Saturday, 20 September 2025

தகவல் சரிபார்ப்பு

பாதாள சாக்கடை

சாலை நடுவே குழி தோண்டி
பாதாள சாக்கடை பணி
நடைபெறுகிறது. 
குழியை மூடிய பிறகு
சாலையை காணவில்லை!!! 

நடைபயிற்சி

நாளொன்றுக்கு நான்கு
கிலோமீட்டர் நடந்தால்
உடல் நலமாக இருக்கும்
என்றார் மருத்துவர். 
இரண்டு கிலோ மீட்டர்
நடக்கும் போதே இருபது
நாய்கள் தெருவில்
உடல்நலமா?
உயிர் நலமா? 

பேருந்து

மகளிர் இலவச பயணம்
என்ற எழுத்துகள் தெரிந்தது. 
எந்த வழி என்று தெரியவில்லை. 
நடத்துனரிடம் கேட்டால்
எரிந்து விழுந்தார். 
அடுத்த பேருந்துக்கு
காத்திருக்கிறாள்
வடை விற்கும் பாட்டி!!! 

தாமதம்

பிரச்சாரத்துக்கு தலைவர்
வருவதால் பேருந்து சுற்றிக்
கொண்டு சென்றது. 
மருத்துவமனையை
அடையும் முன்பே
மருத்துவர்
நேர் வழியில்
கிளம்பிவிட்டார்!!! 

புகைப்படம்

தலைவன் போடும்
ஒவ்வொரு படத்திற்கும்
காரணம் கண்டறிந்து
எழுதினான் மானசீக
தொண்டன்! 
தலைவலியும் காயச்சலும்
தலைவனுக்கு வராது!!! 

கணக்கெழுதுதல்

குளத்தை தூர் வாரியதாக
எழுதப்பட்டது
குள்ளத்தங்கரை ஆலமர
நிழலில் அமர்ந்து
நூறு நாள் வேலை செய்தார்கள்! 
அவர்களுக்கு நீரழிவு
நோய் இரத்த சோதனை
செய்து வீடு தேடி
மருத்துவ திட்டம்
எழுதப்பட்டது. 


தகவல் சரிபார்ப்பு

தகவல் சரிபார்ப்பு
மையங்கள் விரைந்து
செயல்பட்டன. 
கொலை நடந்த
பத்தே நிமிடத்தில்
கொலையானவன், 
கொலை செய்தவன்
சாதிகளை 
தெரிந்து சொன்னது!!! 

வீட்டில் இருந்து வேலை

முதல் நாளிலே
முப்பதுக்கும் மேற்பட்டோருக்கு
அழைத்து லோன் தேவை
இருக்கிறதா என்றாள். 
2ம் நாளில் அவளது
அழைப்புகள் போலியானவை
என்றது அலைபேசி
நிறுவனம். 
அவளும் முழு கட்டணம்
செலுத்தி தான்
அலைபேசி சேவையை
பயன்படுத்துகிறாள்!!! 


2 comments: