Friday, 30 August 2024

ககக -5

கந்தமாறன் மதுரைக்குச் சென்று வந்த பிறகு மகிழ்ச்சியுடன் திரிந்தான். விரைவில் சுதந்திரம் கிடைத்து விடும் என்று தலைவர் சொன்னது தான் காரணம். 

மாமா மாயாண்டிக்கும் அது மகிழ்ச்சியே.
சுதந்திரம் கிடைத்து விட்டால், போராட்டம், புரட்சி என்று கந்தமாறன் அலைய மாட்டான் என்ற மகிழ்ச்சி.

வெள்ளைக்காரன் மாளிகைக்குச் சென்ற போது, வெள்ளைக்காரனும் சொன்னான், அவர்கள் தாயகம் திரும்ப போவதாக. கந்தமாறனை லண்டனுக்கு வருகிறாயா என்று கூட கேட்டான் அந்த வெள்ளைக்காரன். சொந்த நாட்டில், சுதந்திர நாட்டில் இருக்கப் போவதாகக் கூறி மறுத்து விட்டான் கந்தமாறன்.

கந்தமாறன் அதிக மகிழ்ச்சியாக இருந்தாலும், அதிக துயரமாக இருந்தாலும் அவன் ஊரான பாளைய நல்லூர் கிராமத்தின் வடக்கே இருக்கும் கசமாடன் மரத்தடிக்கு தான் செல்வான். ஓங்கி உயர்ந்த இரண்டு மரங்கள் இருக்கும் இடம். நல்ல தூக்கத்தைத் தரும்.

பொதுவாக யாரும் அங்கு செல்வதில்லை. ஓடைக் காவலுக்கு நின்ற கசமாடனை ராசா வெட்டிக் கொன்றுவிட்டதாக ஊரில் சொல்வார்கள். அந்த மரத்தின் கிளையையோ, குச்சியையோ யாரும் முறிப்பது கூட கிடையாது. எப்போதாவது யாராவது வந்து சேவல் பலியும், பானகாரமும் படைப்பது வழக்கம். சிலை எதுவும் கிடையாது. மரமே கசமாடன்.

கிருஷ்ணமூர்த்தி, கந்தமாறனிடம் சொன்னார், அந்நிய துணி எரிப்பு போராட்டம் நடைபெறுகிறது. உன்னிடம் துவைக்க வரும் வெள்ளையர்கள் துணியை எரித்து விடு என்று.

எனக்கு சுதந்திர நாடு எவ்வளவு முக்கியமோ, அதே அளவு என் வேலையும் முக்கியம். என்னிடம் தரப்படும் அழுக்கு துணியைச் சுத்தப்படுத்தி கொடுப்பவன் நான், அதற்கு கூலியும் வாங்கிவிட்டு எரித்தால் என் வேலைக்கு செய்யும் துரோகம் என்று கூறி மறுத்துவிட்டான்.

ஊர் முழுக்க சுதந்திரம் கிடைக்கப் போகிறது என கூவித் திரிந்தான் கந்தமாறன். சுதந்திரம்னா என்ன என்று ஊரில் ஒரு மூதாட்டி கேட்டார். வெள்ளைக்காரன் அவன் ஊருக்கே திரும்பிப் போகப் போறான் என்றான் கந்தமாறன்.

வெள்ளைக்காரன் போய்ட்டான்னா உங்கிட்ட யாரு துணி வெளுக்க போடுவா? என்று கேட்டு சிரித்தார் அந்த மூதாட்டி.

எல்லா ஊர்லயும் மில்லு, கில்லுனு நிறைய கம்பெனி புதுசா கட்டுவாங்க. சட்டை, புல் டவுசர் போட்டு நானும் வேலைக்கு போவேன் என்று பெருமிதமாகக் கூறினான் கந்தமாறன்.

தலைவர், கிருஷ்ணமூர்த்தியைக் கூப்பிட்டு பேசினார். சுதந்திரம் கிடைக்கப் போகிறது. நிர்வாகத் தலைவர்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும். உடனே தேர்தல் நடத்த வாய்ப்பு இல்லை. சுதந்திரத்திற்கு பிறகு அனைவரும் சமம். அந்தத் துடிப்பான இளைஞனை தயார் செய்து வை என்றார். தலைவரே, எனக்கு பதவி என்றான் கிருஷ்ணமூர்த்தி. சுதந்திரம் கிடைத்த பிறகும் நாம் களத்தில் இருந்து வேலை செய்தால் தான் முழுப் பலனை அடைய முடியும். அதனால் நமக்கு பதவி ஆசை வரக்கூடாது. நாம் எப்போதும் போல் இருப்போம் என்றார் தலைவர்.

செட்டியார், கந்தமாறனை கூப்பிட்டதாக கேள்விப்பட்டு செட்டியாரைப் போய் பார்த்தான். செட்டியார் சொன்னார், நான் உனக்கு தந்த வளையல்களில் ஒன்றை கிருஷ்ணமூர்த்தி பொண்டாட்டி விற்கக் கொண்டு வந்தாள் என்றார். செட்டியார் ஐயா, கிருஷ்ணமூர்த்தி ஐயா அப்படிப்பட்ட ஆள் கிடையாது என்றான் கந்தமாறன்.

கொல் ஆசாரி பக்கத்தில் இருந்து செய்து வாங்கிய எனக்கு தெரியாதா?. நீ பாடுபடுற, அவன் உன்ன பயன்படுத்திக்கிறான். நானே அவன்கிட்ட கேக்குறேன் என்றார் செட்டியார்.

கந்தமாறன் மதுரை சம்பவத்தை நினைத்துப் பார்த்தான். தலைவர் வெளியே எடுத்து நீட்டியது ஒரு வளையலை மட்டும் தான். கிருஷ்ணமூர்த்தி துரோகம் செய்கிறாரா? நம்ப முடியவில்லை கந்தமாறனால்.

மன நிம்மதி வேண்டி கசமாடனிடம் சென்றான். சில நாட்களாக தினமும் சென்றான், அங்கேயே இருந்தான். ஆழ்ந்த தூக்கத்தில் இருந்தவனை, இரண்டு பேர் வந்து மூச்சைப் பிடித்துக் கொன்றனர்.

கந்தமாறனை முனி அடித்துவிட்டது என்று ஊரெல்லாம் பேச்சாக இருந்தது.

கிருஷ்ணமூர்த்தி சுதந்திர இந்தியாவில் நிர்வாகப் பொறுப்பில் பதவி ஏற்றுக்கொண்ட கையோடு, கந்தமாறன் இறந்த இடத்தில் மலர் தூவி அஞ்சலி செலுத்தினான்.

Saturday, 24 August 2024

ராம் எனும் நாயகன்

டுவிட்டரில் புதுசா ஒருத்தர் பாலோ பண்ணினார். கிட்டத்தட்ட என்னோட ரசனை, என்னோட அலைவரிசையில் ஒத்துப்போன ஒருத்தர். நானும் அவரை பின்தொடர்ந்தேன்.

டுவிட்டரில் பழகிய தம்பி ஒருவர் போனில் பேசும் போது உங்க ஃப்ரெண்ட் ஒருத்தர் இருக்காரே ராமசந்திரன் தானே அவர் பேருனு கேட்டபோது, அதுவரை நண்பர் என்ற இடத்துக்கு வராத ராம் அன்று வந்தார்.

போன் நம்பர் பரிமாறிய பின்னர் நேரில் பார்க்க வேண்டும் என்றார். அவரே நேரில் வந்தார். எனது அலுவலகத்திற்கு அருகில். நாங்கள் சந்தித்தது ஒரு நெடுஞ்சாலை ஓரத்தில். என்னை ஆச்சரியப்பட வைக்கும் வகையில் ஒரு பரிசும் அளித்தார். திடீர் சந்திப்பு, பரிசளிப்பு என ஆச்சர்ய படுத்தியவருக்கு நான் ஒரு டீ கூட வாங்கி தரவில்லை அன்று.

எனது கடின சூழலில் ஆறுதல் தந்த நண்பர்களில் ஒருவர். மீண்டும் நேரில் வந்தார். 

திருநெல்வேலி வந்த பின் கிரிக்கெட் பற்றிய தமிழ் பத்திரிகை ஆரம்பிக்கலாமா என்றேன். தாராளமாக ஆரம்பிக்கலாம் என்று ஊக்கம் தந்தார். ஜனவரியில் தொடங்க நினைத்தது, டிசம்பரில் தொடங்கினோம். பிறகு மைக்கேல், கார்த்தி என அணியாய் மாறினோம்.

இப்படி ஒரு மனிதனா என்று வியக்க வைத்தவர் ராம் (இப்போது சரணும் இணைந்துள்ளார்). ஓடுகிறார், நடக்கிறார், பயணிக்கிறார், வாசிக்கிறார், எழுதுகிறார், உதவுகிறார், குரல் கொடுக்கிறார், களத்தில் நிற்கிறார், சமைக்கிறார், (பாத்திரம் கழுவுகிறார் !), சந்திக்கிறார், சிந்திக்கிறார் இன்னும் எத்தனையோ.

இன்று அவருக்கு பிறந்தநாள் பரிசேதும் கொடுக்கவில்லை. இந்த எழுத்துக்கள் மட்டுமே.

ராமச்சந்திரன் எனும் நண்பன் எனக்கு கிடைத்த பரிசு.

Saturday, 17 August 2024

ககக - 4

பூங்கொடி சிரிப்பில் காதலில் விழுந்த கசமாடன், அவள் தேடி வந்து தந்த புன்னகையில் காதலில் புதைந்தே விட்டான். அவள் பின்னால் அலைய ஆரம்பித்தான். அவளையும் காதல் கைப்பற்றிக் கொண்டது.

சிங்கப்பல் சித்தருக்கு தெரியாமல் இவர்களின் காதல் பித்தம் ஏறிக் கொண்டு இருந்தது ஏரிக்கரையில்.

ஒருநாள் கூடையில் ஏதோ ஒரு செடியை மறைத்து சென்றவள், கசமாடன் கூப்பிடுவது கூட கேட்காத மாதிரி சென்றுவிட்டாள். கசமாடன் மனமுடைந்து விட்டான். அவளை மீண்டும் சந்திக்கும் போது ஆர்வமாக விசாரித்தான்.

மருந்துக்கு செடி பறித்து செல்லும் போது எங்கேயும் நிற்கக்கூடாது. யாரிடமும் பேசக்கூடாது, அதை மீறி தவறு நடந்தால் மருந்தின் பலம் முறிந்துவிடும் என்றாள்.

அதெல்லாம் ஒன்றும் இல்லை. இந்த வைத்தியத்தை வேறு யாரும் தெரிந்து கொள்ளக்கூடாது என்பது தான் காரணம். பரம்பரை பரம்பரையாக தொடர வேண்டும் என்பது தான் இலக்கு என்றான் கசமாடன். நீ பேரனாக இருந்தால் உனக்கு சொல்லி இருப்பார் என்றான்.

இந்த விசயத்தை பூங்கொடியால் நம்ப முடியவில்லை. தாத்தாவைப் பற்றி தவறாக சொல்கிறான் என்றே நினைத்துக் கொண்டாள். காதலில் விரிசல் எதுவும் விழவில்லை.

சில வாரங்களில் பாறாங்கல் விழுந்தது. இவர்கள் காதல் விவகாரம் சிங்கப்பல் சித்தரின் காதுகளை எட்டியது.

சிங்கப்பல் சித்தர் நேரடியாக கசமாடனை கூப்பிட்டு எச்சரித்து அனுப்பினார். இளைஞனான கசமாடனால் பூங்கொடியை பிரிந்து இருக்க முடியவில்லை. அவள் தாத்தா மிரட்டியதைப் பற்றி எதுவும் அவளிடம் சொல்லாமல் காதல் வளர்த்தான்.

சிங்கப்பல் சித்தரின் கோபம் உச்சமடைந்து, சதி வேலையில் இறங்கினார். கசமாடன் ஓடைக்காவலில் இருந்தான். அவனுடன் பணிபுரியும் ஒருவன் கொடுக்காபுளி கொண்டு வந்து கொடுத்தான்.

கொடுக்காபுளி என்றால் கசமாடனுக்கு ரொம்ப பிடிக்கும். சாப்பிட்ட சற்று நேரத்தில் கண்கள் விழித்த நிலையில் நினைவிழந்து போனான்.

சிங்கப்பல் சித்தர் செயலில் இறங்கினார். கொஞ்சம் இலைகளோடு நிறையப் புழுக்களை ஓடை நீரில் விட்டார். சல்லடையை தாண்டிப் போக செய்தார்.

குளிக்க வந்த மன்னருக்கு இலை மிதப்பது ஆச்சரியமாக பட்டாலும் குளத்தில் இறங்கினார். ஆனந்த குளியல் போட்டு நிமிரும் போது அவரது தோளில் ஒரு புழு ஏறியது. தண்ணீரில் தப்ப நினைந்த புழு மன்னரின் மூக்கின் மீது நின்றது.

உதறிவிட்டு படித்துறையில் ஏறிக் கத்தினார் மன்னர். நிறைய வீரர்கள் கூடினர், தளபதியும். நிலைமையை உணர்ந்த தளபதி, ஓடைக்காவலில் இருந்தவனை என்ன செய்ய மன்னா என்றார்.

மன்னர் ஏதாவது செய்து தொலை என்று கையை மட்டும் அசைத்து கோபமாக உள்ளே சென்றார்.

கசமாடனுக்கு நினைவு திரும்பிய போது தளபதியுடன் பத்து பதினைந்து வீரர்கள் அவன் முன்னே நின்றனர். என்ன நடந்தது என யோசிக்கும் முன், கசமாடன் தலை மட்டும் தரை தொட்டது.

சிறியதாக நின்ற மரக்கன்றில் ரத்தம் தெறித்தது. கசமாடன், மரணம் பூங்கொடியை பாதித்தது. பித்து பிடித்தவள் போல் இருந்தாள். கசமாடன் மரணத்திற்கு தான் தாத்தா காரணம் என்று தெரிந்து கொண்ட பூங்குழலி தாத்தாவைக் கொல்ல சாப்பாட்டில் நஞ்சு கலந்தாள்.

வாசனையில் தெரிந்து கொண்ட சிங்கப்பல் சித்தர், நீ வளர்ந்து விட்டாய், உனக்கு கல்யாணம் முடிக்க ஏற்பாடு செய்கிறேன் என சிரித்து கொண்டே கண்டித்தார்.

தாத்தாவை ஒன்றும் செய்ய முடியாது என்பதை உணர்ந்த பூங்கொடி நஞ்சை அவளே சாப்பிட்டு கசமாடன் ரத்தம் தெரிந்திருந்த மரக்கன்றின் பக்கத்தில் உயிரைக் துறந்தாள்.

Saturday, 10 August 2024

ககக -3

காலையிலே வெயில் சுட்டெரிக்க துவங்கிவிட்டது. கபில் சர்மா அலுவலகம் நோக்கி விரைந்து கொண்டு இருந்தார். கபில் சர்மா ஐஏஎஸ் அதிகாரி தமிழ்நாட்டில் தான் பணி. சில பதவிகளுக்குப் பிறகு இப்போது கைத்தறி துறையில்.

கபில் சர்மா ஹரியானா மாவட்ட கிராமத்தில் பிறந்தவன். சின்ன வயதில் இருந்தே கிராமங்களை நேசிப்பவன். பள்ளி ஆசிரியர் தான் ஐஏஎஸ் படிப்பை பற்றி விளக்கி சொன்னார். அது முதலே ஐஏஎஸ் மேல் வேட்கை கபிலுக்கு.

களத்தில் நின்று வேலை செய்வது கபில் சர்மாவுக்கு பிடிக்கும். அதனால் எந்தத் துறையில் பிரச்சினை இருக்கிறதோ அங்கெல்லாம் கபிலுக்கு பதவி வந்தது. ஐஏஎஸ் தேர்வானதும் விருப்ப மாநிலமாக கேட்ட தமிழ்நாட்டிலே போஸ்டிங்.

நான்கு ஆண்டுகளாக தமிழ் நாட்டில் இருப்பதால் தமிழ் நன்றாக புரியும், பேசவும் தெரியும். ஆனால் சரளமாக பேசத் தெரியாது கபில் சர்மாவுக்கு. கபில் சர்மா தமிழ்நாட்டை தேர்வு செய்ய காரணம் அவரது நண்பர் பல்விந்தர் சிங். அவரும் ஐஏஎஸ் ஆபிசர் தான்.

கபிலுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. கல்லூரி காதல் நினைவுகள் இன்னும் மனதில் இருப்பதால் திருமணத்தில் விருப்பம் இல்லை.

கல்லூரி காலத்தில் எப்போது காதல் மலர்ந்தது என்று குறிப்பிட்டு சொல்ல முடியாது. எல்லா பெண்களிடமும் பேசுவது போல் தான் ரஞ்சிதாவிடமும் பேசினான் கபில்.

நாட்கள் செல்லச் செல்ல ரஞ்சிதாவிடம் மட்டும் நெருக்கம் கூடியது. மசாலா சாய் மற்றும் கச்சூரி இருவருக்குமே பிடிக்கும். ஃபனா படமும், ஏஆர் ரஹ்மான் இசையும் கூட. ஒரு மாலையில் மசாலா சாய் குடித்துக் கொண்டிருக்கும் போது தயக்கத்துடன் காதலை சொன்னான் கபில். ரஞ்சிதாவிடமும் காதல் இருந்தது. உடனே சம்மதம் சொல்ல இருவர் ஒருவராகினர்.

இருசக்கர வாகனத்தில் இலக்கில்லாமல் பயணிப்பது தான் அவர்களின் பொழுதுபோக்கு.

ரஞ்சிதாவுடன் இருசக்கர வாகனத்தில் மணாலி சென்றது மறக்க முடியாத நாட்கள் கபிலுக்கு. பானிபட்டில் இருந்து புறப்பட்டு நடுவில் ஓரிடத்தில் அறை எடுத்து தங்கி மீண்டும் காலையில் கிளம்பி மணாலி சென்றனர். இருவருக்கும் பயணம் இனிமையாக அமைந்தது.

அடுத்ததாக சிரபுஞ்சி செல்ல நினைத்த வேளையில் முதல் மன கசப்பு ஏற்பட்டது. அன்று தான் ரஞ்சிதாவின் வீட்டிற்கு வருவதாக சொன்னான் கபில். காலையில் இரு சக்கர வாகனத்தில் கிளம்பியும் விட்டான்.

நெடுஞ்சாலையில் ஒரு விபத்தை பார்த்தான். காயம்பட்டவர்களை மீட்டு ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்று ரத்தமும் கொடுத்தான். ஆனால் கபில் செய்த ஒரே பிழை, போன் செய்து ரஞ்சிதாவிடம் சொல்லாமல் விட்டது. காத்திருந்த ரஞ்சிதாவின் அப்பா கடுப்பாகி விட்டார்.

அடுத்த முறை ரஞ்சிதா வெளியூர் செல்லும் போது ரயில் நிலையத்திற்கு வருவதாக சொல்லி இருந்தான் கபில். ரஞ்சிதா ரயில் நிலையத்தில் காத்திருக்க, தண்ணீர் பிரச்சினை பேரணியில் இணைந்தவன் மறந்தே விட்டான். ரஞ்சிதா ரயில் மட்டும் ஏறவில்லை. மனதை விட்டே எறிந்து விட்டாள் கபிலை.

பழைய டைரியை புரட்டினார் கபில் சர்மா.

பிரியசகி,

தடதடத்து செல்லும் ரயிலில் 

பயணிக்கிறாய் !

என் மனம் வெடவெடத்து 

போய் இருக்கிறது !

தோழியாய் நீ அருகில் 

நின்றால் என் பிரச்சினைகள் 

விலகிவிடும் !

சமூக பிரச்சினைக்காக

நான் சென்ற நாளில்

நீயே என்னை விட்டு 

விலகி விட்டாய் !

என் மன தோட்டத்தில்

என்றும் வாடா மலர் நீ !!!

கனத்த இதயத்தோடு இருந்த கபிலுக்கு பேக்ஸ் வந்தது. பணி மாற்ற ஆணை. திருநெல்வேலி மாவட்ட ஆட்சியராக கபில் சர்மா நியமனம்.


Saturday, 3 August 2024

ககக -2

மத்தியானம் 3 மணிக்கே இருட்டிக் கொண்டு வந்தது. கோடை மழை கொட்டி தீர்க்குமே, அதற்குள் காய வைத்த துணிகளை எடுக்க வேண்டும் என நினைத்தவாறு நடையில் வேகத்தை கூட்டினான் கந்தமாறன்.

கிராமத்தை அடைவதற்குள் மழை ஆரம்பித்து விட்டது. மாமா மாயாண்டி துணிகளை நனைவதற்குள் எடுத்து குடிசையில் வைத்திருந்தார்.

கந்தமாறன் சலவைத் தொழிலாளி. அப்பாவிற்கு பிறகு பரம்பரை தொழிலாக அவனுடன் வருகிறது. அப்பாவின் மறைவிற்குப் பிறகு மாமா தான் அவனுக்கு ஒரே சொந்தம்.

பாளைய நல்லூர் அவனது கிராமம். செழிப்பான கிராமம். கிராமத்தில் ஒரே சலவைத் தொழிலாளி அவன் தான். பாளைய நல்லூரில் பெரிய ஏரி உண்டு. எப்போதும் தண்ணீர் இருக்கும். சலவைக்கு கார மண் கிடைக்கும். ஏரிக்கு பக்கத்தில் சிறிய சிறிய பாறைகள், அதில் வசதியாக துணிகளை காய வைத்து கொள்வான்.

ஏரிக்கு வடக்கே பரந்து விரிந்த இரண்டு மரங்கள் உண்டு. மரத்தடி ஓய்வு எடுக்க சிறப்பான இடம். ஒரு மரத்தில் கிழக்கு நோக்கி மாடன் இருப்பதாகவும் இன்னொரு மரத்தில் வடக்கு நோக்கி அம்மன் இருப்பதாகவும் சொல்வார்கள்.

ஊர்காரர்கள் யாராவது, எப்பவாவது வந்து சேவல் பலியிட்டு செல்வார்கள்.

கிராமத்தில் அவனுக்கு பெரிய வேலை கிடையாது. கல்யாணம், சடங்கு என்றால் சேலை துவைக்கும் வேலை வரும். 

இறப்பு சடங்குகளில் கந்தமாறனின் பங்கு முக்கியமானது. பழைய சேலைகளை கொண்டு சென்று சுற்றி வைப்பது. மலர் அலங்காரம் செய்வது என்பது அவனது வேலை.

நகரத்தில் இருப்பவர்கள் சலவைக்கு இவனிடம் தான் தருவார்கள். குறிப்பாக வெள்ளைக்காரர்கள், வெள்ளைக்காரர்களிடம் வேலை பார்ப்பவர்கள். அதற்காக 20 மைல் நடந்து சென்று துணி வாங்கி வந்து துவைத்து, வெள்ளாவியில் வைத்து வெளுத்து கொடுப்பான்.

கந்தமாறனுக்கு சலவைத் தொழில் பகுதி நேர தொழில் என்றே சொல்லலாம். அவன் முழுமூச்சாக ஈடுபடுவது சுதந்திர போரட்டத்தில். படிக்க தெரியாது. பத்திரிகைகளை யாரையாவது வாசிக்க சொல்லி கேட்டுக் கொள்வான்.

வெள்ளைகாரர்களுக்கு துணி துவைத்து கொடுத்தாலும் வெள்ளைக்காரர்களை பிடிக்காது. ஆனால் அவர்களுக்கு இவனை பிடித்து இருந்தது. காரணம் அவன் தொழில் நேர்த்தி. வெள்ளைக்காரர்கள் தரும் பணத்தை நகரத்து செட்டியாரிடம் தான் கொடுத்து வைத்துள்ளான்.

சுதந்திர போராட்ட கூட்டம், நாடகம் என எங்கு நடந்தாலும் சென்று விடுவான். எங்கு நடக்கிறது என்ற அறிவிப்பை ஊர் ஊராக கொண்டு செல்பவனே கந்தமாறன் தான். தடை செய்யப்பட்ட பத்திரிகைகளை கூட எல்லா ஊர்களுக்கு கொண்டு சேர்ப்பவன்.

மாயாண்டிக்கு, கந்தமாறனை மிகவும் பிடிக்கும். அவனது தொழில் நேர்த்தி, உழைப்பு எல்லாம் அவருக்கு பிடிக்கும். சுதந்திர போராட்ட செயல்கள் மட்டுமே அவருக்கு பிடிக்காது. அவரது மகளை கந்தமாறனுக்கு மணமுடிக்க தடையாக இருப்பதும் அது தான்.

வெளுத்த துணிகளை எடுத்துக் கொண்டு டவுனுக்கு சென்றான். வெள்ளையர்கள் மாளிகையில் அவர்களது துணிகளை ஒப்படைத்தான். அப்போது ஒரு வெள்ளையன், வேலைகாரனிடம் கந்தமாறனை சாப்பிடுகிறானா என கேட்க சொன்னான். 

கந்தமாறனும் காலையில் சாப்பிடவில்லை ஓரமாக உட்கார்ந்தான். இட்லியா ரொட்டியா எனக் கேட்டார்கள். இட்லி என்றான். இட்லி சாப்பிட தந்தார்கள். சாப்பிடும் போது தூரத்தில் சாப்பிட்டு கொண்டிருந்த வெள்ளையனை பார்த்து மனதுக்குள் சொல்லி கொண்டான். உங்களை எல்லாம் நாட்டை விட்டு துரத்தி சுதந்திர காற்றை சுவாசிப்போம் என.

அழுக்கு துணிகளை வாங்கி கிளம்பினான். செட்டியாரை போய் பார்த்தேன். அவன் கொடுத்து வைத்த காசில் இரண்டு தங்க வளையல்கள் தயாரித்து இருப்பதாக சொன்னார். இன்னொரு நாள் வாங்கி கொள்வதாக சொன்னான்.

அடுத்ததாக கந்தமாறன் சென்றது, கிருஷ்ணமூர்த்தியை பார்க்க. கிருஷ்ணமூர்த்தி 40 வயதை தாண்டிய சுதந்திர போராட்டக்காரர். கந்தமாறன் போன்ற இளைஞர்களை திரட்டுபவர். மதுரையில் சுதேசி கப்பல் விடுவதற்கு வ.உ.சி நிதி திரட்டும் கூட்டம் நடத்துவதாக சொன்னார் கிருஷ்ணமூர்த்தி. அதற்கான நோட்டீஸ்களை கொடுத்து விநியோகிக்க சொன்னார். அதை வாங்கி கொண்டான் கந்தமாறன்.

மதிய வேளையில் இந்திய அதிகாரி ஒருவர் வீட்டிற்கு துணி எடுக்க சென்றான். அதிகாரி மனைவி சாப்பிட கூப்பிட்டாள். புறக்கடையில் உட்கார சொல்லி பிஞ்ச இலையில் பழைய சோறை கொட்டினாள். புளித்தது, கந்தமாறனுக்கு புதியது அல்ல.

செட்டியாரிடம் வளையலை வாங்கினான். மஞ்சள் பையில் வைத்து கொடுத்தார். கிருஷ்ணமூர்த்தியிடம் வளையலை கொடுத்து சுதேசி இயக்கத்திற்கு எனது பங்கு என்றான். நான் வைத்திருக்கிறேன். நீ மதுரை கூட்டத்திற்கு வந்து தலைவரிடம் கொடு என்றார் கிருஷ்ணமூர்த்தி. திருநெல்வேலியில் இருந்து பலரும் மதுரைக்கு ரயிலில் செல்வோம் என்றார். தலையசைத்து கிளம்பினான்.

மதுரை கூட்ட மேடையில், நிகழ்ச்சி தலைவர் ஒரு கையில் கந்த மாறனையும் இன்னொரு கையில் தங்க வளையலை தூக்கி காட்டினார். மகிழ்ச்சி கரை புரண்டு ஓடியது கந்தமாறனுக்கு.

மதுரையில் இருந்து வந்தவன் மாமாவை பார்க்க சென்றான். மாமா மகளிடம் சொன்னான் உனக்கு வாங்கிய வளையலை சுதந்திர போரட்டத்திற்கு கொடுத்து விட்டேன் என்று.

அவளும் புன்முறுவல் பூத்தாள். நீ தாம்மா இவனை கல்யாணம் பண்ணி திருத்தனும் என்றார் மாயாண்டி. மாமா, கூடிய விரைவில் சுதந்திர நாடு என்றான் கந்தமாறன்.