Saturday, 30 September 2023

நிலவில் கழிவுகள்

[சந்திர மண்டலத்தை சுத்தம் செய்து சாலைகள் இட்டு வைப்போம்]

நிலவில் கிட்டத்தட்ட 225 டன்களுக்கு(500,000 பவுண்டுகள்) மேலாக கழிவுகள் இருப்பதாக நாசா தெரிவித்துள்ளது. எப்படி இந்த கழிவுகள் வந்தது, என்னென்ன கழிவுகள்?

நிலவில் இறங்கியவர்கள்: 

[ஹே நிலவே ஹே நிலவே, நான் உன்னைத் தொட 

உன்னைத் தொட உன்னைத் தொட விண்ணை அடைந்தேன்]

நீல் ஆம்ஸ்ட்ராங் போல நிலவில் காலடி பதித்தவர்கள் 

1. நீல் ஆம்ஸ்ட்ராங் - அப்போலோ11, 1969

2. பஷ் ஆல்ட்ரின் - அப்போலோ11, 1969

3. பீட்டே கான்ராட் - அப்போலோ12, 1969

4. ஏலன் பீன் - அப்போலோ12, 1969

5. ஏலன் ஷெப்பர்ட் - அப்போலோ14, 1971

6. எட்கர் மிட்சல் - அப்போலோ14, 1971

7. டேவிட் ஸ்காட் - அப்போலோ15, 1971

8. ஜேம்ஸ் இர்வின் -அப்போலோ15, 1971

9. ஜான் யங்- அப்போலோ16, 1972

10. சார்லஸ் டுயூக் - அப்போலோ16, 1972

11. ஜீன் செர்னான் - அப்போலோ17, 1972

12. ஹாரிசன் ஸ்மிட் - அப்போலோ17, 1972

1969 முதல் 1972 வரை இந்த 12 அமெரிக்கர்களும் நிலவில் காலடி வைத்துள்ளனர். நிலவில் இருந்து பாறைத்துண்டுகள், மண் ஆகியவற்றை ஆராய்ச்சிக்கு எடுத்து வரும் போது விண்கலத்தில் எடையை குறைக்க அவர்கள் பயன்படுத்திய டயப்பர், மலம், சிறுநீர், எச்சில் என 96 பாக்கெட்டுகளை நிலவில் விட்டு விட்டு வந்துள்ளனர். இவற்றை மீண்டும் எடுத்து ஆராய்ச்சி பண்ணலாமா என்று யோசித்து வருகிறது நாசா.

{திருநெல்வேலி மாவட்டத்தில் பிறந்தவர்கள் தேனிலவுக்கே திருச்செந்தூர் கோவிலுக்கு தான் போவோம். நிலவுக்கு எங்க போக}

லேண்டர்ஸ் & ரோவர்ஸ்

[நிலவுக்கும் போய் வரவே எங்கள் கண்ணுக்கு சிறகு கொடு]

லேண்டர் என்பது நிலவில் இறங்கி ஆய்வு செய்யும் விண்கலம், ரோவர் என்பது நிலவின் பரப்பில் பயணிக்க கூடிய கலம்.

கிட்டத்தட்ட 70 விண்கலங்கள் நிலவில் இருக்கிறது. இதில் நிலவில் மோதி உடைந்து போன லேண்டர்களும் அடக்கம்.

{கல்லூரி காலத்திலே ராக்கெட் விட்டு பழகினால் தான் இதெல்லாம் சாத்தியம்}

அஸ்தி

[வான்மதியே வான்மதியே தூது சொல்லு வான்மதியே...]

ஜெனி ஷூமேக்கர் என்ற அமெரிக்க புவியியலாளரின் அஸ்தி ஒரு சிறிய பாட்டிலில் நிலவின் பரப்பில் போடப்பட்டுள்ளது.

{தங்கப்பேழையில் வைத்திருப்பார்களோ}

புகைப்படம்

[நிலவிடம் வாடகை வாங்கி…விழி வீட்டினில் குடி வைக்கலாமா…]

அப்பல்லோ 16, விண்கலத்தின் மூலம் நிலவுக்கு சென்ற சார்லஸ் டியூக் தனது குடும்ப புகைப்படத்தை நிலவில் விட்டுவிட்டு வந்தார். சூரிய வெளிச்சத்தில் அந்த புகைப்படம் இந்நேரம் வெளரி போயிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

{இப்போ போனா, வடை சுடுற பாட்டி கூட செல்பி கண்பார்ம்}

கோல்ஃப் பந்து

[வெண்ணிலவே வெண்ணிலவே ...  விண்ணை தாண்டி வருவாயா?.. 

விளையாட.. ஜோடி தேவை..]

அப்பல்லோ 14, விண்கலத்தின் மூலம் நிலவுக்கு சென்ற ஏலன் ஷெப்பர்ட், நிலவின் நிலப்பரப்பில் இரண்டு கோல்ப் பந்துகளை வைத்துவிட்டு வந்தார்.

{அடுத்த முறை சென்றால் விளையாடலாம் என்று நினைத்தாரோ என்னவோ}

இறகும் சுத்தியலும்

[நிலவை  உரசும் மேகம் அந்த நினைத்தே உருகாதா ...]

16ம் நூற்றாண்டில் கலிலியோ, பைசா கோபுரத்தில் இருந்து வெவ்வேறு எடை கொண்ட பொருள்களை சோதனைக்காக ஒரே நேரத்தில் கீழே போட்டார். அதிக எடை கொண்ட பொருள் விரைவாக புவிப்பரப்பை அடையும் என்பதை நிரூபிக்க.

அதே சோதனையை, டேவிட் ஸ்காட் இறகு மற்றும் சுத்தியல் கொண்டு நிலவில் செய்தார். இரண்டும் ஒரே நேரத்தில் நிலவின் நிலப்பரப்பை தொட்டது.

{காது குடைய கொண்டு போன கோழி இறகா இருக்குமோ}

அறிவிப்பு பலகைகள் & பைபிள்

[நிலா காயும் நேரம் சரணம்...]

அப்பல்லோ 11 மூலம் விண்வெளிக்கு சென்றவர்கள் வைத்த அறிவிப்பு பலகை "நாங்கள் முதல் முதலாக நிலவில் காலடி வைத்தவர்கள், மனித இனத்தின் சமாதானத்திற்காக வந்தோம்".

டேவிட் ஸ்காட் ஒரு பைபிளை நிலவில் வைத்து விட்டு வந்தார்.

{நம்மாளு போயிருந்தா இந்த சாதிக்கு பாத்தியப்பட்டதுன்னு எழுதி இருப்பார்கள்}

கைவினைப் பொருட்கள்

[நிலாவில் மண்ணெடுத்து நெத்தி செஞ்சேன் பாருங்க...]

வானியல் நிபுணர்கள் நினைவுகூறலுக்காக சில கைவினைப் பொருட்களையும் விட்டுவிட்டு வந்துள்ளனர்.

கொடிகள்

(வானில் காயுதே வெண்ணிலா...)

அமெரிக்க கொடிகளை நிறைய கொண்டு சென்றாலும், ஒரு பைப்பில் அடைத்து ஒரு கொடியை நிலவின் மீது வைத்துள்ளனர்.

{நிலவில் கொடி நட்டி சல்யூட் அடிச்சாங்களான்னு தெரியல}

பூட்ஸ்

[நிலா காய்கிறது...]

நிலவில் நடக்கக்கூடிய வகையில் தயாரிக்கப்பட்ட 12 பூட்ஸ்கள், கேமரா மற்றும் பிலிம் ரோல்களை விட்டு விட்டு வந்துள்ளனர்.

{மரியாதை நிமித்தமாக செருப்பை கழற்ட்டிருப்பாங்களோ}


நன்றி

தி வீக்

டைம்ஸ் ஆப் இந்தியா

இதர இணைய தளங்கள் 



No comments:

Post a Comment