Wednesday, 28 June 2023

உலகக்கோப்பை மைதானங்கள் ஒரு பார்வை

1. சென்னை - எம்ஏ சிதம்பரம் மைதானம் 

தமிழ்நாட்டில் தலைநகரில் உள்ள மைதானம். மெரினா கடற்கரையில் இருந்தாலும் காத்தோட்டம் இல்லாத மைதானம். சையது அன்வரின் 194 நிகழ்ந்த மைதானம்.

2008ல் இங்கிலாந்து அணி இந்தியா வந்தபோது பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக, இரு ஒருநாள் போட்டிகள் விளையாடவில்லை. ஆனால் பாதுகாப்பை பலப்படுத்தி சென்னையில் டெஸ்ட் போட்டியில் ஆடியது. 1987, 1996 & 2011 உலகக்கோப்பை போட்டிகள் இந்த மைதானத்தில் நடைபெற்றது.

இது வரை நடந்துள்ள ஒருநாள் போட்டிகள் -23

எம்ஏ சிதம்பரம் - சர். அண்ணாமலை செட்டியாரின் கடைசி மகன் தான், முத்தையா அண்ணாமலை சிதம்பரம். இவர் தொழிலதிபர், கிரிக்கெட் வாரிய தலைவராகவும் இருந்தவர்.

2. பெங்களூரு - சின்னசாமி ஸ்டேடியம் 

கர்நாடக தலைநகரில் உள்ள மைதானம். பேட்ஸ்மேன்களின் சொர்க்கபுரி. 1987, 1996, 2011 உலகக்கோப்பை போட்டிகள் இந்த மைதானத்தில் நடைபெற்றது.

இது வரை நடந்துள்ள ஒருநாள் போட்டிகள் - 26

சின்னசாமி - வழக்கறிஞர், மைசூர் கிரிக்கெட் கிளப்பை தொடங்கியவர். இந்திய கிரிக்கெட் வாரியத்தின் முன்னாள் தலைவரும் கூட.

3. ஹைதராபாத் - ராஜீவ் காந்தி மைதானம்

தெலுங்கானா மாநில தலைநகரில் இருந்த லால் பகதூர் சாஸ்திரி மைதானம் சிறியதாக இருந்ததால், 2005ல் தொடங்கப்பட்டது ராஜீவ்காந்தி மைதானம். முதல் முறையாக உலகக் கோப்பை போட்டி நடைபெற உள்ளது.

இது வரை நடந்துள்ள ஒருநாள் போட்டிகள் -7

ராஜீவ்காந்தி - முன்னாள் இந்திய பிரதமர்.

4. புனே - மகாராஷ்டிரா கிரிக்கெட் அசோசியேசன் மைதானம் 

ஏற்கனவே இருந்த மைதானத்தில் சில பிரச்சினைகள் இருந்ததால் 2013ல் துவக்கப்பட்ட மைதானம். சுப்த்ரா ராய் சகாரா மைதானம் என்ற பெயரில் இருந்தது. சகாரா நிறுவனம் முழுமையாக பணம் கட்டாததால் பெயர் மாற்றப்பட்டது. 

மகாராஷ்டிரா அரசு மைதானத்திற்கு தண்ணீர் தர மறுத்ததால் சர்ச்சை ஏற்பட்டது. இந்திய கிரிக்கெட் வாரியத்தின் ஆஸ்தான மைதானமான நாக்பூரில் இந்த ஆண்டு உலகக் கோப்பை நடத்தப்படவில்லை. அதற்கு பதிலாக புனே மைதானம் தேர்வாகி உள்ளது.

முதல் முறையாக உலகக் கோப்பை போட்டி நடைபெற உள்ளது.

இது வரை நடந்துள்ள ஒருநாள் போட்டிகள் -7

5. மும்பை - வான்கடே மைதானம்

வான்கடே இந்திய கிரிக்கெட் வாரியத்தின் செல்லப்பிள்ளை. 2011 பைனல் நடைபெற்ற மைதானம். மும்பையில் பாரபோன் மைதானம் மற்றும் நவி மும்பை மைதானங்களும் உள்ளன. ஆனால் முக்கியத்துவம் வாய்ந்த மைதானம் வான்கடே.

இது வரை நடந்துள்ள ஒருநாள் போட்டிகள் -23

வான்கடே - முன்னாள் கிரிக்கெட் வாரிய தலைவர், வழக்கறிஞர், அரசியல்வாதி.

6. அகமதாபாத் - நரேந்திர மோடி மைதானம்.

வல்லபாய் படேல் மைதானம் என்று இருந்தது. உனக்கு சிலை வச்சு தாரேன், எனக்கு மைதானத்தை கொடு என்று டீல் பேசி, மைதானம் சீரமைப்புக்கு பிறகு நரேந்திர மோடி மைதானம் என மாறியது. இந்த ஆண்டு உலகக் கோப்பை இறுதி ஆட்டம் நடைபெற உள்ள மைதானம். அதிக பார்வையாளர்கள் இருக்கை வசதி உள்ளது.

இது வரை நடந்துள்ள ஒருநாள் போட்டிகள் -26

நரேந்திர மோடி - பாரத பிரதமர்.

7. டெல்லி - அருண் ஜேட்லி மைதானம் 

ப்ரோஷா கோட்லா மைதானமாக இருந்தது அருண் ஜேட்லி மைதானமாக மாறியுள்ளது. தலைநகரில் உள்ள மைதானம். அனில் கும்ளே பத்து விக்கெட் எடுத்த மைதானம்.

பிட்ச் சரியில்லை என்று ஒருநாள் போட்டி நிறுத்தப்பட்டதும் இந்த மைதானத்தில் தான்.

இது வரை நடந்துள்ள ஒருநாள் போட்டிகள் -26

அருண் ஜேட்லி - முன்னாள் மத்திய அமைச்சர்.

8. தரம்சாலா - இமாச்சலப் பிரதேச கிரிக்கெட் வாரிய மைதானம் 

இமாச்சலப் பிரதேசத்தில் பசுமை பொங்கும் மைதானம். இந்திய கிரிக்கெட் வாரியத்தின் ஆஸ்தான மைதானங்களில் ஒன்றான மொகாலி இந்த ஆண்டு போட்டிகள் நடத்தப்படவில்லை. மொகாலி போட்டிகளை கைப்பற்றியுள்ளது தரம்சாலா. 2015ல் துவங்கப்பட்ட மைதானம். முதல் முறையாக உலகக் கோப்பை போட்டி நடைபெற உள்ளது.

இது வரை நடந்துள்ள ஒருநாள் போட்டிகள் -4

9. லக்னோ - அடல் பிகாரி வாஜ்பாய் ஏக்னா மைதானம்

உத்தரப் பிரதேச தலைநகர் லக்னோவில் 2019ல் துவங்கப்பட்ட மைதானம். 2019 ஆப்கானிஸ்தான் அணிக்கு சொந்த மைதானமாக செயல்பட்டது. இந்த ஆண்டு உலகக் கோப்பை போட்டிகளுக்கு தயாராகி வருகிறது.

இது வரை நடந்துள்ள ஒருநாள் போட்டிகள் -4

அடல் பிகாரி வாஜ்பாய் - முன்னாள் பாரத பிரதமர்.

10. கொல்கத்தா - ஈடன் கார்டன் மைதானம்.

ஒரு காலத்தில் இந்தியாவின் பெரிய மைதானமாக, முக்கிய மைதானமாக இருந்தது. வரலாற்று சிறப்புமிக்க ஆஸ்திரேலியா எதிரான டெஸ்ட் நடைபெற்ற மைதானம்.

1996 ஆண்டு உலகக் கோப்பை அரையிறுதி போட்டி ரசிகர்கள் கிளர்ச்சியால் கைவிடப்பட்டது. இந்த ஆண்டு ஒரு அரை இறுதி போட்டி நடைபெற உள்ளது.

இது வரை நடந்துள்ள ஒருநாள் போட்டிகள் -31


No comments:

Post a Comment