Saturday, 25 November 2023

தோரணமலை முருகன் கோவில்

தோரணமலை முருகன் கோவில் தென்காசி மாவட்டம் கடையம் அருகில் உள்ளது. தென்காசியில் இருந்து 18 கிமீ, திருநெல்வேலியில் இருந்து 55 கிமீ தொலைவில் உள்ளது.

தோரணமலை முருகன் கோவில் சித்தர்கள் வழிபட்டதலம். தேரையர் அறுவைச் சிகிச்சை செய்த மலையில் தான் இந்த கோவில் உள்ளது. 



ஆன்மிக ஆர்வமும், மலையேறும் ஆர்வமும் உள்ளோர் தாராளமாக செல்லலாம். செங்குத்தான படிகள் என்பதால் மூச்சு வாங்கும். படிகள் அழகாக வடிவமைக்கப்பட்டுள்ளது. ஓய்வு எடுத்து செல்ல நிழற்குடை போன்ற மண்டபங்கள் உள்ளது.

மலையடிவாரத்தில் வாகனம் நிறுத்தும் வசதி உள்ளது. குளியலறை, கழிப்பறை வசதி உள்ளது. ஒரு சிறிய கடையில் பழம், பூ கிடைக்கும்.

கீழே இருக்கும் பிள்ளையாரை வழிபட்டு விட்டு மலையேற துவங்கும் இடத்தில் உள்ளது அருணகிரிநாதர் மண்டபம். மலையேற துவங்கியதும் மூச்சு வாங்கும், நின்று நின்று மலையை, மரங்களை ரசித்து சென்றால் நன்றாக இருக்கும்.

அருணகிரிநாதர் மண்டபத்தில் இருந்து 249 படிகள் (படிகள் நான் எண்ணியது, ஒன்றோ இரண்டோ கூட குறைய இருக்கலாம்) ஏறினால் நக்கீரர் மண்டபம் உள்ளது.

நக்கீரர் மண்டபத்தில் இருந்து 187 படிகள் ஏறினால் தேரையர் மண்டபம் வரும். தேரையர் மண்டபத்தில் இருந்து 207 படிகள் ஏறினால் அகத்தியர் மண்டபம் வரும். இதற்கு பிறகு மலை ஏறிவது எளிதாக தோன்றும் (பழகிவிடும்).



அகத்தியர் மண்டபத்தில் இருந்து 175 படிகள் ஏறினால் பாலன் தேவராயர் மண்டபம் வரும். பாலன் தேவராயர் மண்டபத்தில் இருந்து 157 படிகள் ஏறினால் ஔவையார் மண்டபம் வரும். ஔவையார் மண்டபத்தில் இருந்து பார்த்தாலே கோவில் தெரியும்.
ஔவையார் மண்டபம் அருகில் குடி தண்ணீர் வசதி உள்ளது. ஆனால் முழுமையாக செயல்படுகிறதா என்று தெரியவில்லை. குடிதண்ணீர் கொண்டு செல்வது சிறந்தது.
ஒளவையார் மண்டபத்தின் அருகில் ஒரு லிங்கம் உள்ளது. அதிலிருந்து 100 அடி தூரத்தில் தேரையர் ஜீவ சமாதி அடைந்த இடம் உள்ளதாக சொன்னார்கள். ஆனால் அங்கு செல்ல சரியான பாதை இல்லை.

ஔவையார் மண்டபத்தில் இருந்து 117 படிகள் ஏறினால் கோவிலை அடையலாம். சிறிய கோவிலில் முருகன் அருள் பாலிக்கிறார். முருகன் கோவிலுக்கு அருகில் சிறிய காளியம்மன் கோவிலும் உள்ளது. அழகான இயற்கை காட்சிகளை கண்டு ரசிக்கலாம். தேரையர் மருந்து அரைத்த பாறை பள்ளங்கள் உள்ளது. ஒரு சுனை உள்ளது, சுனை தண்ணீரில் மூலிகைகள் கலந்திருப்பதாக சொன்னார் கோவில் பூசாரி.



சுனையில் இருந்து தண்ணீர் இறைக்க வாளியும், கயிறும் உள்ளது. பாலன் தேவராயர் மண்டபத்தின் அருகில் இன்னொரு சுனை உள்ளது.

தவறாமல் கொண்டு செல்ல வேண்டியது வியர்வையை துடைக்க துண்டு, கர்சீப் போன்றவை மற்றும் குடி தண்ணீர்.

No comments:

Post a Comment