Friday, 10 April 2020

SBC 46ல் ஒரு இனிய பயணம்



ஜங்ஷன் பஸ் ஸ்டாண்டில் ஏறினால் “டவுன் டவுன்” என கத்தி கொண்டே நடுத்துனர்கள் பேருந்தை பஸ் ஸ்டாண்டின் கடைசி விளிம்பு வரை அழைத்து செல்வார்கள்.

அங்கிருந்து கிளம்பி தேவர் சிலை அருகே "u " டர்ன் எடுத்து ஸ்வாமி நெல்லையப்பர் சாலையில் பயணிக்கும். திருவள்ளுவர் ஈரடுக்கு மேம்பாலத்தை கடந்த பின் சென்ட்ரல் ரத்னா தியேட்டர்களில் என்ன படம் என்று தெரிந்து கொள்ளலாம்.

கோவில் வாசல் பேருந்து நிறுத்தத்தில் மொத்த டவுன் கூட்டமும் இறங்கி விடும். கோவில் வாசலில் நுழையும் போது நெல்லையப்பரை தரிசிக்கலாம்.கீழ ரத வீதி, தெற்கு ரத வீதியில் பயணித்து மேல ரத வீதியில் சந்தி பிள்ளையார் கோவில் அருகே பேருந்தை நிறுத்தி விட்டு ஓட்டுனரும் நடத்துனரும் டீ குடிக்க செல்வார்கள். மேல ரத வீதியில் பயணித்து தொண்டர் சன்னதியை அடையும் போது தொண்டர் நயினாரை தரிசிக்கலாம்.

மணிகண்ட விலாஸ் பாறையடியை கடந்து குருநாதன் கோவிலில் பேருந்து வடக்கு நோக்கி பயணிக்க தொடங்கும்.
இலந்தை குளம், சர்ச் கடந்தால் ராமையன்பட்டியில் சங்கரன்கோவில் நெடுஞசாலையில் இணைத்து கொள்ளும்.

வேகமெடுத்து  செல்வதால் சிவாஜி நகர், பங்களா , கால்நடை மருத்துவ கல்லூரி , போலீஸ் காலனி , சேதுராயன் புதூர் (சேரா ஊத்து ) விலக்கு வேகமாக கடக்கலாம். கற்குவியல்களையும் தோண்டப்பட்டு கொண்டிருக்கும் கிருஷ்ணா மைன்ஸ் (கிருஷ்ணா சூப்பர் - தமிழ் நாடு பிரீமியர் லீக் முக்கிய விளம்பரதாரர்) கல் குவாரியையும் காணலாம் .

நரியூத்து விலக்கை கடந்து சென்றால் மதவக்குறிச்சி வெங்கலப்பொட்டல் விலக்கும் ரஸ்தா (ரஸ்தா என்றால் ஹிந்தியில் பாதை என்று பொருள்) ஊரும் ஒருசேர வந்து விடும். கரம்பை விலக்கு மாவடி விலக்கு குத்தாலப்பேரி விலக்குகளை கடந்தால் ஒரு அபாயகரமான வளைவுடன் மானூர் வரவேற்கும்.

சுற்று வட்டாரத்தில் எல்லா (ஓரளவுக்கு) வசதிகளும் அமைய பெற்ற ஊர் மானூர் . மானூரை தாண்டி தண்ணீர் இருந்தால் மோர்குளத்தை ரசிக்கலாம். பார்வதியாபுரம் விலக்கை கடந்ததும் பிள்ளையார் குளம் ஊராட்சி வரவேற்கும்.

நெடுஞசாலையில் இருந்து விலகி கிராம சாலையில் நுழைந்து விடும். காற்றாலை மிக அருகில் வந்து விடும். மேலபிள்ளையார் குளத்தில் நுழைந்து சில பல திருப்பங்களை கடக்கும் பேருந்து. வயல்வெளியில் பேருந்து செல்வது போல் தோன்றினால் நடுப்பிள்ளையார் குளம் வந்து விடும்.
நடுப்பிள்ளையார் குளத்தை கடந்ததும் கீழ பிள்ளையார்குளத்தின் குறிச்சி நகர் வந்து விடும்.

முக்கு ரோட்டில் வடக்கு நோக்கி திரும்பிய பின்
கீழ பிள்ளையார்குளத்தின் கரையில் பேருந்து பயணிக்கும். வட்ட வடிவிலான பேருந்து நிலையம் வரவேற்கும். அவசரப்பட்டு இறங்க வேண்டாம் இன்னும் பயணிப்போம். பேருந்து செல்ல முடியுமா என்று நினைக்க வைக்கும் குறுகிய சாலையில் கிழக்கு நோக்கி பயணிப்போம். நாய் குட்டி குளம் கீழ குளக்கரையில் 1 கிமீ பயணம் சென்றதும் தனுஷ் கோடி நகர் கற்பக விநாயகர் கோவில் முன்பு பேருந்து திரும்பும்.

அவசர பட்டு இறங்க வேண்டாம் ஓட்டுநர் ரிவர்ஸ் எடுத்து தான் நிறுத்துவார்.


No comments:

Post a Comment