Thursday, 26 August 2021

18/100 விடுதி நாட்கள்

அதிகாலை ஐந்து மணிக்கு

மணியடிக்கும்.

அவசர குளியல் போட்டு 

அலங்காரம் செய்துவிட்டு

ஆறு மணி ஜெபகூடுகையில் 

நிற்க வேண்டும் !

படிப்பு நேரம்,

தேனீர் நேரம்,

படிப்பு நேரம்,

காலை உணவு !

பள்ளி முடிந்ததும் 

காபியும் வடையும் !

விருப்பம் இருந்தால்

மாலை ஆறு மணி வரை

விளையாடி கொள்ளலாம் !

ஆறு முதல் ஏழரை படிப்பு நேரம்

எட்டு வரை இரவு உணவு !

ஒன்பதரை வரை 

படிப்பு நேரம் !

உறங்கி வழியும் 

கண்களோடு ஜெப கூடுகை !

பத்து மணிக்கு விளக்குகள் 

அணைக்கப்படும் !

கட்டாய தூக்க நேரத்தில்

வீட்டை நினைத்து 

விசும்பல்கள் கேட்கும் !

தம்பி தங்கை என 

உறக்கத்தில் உளறல்கள் 

கேட்கும் !

மீன் தொட்டியில் 

வண்ண மீன்கள் கிடக்கும்,

எங்களை போல போட்டதை 

தின்று கொண்டு !

வெள்ளை சீருடை சட்டையும் 

பள்ளி முத்திரை பதித்த 

பனியன்களும் அடிக்கடி

காணாமல் போகும் !

ஞாயிற்றுக்கிழமை மரத்தடியில் 

குடும்ப உறுப்பினர்களோடு

அரைமணி நேரமோ 

ஒரு மணி நேரமோ 

வாய் நிறைய சிரிப்பு வாய்க்கும் !

அதிகாலையில் ஒலிக்கும் 

அப்பா பிதாவே பாடல் 

எரிச்சலூட்டும் !

ஊருக்கு செல்லும் நாளில் 

உற்சாகமாக உரக்க 

கத்தும் சந்தோசம் பொங்குதே 

பாடல் இனிக்கும் !

வாரம் ஒருமுறை மூன்று

மணி நேரம் வெளியே 

செல்ல அனுமதி !

பண்டத்தை மட்டுமல்ல 

சோகத்தையும் பகிர்ந்து

கொள்வோம் !

கிரிக்கெட், ரசிக சண்டைகள், 

நட்பு குழுக்கள், பட்டப் பெயர்கள், 

வார்டனிடம் வாங்கிய அடி

...

மீண்டும் செல்ல முடியாத 

வண்ணமயமான நாட்கள் அது !!! 












No comments:

Post a Comment