பார்த்த வழியை கேட்டு கேட்டு தடா அருவியை தேடி போனோம் நானும் தினேசும். முன்னால் சென்ற குழுவினர் வழிகாட்ட அருவிக்கு அருகில் சென்று விட்டோம்.
ஆனால் செல்போன், பர்ஸை கரையில் வைத்து விட்டு அருவிக்கு அருகில் இருக்கும் சுனையில் இருவரும் குளிக்கமுடியவில்லை. குரங்குகள் அட்டகாசம். தனி தனியே குளித்து விட்டு கிளம்பினோம்.. கல்லூரி காலத்தில் சென்ற நம்பி கோவில் போல் இருந்தது தடா அருவி. சுனையை கடந்து சென்றால் தான் அருவியில் குளிக்கமுடியும்..
ரூம்க்கு வந்தபிறகும் ஏதோ ஒரு குறை இருந்தது போல இருந்தது. அந்த இடத்துக்கு பிரியாணியுடனும் நண்பன் கார்த்தியுடனும் சென்றிருந்தால் நன்றாக இருக்கும் என்று தோன்றியது. நண்பன் கார்த்தி நீச்சலில் பெரிய ஆள்.
கார்த்தியும் அன்றிரவு வந்தான். மறுநாள் இன்னொரு வண்டி கணேஷிடம் கடன் வாங்கி நான், மனோஜ், தினேஷ், கார்த்தி நாலு பேரும் தடா போனோம். என் வண்டி டிரைவர் மனோஜ்.
வழியில் பிரியாணி வாங்கிக்கொண்டோம். இந்த முறை அவர்கள் மூவரும் அருவிக்கே சென்றுவிட்டார்கள். நான் சுனையில் குளித்துவிட்டேன். சாப்பிட்டு மலை இறங்க ஆரம்பித்தோம், இறங்கும் போது செங்குத்து பாறையில் தினேஷ் கொஞ்சம் திணற கொஞ்சம் நேரம் ஆகியது. அதற்கு பின் வழி மறந்து சுத்தினோம், பின்பு எப்படியோ மலை பாதையில் வழி கண்டுபிடித்து திரும்பினோம்.
அதிகமாக அலைந்ததால் தாகம் அதிகமாய் இருந்தது. வரத்தை பாளையம் வந்ததும் 21/2 லிட்டர் குளிர் பானத்தை மாத்தி மாத்தி குடித்து காலிசெய்தோம்.

ட்ரெக்கிங். அருவி குளியல், பிரியாணி, நெடுஞசாலை பயணம் நண்பர்கள் சந்திப்பு ஒரு சேர அமைந்தது தடா(வும் பாண்டிச்சேரியும்) பயணம்.

No comments:

Post a Comment