Sunday, 19 November 2023

ஆசிய கிரிக்கெட்டில் அரசியல்

இந்தியா தோற்றதும் அரசியல் தான் காரணம் என்று நிறைய பேர் சொல்லி வருகிறார்கள். அரசியலும் காரணம் தான்.

இந்த உலகக் கோப்பையில் ஆசிய கிரிக்கெட்டில் நடந்த அரசியல் பற்றி

பங்களாதேஷ்:

உலகக் கோப்பை தொடங்குவதற்கு முன்பாகவே பங்களாதேஷ் கேப்டன் தமீம் இக்பால், கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். அதற்கு பிறகு பங்களாதேஷ் பிரதமர் தமீமை அழைத்து பேசிய பின் ஓய்வு அறிவிப்பை திரும்ப பெற்று அணியில் தொடர்வதாக சொன்னார்.

பங்களாதேஷ் ஷகீப்பை கேப்டனாக அறிவித்தது. ரொம்ப நாளைக்கு பிறகு தான் பங்களாதேஷ் உலகக் கோப்பை அணியை அறிவித்தது. தமீம் காயத்தில் இருந்து முழுமையாக மீளாததால் அவரை அணியில் சேர்க்க ஷகீப் விரும்பவில்லை. கோச் வற்புறுத்த அவர் மிடில் ஆர்டரில் ஆட வந்தால் சரி என்று சொன்னார் ஷகீப்.

தமீம் மறுக்க, தமீம் அணியில் சேர்க்கப்படவில்லை. 

உலகக் கோப்பையின் போது கொல்கத்தாவில் இருந்து ஷகீப் விதிமுறைகளை மீறி வீட்டிற்கு சென்று வந்ததாக குற்றச்சாட்டும் உள்ளது.


பாகிஸ்தான்:

உலகக் கோப்பை அணி தேர்வு செய்த பின் தேர்வு குழுத் தலைவர் இன்சமாம், இங்கிலாந்தில் ஒரு நிறுவனத்தின் பங்குதாரர் என்று குற்றச்சாட்டு வைக்கப்பட்டது. அதில் ரிஸ்வானும் ஒரு பங்குதாரர். இன்சமாம் தனது மருமகன் இமாமை அணியில் தேர்வு செய்தார்.

உலகக் கோப்பை போட்டிகளின் போது இன்சமாம் தன் மீதான குற்றம் நிரூபிக்கபட்டால் பதிவு விலகுவதாக சொன்னார்.

பாகிஸ்தான் அணி உலகக் கோப்பையில் இருந்து வெளியேறியதும் பாகிஸ்தான் அணியின் தலைமை பயிற்சியாளராக முகமது ஹபீஸ் நியமிக்கப்பட்டுள்ளார். தேர்வு குழு தலைவராக வகாப் ரியாஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

இலங்கை:

இலங்கை வீரர்களுக்கு தொடர்ச்சியாக காயம் ஏற்பட்டு கொண்டே இருந்தது. ஒரு கட்டத்தில் பழைய வீரரான மேத்யூஸை அணிக்கு கொண்டு வந்தனர். டேப் ரிக்காரில் சிக்கும் கேசட்டை ரொம்ப நாளைக்கு பிறகு மீண்டும் போட்டால் கொஞ்ச நேரம் பாடிவிட்டு டேப்பை அறுத்துவிடுமே, அதுபோல் ஆனது மேத்யூஸை சேர்த்தது.

இலங்கையின் அணியின் செயல்பாட்டை பார்த்து இலங்கை அரசு கிரிக்கெட் வாரியத்தை கலைத்தது. சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் இலங்கை கிரிக்கெட் வாரியத்தை சஸ்பெண்டு செய்தது.

ஆப்கானிஸ்தான்

ஆப்கானிஸ்தான் அணியில் சீனியர் வீரர், சென்ற உலகக் கோப்பை கேப்டன் குல்பதீன் நயீப்பை அணியில் சேர்க்கவில்லை. டிராவலிங் ரிசர்வ் ஆக இருந்தார். நடுவில் ஆசிய போட்டிகளில் கேப்டனாக பங்கேற்று ரன்னர் அப் ஆக்கினார்.

வேகப்பந்து வீச்சாளர் நவீன் உல் ஹக் உலகக் கோப்பைக்கு பிறகு ஓய்வு பெற போவதாக அறிவித்தார். உலகக் கோப்பைக்கு முன் 7 போட்டிகளிலும் உலகக் கோப்பையில் 8 போட்டிகளிலும் ஆடியுள்ளார். 24 ‌வயதான நவீன்.

இந்தியா :

இந்திய கிரிக்கெட் வாரிய தலைவராக அரசியல் கட்சி சம்பந்தப்பட்டவர்கள் இருப்பது வாடிக்கை. உதாரணமாக சரத் பவார்.

ஆனால் ஜெய்ஷா கிரிக்கெட் வாரிய பதவி ஏற்ற பின் பேரோஸ் ஷா கோட்லா மைதானம் அருண் ஜெட்லி மைதானம் ஆனது. சர்தார் பட்டேல் மைதானம், நரேந்திர மோடி மைதானம் ஆனது.

மும்பை கோட்டா, ராகுல் டிராவிட் சிபாரிசு என அணித்தேர்வு இருந்தாலும் அணியின் செயல்பாடு சிறப்பாகவே இருந்தது. 

100 கோடி பேர் உள்ள நாட்டில் 150 கிமீ வேகத்தில் பந்துவீச ஆள் கிடையாது. இடதுகை துவக்க ஆட்டக்காரர் கிடையாது. பகுதி நேர பந்து வீச்சாளர் கிடையாது என்பதே மாபெரும் அரசியல். 

வெற்றி பெற்றால் அரசியல் வெளியே தெரியாது. தோல்வி அடைந்ததால் அரசியல் தெரிகிறது.

No comments:

Post a Comment