ஒரு பரபரப்பான கிரிக்கெட் போட்டி, 2 பாலுக்கு பதினொரு ரன்கள் தேவை. அசால்டாக ரெண்டு சிக்ஸ் அடித்து மேட்சை முடித்தான். அவன் அடித்தது குருட்டாம் போக்கு அடியல்ல. திறமையான ஷார்ட்ஸ். அதற்கு முன் அவன் விளையாடி யாரும் பார்த்ததில்லை. அதனால் தான் எல்லாருக்கும் வியப்பு. இந்த காட்சி தான் சிங்கிற்கு சரியான அறிமுக காட்சியாக இருக்கும்.
கல்லூரி ஆரம்பித்த புதிதில் சீக்கிரமாக தூங்கிவிடும் அவனை பார்த்து என்னடா இவன் சீக்கிரமா தூங்குறானே செட் ஆக மாட்டான் போல என்று நினைத்துண்டு.
ஆனால் கிட்டத்தட்ட எல்லாருக்கும் செட் ஆன ஒரு நபர் சிங். கல்லூரியில் எங்கள் செட்டில் கம்யூட்டர் சயின்ஸ் க்ரூப் அரிதான வகை. அந்த வகையை சார்ந்த சிங் கேம்பஸில் தேர்வானது யாருக்குமே வயிற்றெரிச்சலை கிளப்பவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
முதல் செமஸ்டர் இஞ்சினியரிங் மெக்கானிக்ஸ் தேர்வுக்கு முந்திய நாள், கொஸ்டின் பேப்பர் அவுட்டான வதந்தி வர விடை கண்டு பிடிக்கும் குழுவில் சிங் இணைந்து அன்றிரவு சிங் அதிக நேரம் விழித்திருந்தான்.
முதல் செமஸ்டர் ரிசல்ட் பார்க்க கும்பலாக சென்றோம். எனக்கு மூணு அரியர் இருக்குமோ என மனசு படபடத்தது. சிங்கின் ரிசல்ட்டை முதலில் பார்த்தோம். அவன் ஆல் கிளியர். அடுத்து எனக்கு பார்த்தோம் ஒரே ஒரு அரியரோடு தப்பித்தேன். இரண்டாவது செமஸ்டரிலும் அதுவே தொடர்ந்தது.
மூன்றாவது செமஸ்டரில் இருந்து முதலில் சிங் ரிசல்ட்டை பார்த்து விட்டு எனது ரிசல்ட்டை பார்ப்பது சென்டிமென்ட் ஆகியது.
சிங் அடிக்கடி ஊருக்கு செல்வான். ஊருக்கு சென்று திரும்பி வரும் போது கொண்டு வரும் பொடி தோசை அவ்வளவு சிறப்பு. நாட்கள் செல்ல செல்ல அந்த தோசையை பங்கிட்டு கொள்ள கூட்டம் அதிகரித்து விட்டது.
நானும் இருமுறை சிங்கின் ஊரான கீழப்பத்தைக்கு சென்றிருக்கிறேன். நான் ஆசிரியரின் மகன் என்றால் அவன் ஆசிரியர்களின் மகன்.
நான் அன்று எழுதும் கதைகளை படித்து விட்டு முதல் விமர்சனம் தருவது சிங்கே.
தேர்வுக்கு முந்திய நாளில் சாதாரண நாள் போல் சீக்கிரம் தூங்கி விடும் அவனை கண்டு வியக்காதோர் யாரும் இல்லை.
என் மீது சிங் கோபப்பட்டது ஒருமுறை தான். லிம்கா குளிர்பான பாட்டிலின் ஸ்டிக்கரை கிழித்ததற்காக. அந்த லிம்கா பேப்பர் எனது டைரிக்குள் உள்ளது.
கல்லூரி முடிந்த காலம், செல் போன்கள் பிறந்த காலம். அளந்தளந்து அவுட் கோயிங் கால்கள் செய்வோம். அன்று அனைவருக்கும் போன் செய்து பேசியவன் சிங்.
"பள்ளிக்கூட நண்பன் டாக்டராகி விட்டான்.கல்லூரி நண்பர்கள் யாரும் டாக்டராகவில்லை" என்று ஒரு முறை முகநூலில் பதிவிட்டேன். நான் ஆகிறேன் மச்சி என்று சிங்கிடம் இருந்து கமெண்ட்.
ஆம், இப்போது சிங் முனைவர். ஜெப வீர சிங்.
No comments:
Post a Comment