குட்டி மாமா எங்கள் ஊரில் பலருக்கும் மாமா தான். பஸ் ஸ்டாண்டில் சட்டை இல்லாமல் உட்கார்ந்து இருப்பார். அவர் சட்டை அணிவதே கோவில் கொடைகளுக்கு மட்டுமே. அதுவும் மஞ்சள் நிற சட்டையை அணிந்து கைகளை மடித்து விட்டு வாடாமல்லி கலர் சால்வையை தோளில் போட்டு தான் வருவார்.
நிறைய கதை சொல்வார். தெனாலிராமன் கதைகளை மாற்றி கச்சிதமாக சொல்வார். நிறைய விடுகதைகள் சொல்வார்.
ஊரில் நல்லது கெட்டது எல்லாவற்றிலும் இருப்பார். பெரிதாக எந்த வேலையையும் செய்யவிட்டாலும் அவரது குரல் மட்டும் கேட்டு கொண்டே இருக்கும்.
எங்கள் ஊர் சிறிய கிராமம் என்பதால் கல்யாணம், சடங்கு போன்ற விசேஷங்களுக்கு முந்தைய நாள் இரவில் ஊரே சேர்ந்து காய்கறி வெட்டுவது தேங்காய் துருவுவது என வேலை பார்க்கும். குட்டி மாமா முட்டைகோஸ் அரிவாளால் கொத்துவார். மற்றவர்கள் முழு கோஸை வெட்டி முடிக்கும் போது முக்கால் கோஸ் தான் வெட்டி இருப்பார். பெரிசுகள் குட்டிகிட்ட சத்தம் மட்டும் தான், வேலை நடக்கல என்பார்கள்.
அதே விசேச நாளின் இரவில் டிவி டெக் வாடகைக்கு எடுத்து தெருவில் வைத்து படம் போடுவார்கள். டிவிகாரோடு சேர்ந்தே சுற்றுவார் மாமா, ஆனால் முதல் படம் முடிவதற்குள் தூங்கிவிடுவார். முழிப்பு வரும் போது எழுந்து மண்ண தட்டிக்கொண்டே படம் சரியில்லடே என்று வீட்டிற்கு செல்வார்.
அவரிடம் கதை கேட்பதற்கென்றே ஒரு கூட்டம் உண்டு. அதில் நானும் ஒருவன். குட்டி மாமாவுக்கு ஒரே மகன். அவனுக்கு நிறைய கதை சொல்வார் என்று வயித்தெறிச்சல் எங்களுக்கு உண்டு. அவர் மகன் கிருஷ்ண மூர்த்தி எங்களை விட இளையவன்.
மாமா தினமும் டீக்கடையில் செய்திதாள் படித்து விடுவார். அதுமட்டுமில்லாமல் எங்களையும் வித்தியாசமான பேர்களில் யாசிர் அரபாத், சதாம் உசேன், இடி அமீன் என்றெல்லாம் கூப்பிடுவார்.
எங்கள் ஊரில் கணேஷ் (புகையிலை) அறிமுகமான போது சிறுவர்கள் பலரும் பழகி விட்டனர். குட்டி மாமா தான் அதை எதிர்த்தவர். ஊர் கூட்டத்தில் கடைக்காரர்கள் யாரும் சிறுவர்களுக்கு விற்கக்கூடாது என்று ஆணித்தரமாக பேசினார்.
கடைக்காரர்கள் வேறு வழியில் சிந்தித்தனர். வலையில் வீழ்ந்தது கிருஷ்ண மூர்த்தி. கிருஷ்ண மூர்த்தி தான் கடையில் கணேஷ் வாங்கி குறிப்பிட்ட இடத்தில் கல்லுக்கு அடியில், சுவர் விரிசலில், மர பிளவுகளில் என்று வைத்து விடுவான். அதற்கான நெட்வொர்க்கில் தேவைப்படுவோர் அந்த இடங்களில் இருந்து எடுத்து பயன்படுத்தி கொண்டனர். கிருஷ்ண மூர்த்தியும் பயன்படுத்த தொடங்கினான்.
மாமா ஒருநாள், ஏ, சதாமுசேன் நீயும் அந்த கூட்டத்தில் உண்டு தான மாப்பிள்ளை என்றார். அன்று தான் மாமாவின் முகத்தில் பதட்டம் தெரிந்தது. கிருஷ்ண மூர்த்தியை பெல்டால் அடி பின்னி எடுத்து விட்டார்.
மாமாவிடம் கதை கேட்கும் கூட்டம் சுருங்கி போனது. மாமாவும் என் கதையே மோசமா போய்கிட்டு இருக்கு என்று கதை சொல்ல மறுத்தார். ஆனாலும் எங்கள் திருப்திக்காக சொன்னார்.
கிருஷ்ண மூர்த்தி, மாமாவிடம் பேசுவதில்லை. சிகரெட் பிடிக்க தொடங்கி இருந்தான். நானும் இன்னும் சில நண்பர்களும் அவனுக்கு அட்வைஸ் பண்ணிணோம். அவன் அதை காதிலே வாங்கி கொள்ளவில்லை.
பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வந்த அன்று எங்கள் ஊரில் இருந்து நாலு சிறுவர்கள் வீட்டை விட்டு ஓடி விட்டனர். கிருஷ்ண மூர்த்தியும் அதில் ஒருவன். உள்ளுக்குள் வருத்தம் இருந்தாலும் மாமா சொன்னார், அவன் என் புள்ளையே இல்லைடே, நானும் அத்தையும் செத்து போன நீங்க யாராச்சும் கொள்ளி வச்சிருங்கடே என்றார். நாங்கள் மாமாவை திட்டி விட்டு நகர்ந்தோம்.
இரண்டு சிறுவர்கள் திருப்பூரில் இருந்து திரும்பி விட, கிருஷ்ண மூர்த்தியும் இன்னொருவனும் பாம்பே சென்றிருப்பதாக தெரிந்தது.
காலம் உருண்டோடியது. கதை கேட்ட எங்களுக்கு வேலை கிடைத்து வெளியூர் சென்று விட்டோம். ஊருக்கு போனால் மாமாவை பார்க்காமல் வருவதில்லை. மாமா அதிக நேரம் பஸ் ஸ்டாண்டில் தான் இருப்பார்.
அவனே பத்தி ஏதாச்சும் தகவல் கிடைச்சிதாடே கபில் சிபல் என்றார். கண்ணீர் முட்டிக் கொண்டு வந்தது.
அத்தை இறந்துவிட அதற்கும் கிருஷ்ண மூர்த்தி வரவில்லை. மாமா காலையில் ஹோட்டலில் சாப்பிடுவதாகவும், மதியம் சாப்பிடுவதில்லை, இரவில் யாராவது வீடு தேடி வந்து சாப்பாடு கொடுத்தால் சாப்பிடுவதாகவும் கேள்விப்பட்டேன்.
நான் ஊருக்கு போன நேரத்தில் எனக்கு ஒரு போன் வந்தது. கிருஷ்ண மூர்த்தி தான் பேசினான், யாருக்கும் தெரியாமல் பெரியாஸ்பத்திரி வா மச்சான் என்றான்.
ஆள் அடையாளம் தெரியாமல் மாறி இருந்தான். மச்சான் எனக்கு எய்ட்ஸ் வந்துட்டு என்றான், எனக்கு தூக்கி வாரிப் போட்டது. இன்னும் வாரமோ, ஒரு மாசமோ தான் மச்சான். எங்க அப்பாவுக்கு தெரிய வேண்டாம், எங்க அப்பாவ நல்லா படியா பார்த்துக்கோங்க. என்ன அனாதை பொனமா விட்டாராதீங்க என்றான்.
எனது முகவரியை ஆஸ்பத்திரி பதிவேட்டில் சேர்த்து இருந்தனர். பதினேழாம் நாள் கிருஷ்ண மூர்த்தி இறந்துவிட்டதாக தகவல் வந்தது. நானும் சில நண்பர்களும் சேர்ந்து பெரியாஸ்பத்திரி பக்கத்தில் இருந்த சுடுகாட்டில் எரியூட்டினோம்.
மாமா பஸ் ஸ்டாண்டில் காத்திருக்கிறார். அவருக்கு கொள்ளி போட வருவான் என்று.
No comments:
Post a Comment