Monday, 11 February 2013

ஆனந்த மழை

பனி பெய்யும் காலை
மார்கழி மாதம்
நடைப் பயிற்சி செய்ய
போயிருந்தேன்!

அதிகாலையிலே குளித்த
அந்த அழகு தேவதை
கூந்தலை துணியால்
போர்த்தி இருந்தாள்!

கீழே குனிந்து கோலம்
போட்டு கொண்டிருந்தவள்
நிமிர்ந்து பார்த்தாள்
நான் விழுந்து விட்டேன்
காதலில்!

பட்டு பாவாடை, தாவணி
ஜலக் ஜலக் கொலுசு, பூஜை கூடை
சகிதமாய் கோவிலில் பார்த்தேன்
அவள் நினைப்பு சாமியை
மறக்கடித்தது!

நான் படிக்கும் கல்லூரியில்
முதலாமாண்டு சேர்ந்தாள்
நான் காதலில்
முதலாமாண்டு மாணவன் ஆனேன்

கல்லூரியில் வேறு யாராவது
காதலிப்பதாய் சொல்லுமுன்
நான் சொல்ல நினைத்தேன்!
ஒரு பார்வை, ஒரு புன்னகை
வேறெதுவும் பேசியதில்லை
அதற்குள் காதலை சொல்வதா?

பின் வாங்கினேன்
அவள் கண்ணை பார்த்தால்
என்னால் பேச முடியவில்லை
எங்கே என் காதல்
சொல்லாமலே செத்து விடுமோ
என பயந்து
காதலை எழுதினேன்!

என் காதலை அவளிடம்
சொல்ல வான், மேகம், நிலா
மான், புறா, வானவில், ரோஜாவை
துணைக்கு அழைத்தேன் !
ஒரு மாலை நேரம்
இலேசாய் தூறி கொண்டிருந்தது
குடை பிடித்து சென்று
கொண்டிருந்தாள்
என் மனதில் காதல் மழை
பெய்தவள்!

ஓடிச் சென்று நிறுத்தினேன்
மூச்சு வாங்கினேன்
என்... மனசுல... உள்ளத..
எழுதி... இருக்கேன்... என்று
சொல்லி முடிக்கும் முன்
கடிதத்தை வாங்கி
கொண்டாள் என் இனியவள்!

மழை வலுத்தது
உற்சாகமாய் நனைந்தேன்
ஆனந்த மழையில் !
 

No comments:

Post a Comment